சென்னையில் ஜூலை 7-ம் தேதி 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை7-ம் தேதி தொடங்கி, 3 நாட்கள்நடைபெற உள்ளது. இதில்200-க்கும் மேற்பட்ட தமிழ்அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

முதல்வரிடம் அனுமதி: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11-வது உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7முதல் 9-ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கிவைக்க தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப்பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழிபெயர்ப்பியல், மொழி யியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE