காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறதே | சோளிங்கர் ‘ரோப் கார்’ பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

By ப.தாமோதரன்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைமேல் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய ஆயிரத்து 305 படிகளை கடந்துதான் பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு அமிர்த வள்ளி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெரியமலைக்கு எதிரே சிறிய மலையின் மீது யோக ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. உற்சவரான பக்தோசித பெருமாள் மலையின் அடி வாரத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார். மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மரை உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் பாதிப்புள்ளவர்கள் படிக்கட்டு வழியாக சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வது கடினமானது. இவர்களை டோலி தொழிலாளர்கள் கட்டணம் பெற்று சுமந்து செல்கின்றனர்.

இதுபோன்ற வயதானவர்கள் உட்பட படிக்கட்டுகளை ஏற முடியாத பக்தர்களுக்கு என ‘ரோப் கார்’ (கம்பி வட ஊர்தி) வசதி அமைக்க வேண்டுமென பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு ‘ரோப் கார்’ அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயிலுக்கு ‘ரோப் கார்’ மூலமாக பயணிக்க வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறை, மலை உச்சியில் 15 படிக்கட்டுகளை கடக்க லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்த பணிகள் முழுமையடைந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதுகுறித்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் நிர்வாகத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சி. கோபால் கூறும்போது, "நான் 1977-87 ஆம் ஆண்டு வரை அறங்காவர் குழுத் தலைவராக இருந்தபோது இத்திட்டம் குறித்து அரசுக்கு வலியுறுத்தி வந்தேன்.

பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு வரும் காத்திருப்பு அறைகளுக்கான கட்டிடம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2006-ம் ஆண்டு ‘ரோப் கார்’ அமைப்பதற்காக சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ‘ரோப் கார்’ பணிகள் தொடங்கியது. இது ஒரு நல்ல திட்டம். கோயிலுக்கும் அரசுக்கும் வருவாய் ஈட்டித்தரும் திட்டமாகும். இத்திட்டத்தை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்"என்றார்.

இதுகுறித்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், "2010-ம் ஆண்டு திமுக அரசு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.9 கோடியாகும். கோயிலில் இருந்து ‘ரோப் கார்’ தொடங்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ‘ரோப் கார்’ பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 8 ரோப் கார்கள் உள்ளன.

ஒருபுறம் மலைக்கு மேலே செல்லவும், மற்றொருபுறம் கீழே இறங்கவும் தலா 4 ‘ரோப் கார்’கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு காரில் 4 பேர் வீதம் ஒரே சமயத்தில் 32 பேர் பயணிக்கலாம்.

தற்போது, இதில் பயணம் செய்ய வரும் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, உணவகம், கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கூடிய கட்டிடம் ரூ.11 கோடி மதிப்பில் நன்கொடையாளர்கள் மூலமாக மேற்கொள்ளும் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. ‘ரோப் கார்’ மூலம் பயணித்து மலை உச்சியில் செல்லும் பக்தர்கள் அங்கிருந்து 10 முதல் 15 படிக்கட்டுகள் நடந்துச் செல்ல வேண்டும்.

இதுவும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என, அந்த படிக்கட்டுகளை கடக்க லிப்ட் அமைக்கும்பணிகள் நன்கொடையாளர்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். இந்த பணிகள் முடிந்ததும், ரோப் காரில் சோதனை ஓட்டப்பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE