தருமபுரி | அரசு அலுவலகத்தில் நுழைந்த ராட்சத உடும்பு - வனத்துறையினர் மீட்டனர்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தஞ்சமடைந்த ராட்சத உடும்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் கணிசமான அளவு நிலப்பரப்பு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, காட்டெருமை போன்ற பெரியவகை விலங்குகள் தொடங்கி, சிறுத்தை, நரி, கரடி, செந்நாய், மான், கடமான், காட்டுப்பன்றி, குரங்கு, முயல், மலைப்பாம்பு, உடும்பு, எறும்புத் திண்ணி, பச்சோந்தி, மயில் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றன. இவைகளில் சில உயிரினங்கள் சில நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்கள் அல்லது கிராமங்களில் நுழைவதுண்டு. இவ்வாறு வெளியேறும் விலங்கினங்கள் வனத்துறையினரின் நடவடிக்கையால் மீண்டும் வனப்பகுதிக்கே பிடித்துச் செல்லப்படும்.

அந்த வரிசையில், நேற்று (வெள்ளி) தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு கலைக் கல்லூரி வளாகத்தையொட்டி அமைந்துள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உடும்பு ஒன்று தஞ்சமடைந்திருந்தது. சுமார் 5 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான இந்த உடும்பு அந்த அலுவலக வளாகத்தில் கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் படுத்துக் கிடந்தது. இதைக் கண்ட பணியாளர்கள் முதலையாக இருக்கலாம் என அச்சமடைந்தனர்.

நெருங்கிச் சென்று பார்த்தபிறகே அது உடும்பு என தெரிய வந்தது. அதன் பின்னர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனவர்கள் முனியப்பன், நாகேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று பாம்புகளை பிடிக்கப் பயன்படுத்தும் பிரத்தியேக உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த உடும்பைப் பிடித்தனர். பின்னர், வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி உடும்பு தருமபுரி அருகே காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE