வாழ்வு இனிது

பெண்கள் பந்திக்குப் பாயசம் கிடைக்குமா? | பாற்கடல் 14

கலாப்ரியா

வீட்டில் ஒரு மங்கல நிகழ்வு என்று வந்துவிட்டால் மேலும் அதிகப் படியான வேலைகள் பெண்கள் தலையில்தான் விடியும். குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் தொடங்கி, பெண் குழந்தைகள் எனில் பூப்பெய்தியது தொடங்கி, சடங்கு நடத்தி, மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் உறுதிசெய்து, நிச்சயதாம்பூலம் நடத்தி, திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டு, திருமணம் நடத்தி என்று வரிசையாக ஒவ்வொரு நன்னிகழ்விலும் பெண்களின் பங்குதான் அதிகம். அதிலும் அந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம்.

அப்போது கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் கிடையாது. ஆண்கள் அலைந்து திரிந்து கடைகளுக்குப் போய்ச் சாமான்களுக்கு லிஸ்ட் கொடுத்து வருவார்கள். வாங்கினவற்றைப் பத்திரப்படுத்தி, தவசுப்பிள்ளையோ சாஸ்திரிகளோ கேட்கும் போது, பொருள்களைச் சிக்கனமாக எடுத்துத் தந்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வதும் பெண்கள் பொறுப்பே.

சடங்குகளும் அவர்களுக்குத்தான் நன்கு அறிமுகம். மணவறையில் கிழக்கே பார்த்து உட்கார வேண்டும் என்றால், மாப்பிள்ளைக்கோ மாம னாருக்கோ திசைகூடத் தெரியாது. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், மணமேடையில் `சட்சரம்’ (சாப்பாடு) பரிமாறுதல், சாந்தி முகூர்த்தம் அனைத்திற்கும் பெண்களே முன்னிற்க வேண்டும்.

திருமணங்கள் எல்லாம் மணமேடை போட்டு வீட்டு முற்றத்தில் தான் நடக்கும். அதற்காகவே பெரிய முற்றம் வைத்து வீடுகள் கட்டியிருப்பார்கள். அடுத்தடுத்த வீடுகளின் முற்றங்களைச் சேர்த்துக் கொள்ள, வரிசையாக உள்ள இரண்டு வீடுகளுக்கு இடையே பொய்ச் சுவர் என்கிற சுடாத செங்கல் வைத்தே கட்டியிருப்பார்கள். அதை எளிதில் நீக்கி விட்டு மறுபடி கட்டிக்கொள்ளலாம்.

அதேபோல் சாப்பாட்டுப் பந்தியும் வீடுகளில்தான் நடக்கும். பெரிய கல்யாணம் என்றால் நாலைந்து வீடுகளைக்கூட இணைத்துக் கொள்வார்கள். அப்படி நீண்டு கிடக்கும் முற்றங்களில் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு, கொண்டாட்டமாக விளையாடுவார்கள்.

அவ்வளவு சிரமங்கள் மேற்கொண்டு சிறப்பாகத் திருமணம் நடத்தினால், அந்தப் பெண்கள் சாப்பிடுவது ஆண்கள் சாப்பிட்ட பிறகே நடக்கும் பெண்கள் பந்தியில். பெண்கள் பந்தி எப்போதும் பிந்தியே நடக்கும். இப்போது போல ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பந்திகள் எல்லாம் அப்போது கிடையாது.

பந்தியெல்லாம் பந்திப் பாய் விரித்து தரையில் அமர்ந்துதான் நடக்கும். அதற்கென்று பிரத்யேகமாகத் தயார் செய்த பாய்கள் உண்டு. பெண்கள் பந்தி ஆரம்பிக்கும் வரை பெண்கள் தனியே அமர்ந்து ஊர்க்கதைகள், உறவுக்கதைகள் எல்லாம் பேசி முடிக்க வேண்டும். பெண்கள் பந்திக்கு முன் எல்லா ஆண்களும் சாப்பிட்டுவிட்டார்களா என்று ஒவ்வொருவராக விசாரிப்பார்கள்.

சிலர் காலைச் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டுப் பசி வராமல் ஓரமாக உட்கார்ந்து, வேலை செய்யும் பெண்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பக்கம் போய், “அண்ணாச்சி, சாப்பிட்டாச்சா, என்ன செய்யறீங்க? உங்க வீட்டு மதினிக்கென்ன கிளி மாதிரி இருக்காகளே, அவுக அங்க உக்காந்து உங்களையேதான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்காக” என்று பொறுப்பான வாலிபப் பசங்க கேலியாகக் கேட்பார்கள். அப்படி உறவுக்கார வாலிபப் பசங்கதான் பரிமாறும் வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டும் செய் வார்கள்.

அதற்கெல்லாம் தனியே கூலிக்கு ஆள் கிடையாது. ‘நான் உன் வீட்டு விசேஷத்தில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்தால், நீ என் வீட்டு நிகழ்ச்சியில் உதவ வேண்டும்’ என்பது எழுதப்படாத உறவுச் சட்டம். அண்ணாச்சியிடம் வம்பிழுத்த அதே கையோடு போய் அந்த மதினியிடம், “மதினி, உங்க வீட்டு அண்ணாச்சி பண்ணுகிற காரியத்தைப் பார்த்தீங்களா? நீங்க பட்டினியா உக்காந்து கால் வலிக்கு நீவிக்கிட்டு இருக்கீங்க, அவுக அரட்டையடிச்சிக்கிட்டு இருக்காக” என்பான்.

“ஆமா நாளைக்கு நீயும் அப்படித்தான் வருவே. `எரிகிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ எல்லாம் சுடத்தான் செய்யும். ஆமா, நீ இன்னும் கல்யாணமே பண்ணலியாமே, உங்க அத்தை மக சொல்லுதா, அவளையே நினைச்சிக் கிட்டு இருக்கியா? அவ அந்தா கல்யாணம் ஆகி புள்ளையோட வந்திருக்கா பார்த்தியா, நான் ஒரு கூறுகெட்டவ நீ அவளைப் பார்க்கத்தானே நைசா இந்தப் பக்கம் வந்திருக்கே” என்பார்.

“சேச்சே நேரமாயிட்டே, பொம்ப ளைங்க முதல் பந்தி ஆரம்பிச்சாச்சு, நீங்க சாப்பிடலையேன்னு கரிசனமா கேக்க வந்தா என்னையே கிண்டல் பண்ணுதீங்க, நல்லதுக்குக் கால மில்லை” என்பான். “சரிசரி, நீ யோக்கியந்தான், கசகசன்னு இந்தப் பட்டுச் சேலையைக் கட்டிக்கிட்டு அலைய முடியலை. அதை மாத்திட்டு நூல்சேலை கட்டிக்கிட்டு வாரேன். கொஞ்சம் ஒதுங்கிக்க உன் அத்தை மகள்தான் ஒரு உடுமாத்துச் சேலை கொடுத்தா, அவளைக் கூட்டிக்கொண்டு பந்திக்குப் போ, பசி காதை அடைக்குது.

வேலை பாக்கறது எல்லாம் பொம்பளைங்க, பந்திக்கு முந்து படைக்குப் பிந்துன்னு முதல்ல திங்க உக்கார்றது ஆம்பளைங்க” என்று சடைப்பதுபோல் சொல்லிக் கொண்டு ஓரமாகப் போவார். அங்கே யாராவது ஒளிந்து விளையாடும் பையன்கள் ஒதுங்கி இருந்தால், “ஏல, கரி முடிவானுவளா உங்களுக்கு இங்கே என்னலே சோலி? நாலு பொம்பளைக தனியா உக்காந்து சடவார விடுதானுகளா” என்று விரட்டுவார் மதினி.

அதற்குள் அத்தை மகள், “இந்தாங்க அத்தானோவ், இவனைக் கொஞ்சம் வச்சிக்கிடுங்க, சாப்பிட்டுட்டு வாங்கிக்கிடுதேன்” என்று குழந்தையைத் தருவாள். குழந்தை தாவி வரும். “நீயாவது வாடே, உங்க ஆத்தாதான் ஏமாத்திட்டா” என்று முனகிவிட்டு, “சரி, நீ போய்ச் சாப்பிடு.

போன பந்திக்கே, பலாப்பழம் பூந்தியெல்லாம் காலியாய்ட்டு, இப்ப பாயசம் தட்டிப் போயிரும் (காலியாகி விடும்)” என்பான். “ஆமா, சும்மா இருங்க, நான் உங்களை மறக்கணும்னு உங்களுக் குப் புடிச்ச இனிப்புச் சாப்பிடறதையே நிப்பாட்டி வருஷம் ரெண்டாச்சு.

அதுக்கே இப்ப என்ன கொள்ளை வந்துட்டுன்னு இனிப்புச் சாப்பிட மாட்டேங்கேன்னு இவனோட அப்பா ஏசுதாக, காணாததுக்கு, புள்ளை உன் ஜாடையிலும் இல்லை எம்மவன் ஜாடையிலும் இல்லை யாரை நினைச்சுக்கிட்டு இவனைப் பெத்தியோன்னு மாமியாக்காரி திட்டுதா, எனக்குத்தான் மழை விட்டும் தூவானம் விடலைன்னு ஆயிரம் நொம்பலம்.” பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு சாப்பிட நகர்வாள்.

குழந்தையையும் பழம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கல்யாணச் சந்தடிக்குள் நகரும் ஏமாந்துபோன வாலிப உள்ளம் ஒன்று. சந்தோஷமான கல்யாணக் கொண்டாட்டங்கள் நடுவே இப்படி ஊமைக்கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் சில காதல் கதைகள்.

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT