வாழ்வு இனிது

விளையாட்டும் விருந்தும் | பாற்கடல் 9

கலாப்ரியா

‘உங்க வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்காங்கடே’ என்று விளையாட்டுக்கு நடுவே யாராவது சொல்வார்கள். விளையாட்டுக்கு ‘ரெஸ்ட்’ சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடுவோம். பாதி விளையாட்டில் ‘ரெஸ்ட்’ அல்லது `தூரி’ சொல்லிவிட்டுப் போவதற்குப் பல விதிகள் உண்டு.

தொட்டுப்பிடித்து விளையாட்டு என்றால் முதல் விதி நாம் தொட்டு வருபவராக இருக்கக் கூடாது. பம்பரக்குத்து என்றால் நம் பம்பரம் வட்டத்துக்குள் இருப்பவராக, கோலிக்காய் விளையாட்டு என்றால் கோலிக்காய் `பேந்தா’ கட்டத்துக்குள்ளே இருக்கக் கூடாது. அப்படியே தூரி சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், தோற்றுப் போனால் என்ன பந்தயம் அல்லது தண்டனை என்று பேசினோமோ அதை அப்போதே செய்துவிட்டுப் போக வேண்டும்.

கோலிக்காய் விளையாட்டென்றால் `பியூரிட்டி’ போட வேண்டும். பியூரிட்டி என்றால், நம் கோலிக்காயை விளையாட்டின் மற்ற நபர்கள் ஒவ்வொருவராகத் தம் கோலிக் காயால் குறி பார்த்து வேகமாக அடிப்பார்கள். அப்போது விரல் களைக் குவித்து வைத்துக்கொண்டு தடுக்கலாம்.

ஆனால், அடிக்கிற வேகத்தில் மொளி பிய்ந்துவிடும். அப்படித் தடுத்த இடத்திலிருந்து மொளியாலேயே உருட்டி `பேந்தா’ கட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும். பேந்தா கட்டம் என்பது விளையாடும் மைதா னத்தின் ஓர் ஓரமாக அரையடிக்குக் காலடியில் கீறப்பட்ட ஒரு கட்டம்.

முதலில் அதற்குள்தான் காய்களை வைத்து விளை யாட்டை ஆரம்பிக்க வேண்டும். பேந்தா என்பது நான்கு விரற்கடை அளவு. விளையாட்டின் போது இரண்டு கோலிகளுக்கு இடையில் நான்கு விரற் கடை அளவு இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் `பேந்தா’ என்று கூச்சல் போடுவார்கள். கோலியைக் கட்டத்துக்குள் வைத்துவிட வேண்டும். பேந்தா என்று கத்துவதே சந்தோஷமாக இருக் கும். கை, கால், மேலெல்லாம் மண் ஒட்டிக்கொண்டு நிஜமான மண்ணின் மைந்தர்களாக ஆகிவிடுவார்கள்.

பம்பர விளையாட்டென்றால் பந்தயம், `ஆக்கர்’ அல்லது `ஆக்கு’ வைத்தல். அதாவது தோற்றவன் அல்லது ஆட்டத்தை விட்டு விலகு பவன் பம்பரத்தில் மற்ற வர்களின் பம்பரத்தால் குத்துவது. எத்தனை ஆக்கு என்று பேசுகிறோமோ அத்தனை குத்துகள். ஆக்கர் வாங்குவதற் கென்றே தனியாக பம்பரம் வைத்திருப்பார்கள். சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பல்லைக் கடித்துக்கொண்டு நச் நச்சென்று ஆக்கர் வைக்கும்போது மனதில் உள்ள பழைய சினமெல் லாம் கைக்கு வந்துவிடும். சுற்றி நிற்பவர்கள் `நல்லாக் குத்துலே’ என்று தங்கள் கோபத்தைச் சேர்த்துச் சொல்வார்கள். குச்சிக் கம்பு அல்லது கிட்டிப்புள் விளையாட்டில் ‘கவுண்டி’.

விருந்தாள் வருகிறார்க ளென்றால், அவர்கள் வாங்கி வருகிற தின்பண்டத் திற்குத்தான் முக்கியத்துவம். சிலர் குழந்தை களிடம் நேரடியாகத் தருவதற்காகக் காத்திருப்பார்கள். சிலர் `அவசரத்தில் ஒன்றும் வாங்காமல் வந்துவிட்டேன் இந்தாடே காசு வச்சுக்க’ என்று நாலணாவோ எட்டணாவோ (ஐம்பது காசு) தரு வார்கள்.

அது பண்டத்தைவிட சந்தோஷம் தருவது. ஐம்பது காசென்றால் பெரிய புதையல் போல! பத்துப் பைசா சேர்த்தால் இரண்டு சினிமா பார்த்துவிடலாம். விருந்தினர்கள் முக்கியமான விஷயமாகவோ சுவராசியமாகவோ பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் கவனத்தைக் கவருவது சற்றுச் சிரமமான வேலை. சில வீடுகளில் விருந்தினர் வந்ததும், பெரியவர்கள் வரவேற்பார்கள் என்று சின்னஞ்சிறியவர்கள் சும்மா இருக்கக் கூடாது.

சிறியவர்களும் யார் வந்தாலும் ‘வாங்க’ என்று உடனேயே வரவேற்க வேண்டும். இரண்டொரு நிமிடம் கழிந்துவிட்டால்கூட வரவேற் பதில் ஒரு தயக்கம் வந்துவிடும் என்னும் ரசிகமணி டி.கே.சி. விருந்தோம்பலையும் ரசித்துச் செய்வாராம். ஒரு காலத்தில் உறவினர், விருந்தினர் வருகையால் வீட்டில் நடைபெறும் நன்னிகழ்வு களில் கலகலப்புக் கூடி விடும். திருமண வைபவங்கள் எல்லாம் ஒரு வாரம் வரை நடைபெறும்.

வந்து அரை மணி நேரமே அவர்கள் விருந்தினர்கள். அப்புறம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் குடும்பத்தில் ஒருவர். அண்டை வீட்டினரும் வேலைகளில் கலந்து கொள்வார்கள். எல்லா அண்டை வீட்டுக் கல் உரல்களிலும் மாவு இடிப்பதும், அரைப்பதும், திரிப்பதும் மும்முரமாக நடைபெறும். இப்போது போல கிரைண்டர் எல்லாம் கிடை யாது. அண்டை அயலுக்கே ஒரு வாரத்திற்குப் பந்தி போட்டு விசேஷ வீட்டுச் சாப்பாடுதான்.

குழந்தைகள் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது. வீட்டு முற்றத் தில் `கச்சக்காலடித்து’ ஆர்ப்பாட்டம் போட்டு விளையாடுவார்கள். முற்றத்தில் போடப்பட்டிருக்கும் கொட்டகைப் பந்தலில் நான்கு கால் களை ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு, நடுவில் ‘அகப்பட்டவனை’ நிறுத்திக்கொண்டு, `ஏந்தலைக்கு எண்ணெய் ஊத்து, எருமை மாட்டுக்குப் புல் போடு’ என்று கத்திக் கொண்டு கிளியாந்தட்டு, `வாட் வாட் கலர் இஸ்,’ `ஓம் மண்ணுக்கு வந்தாச்சு உழக்கரிசி திண்ணாச்சு’ எனக் ‘கல்லா மண்ணா’ எல்லாம் விளையாடுவார்கள். நடுவில் அகப்படுபவனை `ஷாட், பூட், த்ரீ’ விளையாடித் தேர்ந்தெடுப்பார்கள்.

கொஞ்சம் இருட்டத் தொடங்கி விட்டால் வீட்டுப் படாசலில் பல்லாங்குழியோ பரமபதமோ தாயக்கட்டமோ சீட்டு விளையாட்டோ தூள்படும். இரவுச் சாப்பாட்டுக்கு வேண்டா விருப்பாகக் கிளம்ப வேண்டும். சாப்பாட்டுக்குப் பின், வீட்டுப் பரண்களில் இருக்கும் பந்திச் சமுக்காளத்தை விரித்துப் படுத்துக் கொண்டோ வட்டமாக அமர்ந்தோ சினிமாவின் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சொல்ல, பெயர் முழுவதையும் கண்டறிய வேண்டும்.

`பா..பு’ என்றால் பாவமன்னிப்பு. `ஆ..ணி’ என்றால் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. இப்போது ஆண்ட்ராய்ட் போன் வந்தபின் உலகம் சுருங்கினது போல் விருந்தினர் தங்குதல்,
விளையாட்டுகள், அழைப்பிதழ்கள் கூடச் சுருங்கிப் போய் அலைபேசிக் குள்ளேயே ஒளிந்துகொண்டுவிட்டன.

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT