அவர் பக்கத்துக் கிராமத்தில் கோயிலில் வேலை பார்க்கிறவர். கோயில் மடைப்பள்ளியில் பிரசாதம் போடுகிற வேலை. அது சின்ன கோயில், ஒரு நேரப் பூசைதான் இருக்கும்போல. காலையில் வேலை முடிந்ததும் கொஞ்சமாக வடை, பஜ்ஜி, போண்டா என்று போட்டுப் பெரிய தாம்பாளத்தில் வைத்து, தாம்பாளத்தைச் சாமிக்கு உடுத்துவது போல பெரிய பரிவட்டம் ஒன்றால் மூடி தலையில் வைத்து எடுத்து வருவார். தாம்பாளம் என்றால் `பெரிய்ய’ தட்டு. டவுன் பஸ்ஸில் வந்து, நான்கு பஜாரிலும் அதை ஒட்டிய நான்கைந்து தெருக்களில் மட்டுமே விற்பார்.
அதற்கே உச்சி வெயிலாகிவிடும். அவரைப் பார்க்கையில் எந்தக் காலத்திலோ பார்த்த கிருஷ்ணலீலா திரைப்படத்தில் தலையில் கிருஷ்ணரை வைத்துக் கொண்டு பெருமழையில் வருகிற வாசுதேவர்போல இருக்கும். ஆள் அத்தனை ஒல்லியாகச் சிறையில் வாடுபவர்போல இருப்பார். நெற்றியில் திருமண் இட்டிருப்பார். அவரின் தாம்பாளம்தான் குடை பிடிக்கிற ஐந்து தலை நாகம். அடிக்கிற வெயில்தான் மழை.
அந்தப் பகலில் அதை வாங்கிக் கொறிக்கவும் பஜாரில் கடைகளிலும் தெருக்களில் வீடுகளிலும் ருசி கண்ட ஆள்கள் இருப்பார்கள். விலையும் ஓட்டல் விலைக்குப் பாதிதான். வடையும் பஜ்ஜியும் ஐந்து ஐந்து பைசாதான். பஜாரில் சத்தம் கொடுக்க மாட்டார். பார்த்தே வாங்கிவிடுவார்கள்.
தெருக்களில் சத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். சில வாடிக்கையான வீடுகளில் அவரே போய் மெதுவாகச் சத்தம் கொடுப்பார். அப்படி வீடுகளில் ஒன்று எங்கள் வீடு. இங்கே வாங்குகிறோமோ இல்லையோ ஒரு செம்புத் தண்ணீர் தந்துவிடுவார் அம்மா. தவறாமல் ஒரு கேள்வியும் கேட்பார். ``இப்படி வெயிலோட போய் விக்கிறீரே பசிச்சா ஒண்ணு ரெண்டு சாப்பிடுவீரா?” ``அப்படிச் சாப்பிட்டா வீட்ல பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்பார். பட்டினி தீர்ந்ததா தெரியவில்லை.
இவர் பலகாரம் விற்கிறவர் என்றால், எவர் சில்வர் பாத்திரங்கள் விற்கிற ஒருவர் நல்ல தீர்க்கமான வட்ட முகம். வெயிலில் அலைந்து கறுத்துப்போன உடல், சுருண்ட முடி. விரலில் அகலமான மோதிரம். அதில் கறுப்புச் சிகப்பில் பறக்கிற கட்சிக் கொடி. அவர் பாத்திரங்களைப் பணத்திற்கு விற்பதைவிட பழைய சேலை, பழைய பாத்திரங்களுக்கு விற்பதையே அதிகம் விரும்புவார்.
பழைய சேலைகளில் பட்டும் சரிகையும் உள்ளவற் றிற்கே அதிக விலை தருவார். சரிகையைச் சுவரில் உரசுவார். நல்ல வெள்ளிச் சரிகையென்றால் சுண்ணாம்புடன் ரசாயன கிரியைச் செய்து கறுப்பாகக் கோடு கீச்சும். அப்போதெல்லாம் எல்லா வீட்டிலும் சுவருக்குச் சுண்ணாம்புதான் அடிப்பார்கள்.
பெயரே வெள்ளை அடிப்பதுதான். இப்போதென்றால் கலர் கலராக எமல்ஷன் அடிக்கிறார்கள் அதிலும் வாஸ்து பார்த்து வர்ணம் பூசுகிறார்கள். காசு பண வரவு மட்டுமல்ல, திருமணங்கள் தகையக்கூடத் தனித்தனி வண்ணங்கள் இருக்கின்றனவாம்.
எவ்வளவு பழைய உருப்படிகள் எடுத்தாலும் அதைத் தன்பெரிய கூடையில் சரியாமல் அடுக்கி, அதற்கு மேல் நன்றாக விரிந்து கொடுக் கும் வலைபோல ஒன்றைப் போட்டு மூடி எடுத்துச் செல்வார். அப்பா, அதற்கே அவரிடம் பாத்திரம் வாங்கலாம் என்பார். அப்பா பயணத்திற்குப் பெட்டியில் பொருள்கள் அடுக்குவதும் அவ்வளவு நறுவிசாக இருக்கும்.
சுருட்டை முடிக்காரர் விற்கிற பாத்திரங்கள் உறுதியாகவும் லட்சண மாகவும் இருக்கும். அவர் ஒரு காந்தம் வைத்திருப்பார். நல்ல எவர்சில்வர் என்றால் காந்தம் ஒட்டாது. அவர் வியாபாரம் முடிந்து போகிற வரை நான் அந்தக் காந்தத்தை வைத்து விளையாட அனுமதிப்பார்.
வீதிகளில், பெரிய மைதானங்களில் நடக்கும் கட்சிக் கூட்டங்களில் முதல் ஆளாக அமர்ந்தி ருப்பார். அப்போதெல்லாம் வானம் பார்த்த தரையில்தான் உட்கார வேண்டும். எவ்வளவோ வருடங்களுக்குப் பின்னர் பார்த்தபோதும் காலம் அவர் தலையிலி ருந்து சுமையை இறக்கவே இல்லை. அவர் தலைச் சுமையாகவே பாத்திரம் விற்றுக்கொண்டிருந்தார்.
அவர் என்றில்லை. அவர் போலத் தலைச்சுமை வியாபாரிகளின் கதை, இதைவிட மோசம். தூத்துக்குடியில் நான் இருந்தபோது. ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் வீடு பெரிய காம்பவுண்ட் ஒன்றிற்குள் இருந்தது. சுமார் பதினைந்து வீடுகள் நெருக்கடியாக இருக்கும்.
நான் போனபோது காம்பவுண்டுக்குள் பலத்த சத்தம். பலரும் சேர்ந்து யாரையோ உண்டு இல்லை என்பது போலச் சத்தம் போட்டு விரட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் போன போது என்னிடமும், யார் என்ன விவரம் என்று குதறிவிட்டார்கள். நல்லவேளை நண்பர் வந்து காப்பாற்றினார்.
அவர்தான் சொன்னார். இந்த காம்பவுண்டிற்குள் தலைச்சுமை வியாபாரிகள் வரவோ பொருள்கள் விற்கவோ கூடாது என்று வாசலில் பெரிய விளம்பரமே பண்ணியிருந்தும் இவர் உள்ளே வந்துவிட்டார். அதுதான் எப்படி அறிவிப்பை மீறலாம் என்று பிடித்துக்கொண்டு விட்டார்கள். ஏற்கெனவே இன்னொரு விதியையும் சேர்த்தே சுமக்கிறார்கள் தலைச்சுமை வியாபாரிகள். அதாவது அவர்கள் கூவி விற்கும்போது நாம் அவர்களைக் கூப்பிடும் குரலே கேட்காது. அவர்கள் குரலில் நம் குரல் அமிழ்ந்துவிடும்.
அதிலும் சிலர் ராகம் போட்டு அனுபவித்துத் தங்கள் பொருள்களை விற்கையில் நாம் கூப்பிடுவதே கேட்காது. அப்படி அவர்களுக்குக் கேட்டு, அவர் சொல்கிற விலைக்கும் நாம் கேட்பதற்கும் இடையில் வியாபாரம் படிந்து பொருளை வாங்குவதென்பதே அபூர்வம். அதிலும் இப்போதைய காலங்களில் ஸ்பீக்கர் வைத்துக் கூவி விற்பதில் நம் குரல் அவர்களுக்கோ அவர்கள் குரல் இஷ்ட தெய்வத்துக்கோ எட்டவே போவதில்லை!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com