வாழ்வு இனிது

உளுக்குத் தடவும் ஆச்சி | பாற்கடல் 5

கலாப்ரியா

பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சொல்வார், “நீண்ட நாள் பாராமல் இருந்துவிட்டுப் பார்க்கையில் நம் சொந்த ஊரில், சொந்தத் தெருக்கள் அகலம் சுருங்கிச் சிறிதானது போலத் தோன்றும்” என்று. ஓரிரு வருடங்கள் வெளியூரில் பணிபுரிந்துவிட்டு, ஓர் இரவில் திடீர் வரவாகத் தெருவில் நுழைந்தேன்.

அமைதியான தெருவில் ஆள்களே இல்லை. ஒன்றிரண்டு நாய்கள் வேலை எதுவும் இல்லாமல் அங்கே போவதும் இங்கே வருவதுமாக கருமமே கண்ணாக ஓடவும் உட்காரவுமாக அலைந்து கொண்டிருந்தன. அம்மாதான் அடிக்கடி ஒரு சொலவடை சொல்வார், “நாய்க்கு வேலையுமில்லை, உட்கார நேரமுமில்லை” என்று. அது எவ்வளவு உண்மை.

தெரு சற்று அகலம் குறைந்து இரண்டு வரிசை வீடுகளும் நெருங்கினாற்போல இருந்தன. கட்டிடங்கள் எதுவும் புதிதாக வரவும் இல்லை. ஆனாலும் அப்படி ஒரு தோற்ற மயக்கம். ஏற்கெனவே தெரு கிழக்கில் சற்றுக் குறுகலாகவும் மேற்கில் அகலமாகவும் இருக்கும். மேற்கில் தாராளமாக இரண்டு இரட்டை மாட்டு வண்டி அல்லது அம்பாசிடர் போகிற அளவு அகலமாக இருக்கும். இப்போது இரட்டை மாட்டு வண்டியும் இல்லை, அம்பாசிடரும் இல்லை. இரண்டு செடான் கார்கள் என்றால்தான் புரியும்.

அகலமான அந்தப் பகுதிதான் நாங்கள் விளையாடும் மைதானமும். அங்குதான் பக்கத்துக் கிராமங்களிலிருந்து நெல் ஏற்றி வருகிற வண்டிகளை அவிழ்த்துப் போடு வார்கள். அப்போதெல்லாம் பிப்ரவரி, செப்டம்பர் மாத அறுவடை சீசன்களில் டவுனின் பல தெருக்களிலும் அப்படி மூட்டை மூட்டையாக நெல்லைக் கொண்டு வருவார்கள் விவசாயிகள்.

சினிமா கொட்டகைகளில் அந்நேரத்தில் அவர்கள் கூட்டமே அதிகம் இருக்கும். வீட்டிலேயே நெல்லை அவித்துக் காயப் போட்டு, குத்தி அரிசியாக்கி உண்பார்கள். 100 கிலோ அரிசி மூட்டை 60 ரூபாய். கிலோ 60 பைசா. அன்று அந்த விலைக்கே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இப்போது நெல் விளையும் கிராமங்களில்கூட நெல்லை விற்றுவிட்டு பை அரிசி வாங்குகிறார்கள். நூறு கிலோ குறைந்தது 6 ஆயிரம் ரூபாய்.

தெருவின் மேற்குப் பகுதியில் பலவித மாட்டு வண்டிகளும் வந்துநிற்கும். அதில் நல்லெண்ணெய் விற்கும் பழைய பேட்டை வியாபாரியின் வண்டியும் ஒன்று. அநேகமாகத் தெரு முழுவதும் அவரிடம் வாடிக்கையாக நல்லெண் ணெய் வாங்குவார்கள். தெருவில் ஓர் ஆச்சி காலில், கழுத்தில் நரம்பு சுளுக்கிக்கொண்டால் சுளுக்கெடுத்து விடுவார். அதற்கு ‘உளுக்குத் தடவுதல்’ என்று பெயர். அவர் இரட்டைப் பிள்ளை பெற்றவராம். இரண்டுமே தங்கவில்லை என்பது வேறு விஷயம். இரட்டைப் பிள்ளை பெற்றவர் உளுக்குத் தடவினால் குணமாகும் என்று ஒரு நம்பிக்கை.

நாங்கள் சின்ன பிள்ளையில் ஓடி ஆடி விளையாடும்போது, குறிப்பாக ‘மரக்குரங்கு’ விளையாடிக் குதிக்கும்போது காலில், கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுவிடும். நொண்டிக்கொண்டே ஆச்சியிடம் போவோம். உளுக்குத் தடவ நல்லெண்ணெய்தான் வேண்டும். அதனால் அவரிடம் போகும்போது சின்ன கிண்ணத்தில் எண்ணெய் கொண்டு போவோம். எப்போதும் முடியாது.

ஏனென்றால் வீட்டில், “நீ குதியாட்டம் போட்டுக் காலை உடைச்சுக்கிட்டு வந்தா இங்க எண்ணெய் என்ன ஜாடி நிரம்பியா வழியுது” என்று `அவயம்’ போட்டுக் கத்துவார்கள். கொண்டு போகவில்லை என்றாலும் ஆச்சி தன் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்வார். “ஆமா, ஒரு கரண்டி எண்ணெயிலா நான் குறைஞ்சு போய்டுவேன்” என்பார்.

ஆச்சி பேசியபடியே சுளுக்கியிருக்கும் நரம்பை நீவிக்கொண்டே இருந்து சட்டென்று திருகிவிடுவார். பூட்டைத் திறந்ததுபோல சுளுக்கு மறைந்துவிடும். அவர் தெரிந்து செய்கிறாரா இல்லை, வெறும் நம்பிக்கைதானா என்று தெரியாது. “இரண்டு, மூன்று பொழுது தடவினால் சுளுக்கு நேராகிவிடும், நாளைக்கு இந்நேரம் வா” என்று சொல்லி அனுப்புவார். யார் போவது? மறுபடி ஆட்டம் மறுபடி சுளுக்கு. அது ஒரு தொடர்கதைதான்.

ஒரு நாள் எண்ணெய் வியாபாரிக்குத் தொடைப் பகுதியில் சுளுக்கிக் கொண்டு விட்டது. சிறுவர்களுக்கு மட்டுமே உளுக்குத் தடவும் ஆச்சிதான், ஆபத்துக்குப் பாவமில்லையென்று அவருக்கும் சுளுக்கெடுத்துவிட்டார். பாவம் அவர் இரண்டு, மூன்று நாள்கள் கஷ்டப்பட்டிருப்பார்போல.

ஆச்சி தடவி விட்டதில் குணமாகிவிட்டது. அன்றிலிருந்து அவர் ஆச்சிக்கு மாதம் கால்படி எண்ணெய் கொடுத்துவிடுவார். ஆச்சி அப்புறம் உளுக்குத் தடவ வருகிறவர்களிடம் எண்ணெய் கொண்டு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போதெல்லாம் எல்லாருக்கும் தருகிற, ‘போதும் என்கிற மனம்’ தாராளமாக இருந்தது. அவருக்கு வியாபாரி தருகிற எண்ணெயே தோசை சுடவும் உளுக்குத் தடவவும் போதும்.

ஆச்சியின் இரண்டு மகன்களுக்கும் வியாபாரி தருகிற எண்ணெய் மீது பிடித்தம் கிடையாது. ஆச்சியும் வேண்டாம் என்பார். ஆனாலும் பிடிவாதமாக வியாபாரி தந்துவிடுவார். அவரும் சற்று வயதானவர். “நீங்க சும்மா இருங்கய்யா, அபசகுணமா சொல்லுதானேன்னு நினைக்காதீங்கய்யா. `எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ, விளக்கு அணையத்தான் செய்யும்.’ நான் முந்திப் போனா அதுவரை இதை நிறுத்த மாட்டேன்” என்று வாயை அடைத்துவிட்டார்.

இப்போது தெருவில் கட்டிடங்களும் கடைகளும் வந்துவிட்டன. தெரு உண்மையி லேயே சுருங்கிப் போய் பிளாஸ்டிக் பைக்குள் இருக்கிறது. ஆச்சியின் பேரன் ஒருவர் தற்செயலாக அறிமுகமானபோது சொன்னார், “ஆச்சியும் எண்ணெய் வியாபாரியும் ஒரு வார வித்தியாசத்தில் இறந்து போனதைத் தெருவே பேசிற்று” என்று. முக்கியமான விஷயம், பேரன் ஓர் எலும்பு முறிவு டாக்டர்!

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT