‘எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்’ என்று சொன்னவர் சேகுவேரா. சேகுவேரா அல்லது ‘எல் சே’ எனப் பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவில் பிறந்த கியூபப் புரட்சியாளர். மற்ற புரட்சியாளர்களுக்கும் சேகுவேராவுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற புரட்சியாளர்கள் அவரவர் சொந்த நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். ஆனால், ‘சே’வைப் பொறுத்தவரை மற்ற நாடுகளையும் தன் நாட்டைப் போலவே நினைத்து, ஆயுதம் ஏந்திப் போராடியவர்.
குடும்பம் போட்ட விதை: சேகுவேரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்புடைய குடும்பமாக இருந்ததால் மிக இள வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவருடைய தந்தையைக் காண, ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசுவாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோஷசம் குறித்த இவரது கருத்துகளுக்கு வழிகாட்டியது.
சிறந்த விளையாட்டு வீரர்: இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தும் இவர் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் சிறந்த ‘ரக்பி’ விளையாட்டு வீரர். செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கவிதைகளையும் விரும்பி வாசித்தார். சேகுவேராவின் வீட்டில் 3,000 புத்தகங்களுக்கு மேல் இருந்தன.
தென் அமெரிக்கப் பயணம்: 1948ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்துகொண்டு, மோட்டாரில் தென் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார்.
பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புகளைப் பயன்படுத்தி, ‘மோட்டார் சைக்கிள் குறிப்புகள்’ என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
ஆயுதப் புரட்சியே வழி: பயணங்கள் மூலம் இவருக்கு ஏற்பட்ட பல அனுபவங்களால், ஆயுதப்புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சேகுவேரா நம்பலானார். அர்ஜெண்டினாவுக்குத் திரும்பியவர் தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவத்தில் டிப்ளோமா பெற்றார். 1953 ஜூலையில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த சேகுவேரா, இம்முறை பொலிவியா, பெரு, ஈக்வடார், பனாமா, கோஸ்டாரிகா, நிகரக்குவா, ஹொண்டுராஸ், சல்வடார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா, குவாதமாலாவுக்குச் சென்றார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
பெயர்க் காரணம்: குவாதாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த பொருளியலாளரும் இடதுசாரி சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகரக் கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் வட்டாரத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.
இவர் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளை சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள், கியூபாவை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்கள் ஆகியோரின் தொடர்புகளும் சேகுவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்தில்தான் ‘சே’ என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. ‘சே’ என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜெண்டினச் சொல்லாகும்.
கியூபாவில் புரட்சி: சில காலத்திற்குப் பின்னர் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான இயக்கம், 1959இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சேகுவேரா வகித்தார். சில காலம் அங்கிருந்த சே, பிறகு காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் சோஷலிசப் போராட்ட வளர்ச்சிக்குப் பங்களிக்க 1965ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சேகுவேரா: 1966ஆம் ஆண்டின் கடைசியில் பொலிவியாவில் புரட்சியை ஏற்படுத்தி, கெரில்லப் போரை வழிநடத்தும் பொருட்டு உருகுவே நாட்டுப் போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக, பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கே புரட்சி வெடிக்கச் சாதகமாக இருந்தன. பொலிவியா, ஐந்து நாடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருந்தது. பொலிவியாவில் கெரில்லப் போராட்டம் வெற்றிபெற்றால், அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று சே நினைத்தார்.
பொலிவியாவில் அமெரிக்கச் சிறப்பு ராணுவத்தின் ராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே, கைது செய்யப்பட்டார். பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகிலுள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில்கூட மரணத்தை வரவேற்றார் சே. தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்தும், “ஒரு நிமிடம் பொறு. நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு...” என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.
அவரின் சடலம் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாகப் பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது. சே, சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய ராணுவ ஜெனரல், சேகுவேராவின் சடலம் ஒரு விமான நிலையத்தின் ஓடு பாதையருகே புதைக்கப்பட்டதாக 1995ஆம் ஆண்டு தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் சடலம் எடுக்கப்பட்டு, கியூபா நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோண்டி எடுக்கப்பட்டது சேவின் சடலமா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் மரணத்திற்குப் பின், சேகுவேரா உலகிலுள்ள புரட்சி இயக்கங்களின் மத்தியிலும் இளைஞர்களின் மத்தியிலும் மிகவும் மரியாதைக்கு உரியவராகக் கொண்டாடப்படுகிறார்.
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: மகனுக்காக உயிர்விட்டவரின் கடைசி ஆசை - பாபர் | கல்லறைக் கதைகள் 15
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago