Wu Wei: சொல்லிக் கொடுக்கும் பாடம் | சக்ஸஸ் ஃபார்முலா - 23

By நஸீமா ரஸாக்

கடந்த சில வாரங்களாக சச்சுவுக்கு வேலை அதிகமாக இருந்தது. விடுமுறைகள் கணினியில் கரைந்து கொண்டிருந்தன. அவர் குழுவிலிருந்த சிலர் வேலையை விட்டுச் சென்றிருந்தார்கள். இதனால் சச்சுவுக்கு வழக்கத்தைவிட அதிகமாக வேலை இருந்தது.

“சச்சு, இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி வேலை செய்யப் போற? ஒரு சின்ன பிரேக் எடு. உங்க மாமா வீட்டு கிரவபிரவேசத்துக்குப் போயிட்டு வா. ஒரு சேஞ் இருக்கும்.”

“இல்ல, இப்ப அதையெல்லாம் யோசிக்கவே முடியாது. பிராஜெக்ட் முடியும் வரை ஊருக்கு எல்லாம் போக முடியாது.”

“வேலையாவது நல்லா போகுதா?”

“உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் , ஒரு இன்ச்கூட எதுவும் சரியா போகா மாட்டேங்குது. தூக்கமும் இல்லாமல் ஒரு ஜோம்பி போல இருக்கிறேன்.”

"உனக்கு wue- wei பத்தி தெரியுமா?"

பண்டைய சீனாவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், தாவோயிச தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் லாவோ ட்சூ (Lao Tzu) என்பவரால் Wu Wei என்கிற கருத்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 'Wu' என்றால் 'இல்லை' என்றும், 'Wei' என்றால் 'செயல்' என்றும் பொருள். ஆனால் இதன் ஆழமான பொருள் 'செயலின்மை' அல்ல, 'செயலற்ற செயல்பாடு' என்று பொருள்.

அதாவது ஒரு செயலைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. மாறாக இயற்கையான ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவது என்று அர்த்தம். அதற்குச் சரியான உதாரணம் நதி. நதியைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். அது பாயும்போது, தனது பாதையில் வரும் பாறைகளை நேரடியாக எதிர்க்காது. சுற்றி ஓடும். ஆனால், இறுதியில் தன் இலக்கை அடையும். இது நதியின் குணமாக இருந்தாலும் நாமும் அதைப் பின்பற்றினால் இலக்கை சுலபமாக அடைய முடியும்.

”சூழல்களைப் புரிந்து கொண்டு நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது தான் wu weiயின் அடிநாதம். மாடுபோல் உழைப்பவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்கிறார்களா? இல்லாமல் போவதற்கு முக்கியக் காரணம் எதுவாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறீர்களா? உழைப்பு, தியாகம் இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று இருக்கிறது. அது இல்லையெனில் வெற்றி கிடையாது. அது தான் wu-wei. இதை, இந்தத் துறையில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றில்லை. எங்கும் எதிலும் பயன்படுத்தி இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும்.

”கட்டாயப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் பயனற்றுப் போகும். ஊர் சொல்கிறது, சமூகம் எதிர்பார்க்கிறது என்று நாம் செய்ய ஆரம்பிக்கும் எதுவாக இருந்தாலும் அது wu- weiயை எதிர்த்துப் போகும் போக்கு. அதாவது இயற்கைக்கு எதிரானது. உயிரைக் கொடுத்து நீங்கள் உழைத்தாலும் அது வீழ்ச்சியிலும் மன அழுத்தத்திலும்தான் முடியும் என்பது கசக்கும் உண்மை.”

லாவோ ட்சூ சொன்ன wu weiயைப் பத்துப் படிகளில் கற்றுக் கொள்ளலாம்.

1. ஒரு நாளை ஆரம்பிக்கும் போதே விழிப்போடு இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது செய்யும் செயலில் மனம் ஆழ்ந்து இருக்க வேண்டும். ஒரு தேநீரைக் குடிப்பதாகக்கூட இருக்கட்டும் . முடிந்தளவு செய்யும் செயலில் கவனம் வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும், செயல் திறன் அதிகரிக்கும்.

2. தினமும் முப்பது நிமிடம் வேறு எந்த வேலையையும் செய்யாமல் இயற்கையாக இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள். கடற்கரை. பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு இல்லை என்றால் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தையாவது வீட்டிலிருந்து பார்த்து மகிழுங்கள். காலை அல்லது மாலை வெயில் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் முக்கியம்.

3. ஒரு நேரத்தில் ஒரு வேலை என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு படி அதிகமான அழுத்தம் யார் கொடுத்தாலும் மறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

4. எதிலும் அவசரம் இருக்கக் கூடாது. ஒரு செயலைச் செய்யும் போது அது செய்து முடிவதற்கான நேரம் என்று ஒன்று இருக்கும். அதை மதிக்க வேண்டும். இன்று ஆரம்பித்து நாளையே முடிய வேண்டும் என்கிற அவசரம் இருந்தால் அது வீணாகப் போகும்.

5. உடல் ஆரோக்கியமும் மன நிம்மதியும் இன்றி எந்தச் செயலையும் நீண்ட நாள்களுக்குச் செய்ய இயலாது என்று புரிந்து கொள்ளுங்கள்.

6. எல்லா நேரத்திலும் நாம் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது சாத்தியமில்லை. அதனால் நம்முள் வரும் உணர்வு மாறுபாடுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன் முடிவுகளைக் கைவிட்டுவிட்டு எண்ணங்களைக் கவனியுங்கள். இது உங்கள் புரிதலை மேம்பட்டதாக்கும்.

7. மாற்றங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். இது இயற்கையின் நியதி. அதனால் மாற்றம் எங்கு வந்தாலும் அதைப் புரிந்து கொண்டு புதிய வழிகளைக் கண்டறியுங்கள்.

8. எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு எந்த வேலை செய்தாலும் அது மன அழுத்தத்தைக் கொடுக்கும். இலக்கை தேர்வு செய்து வேலை செய்தால் போதுமானது. எதிர்பார்ப்பு தேவையற்ற விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

9. எந்தச் செயலையும் திட்டத்தையும் பெரிதாகப் பார்க்காமல் சிறிய சிறிய படிகளாகப் பிரித்து வேலை செய்ய ஆரம்பிப்பது உங்கள் செயல் திறனை அதிகரிக்கும்.

10. சின்ன சின்ன மகிழ்ச்சியை அங்கீகரியுங்கள். அதற்காக இன்னொருவர் வருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசியுங்கள். நதி போல் உங்கள் செயல்கள் எதனாலும் தடைப்படாமல் ஓட நீங்கள் wu weiயைப் பிடித்துக் கொள்வது அவசியம்.

Wu Wei என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல. இது நவீன உலகின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஒரு வழிகாட்டி. இயற்கையுடன் இணைந்து, இயல்பாக வாழ்வதன் மூலம் நாம் மேலும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய முடியும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். தொடர்புக்கு: writernaseeema@gmail.com

முந்தைய அத்தியாயம்: அங்கீகாரங்கள் லைக்குகளில் இல்லை | சக்ஸஸ் ஃபார்முலா - 22

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்