கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமை மையமான வாடிகன் நகரத்தில் இருக்கும் வாடிகன் மாளிகையின் பின்புறமுள்ள அந்தக் கல்லறை சில வீரர்களால் உடைக்கப்படுகிறது. கல்லறை உடைக்கப்படுவதை ஏழாம் ஸ்டீபன் என்பவர் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது முகத்தில் குரூரமும் வஞ்சகப் புன்னகையும் தவழ்கின்றன.
கல்லறை திறக்கப்பட்டுப் பாதி சிதைந்த நிலையில் சடலம் ஒன்று எடுக்கப்பட்டு அரண்மனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சடலம் அரண்மனை அரியாசனத்தில் வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் உலகம் இதுவரை காணாத விசித்திரம். எந்தக் காலத்திலும் நடக்காத அதிசயம். பிணத்திடம் விசாரணை நடத்தப்பட்டது என்று சொன்னால் நம்பவா முடிகிறது?
விசித்திர விசாரணை: ஆனால், பிணத்தை அரியாசனத்தில் அமர வைத்துக் குற்றச்சாட்டுகளைப் படித்தார் ஒருவர். 18 வயது இளைஞன் ஒருவன், பிணத்தின் அருகே நின்று அந்த சடலத்துக்குப் பதிலாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இதுவரை உலகம் காணாத விசித்திரமான விசாரணையை நடத்தியவர், உலகக் கத்தோலிக்கத் தலைவரான போப். குற்றச்சாட்டுக்கு ஆளான, அரியாசனத்தில் அமர வைக்கப்பட்ட சடலமும் ஒரு போப்புக்குரியது. அதன் பிறகு நடந்ததுதான் கொடுமை.
இந்தக் கேலிக்கூத்து விசாரணை முடிந்தவுடன், போப்பின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஏற்கெனவே பாதி சிதைந்துபோன பிணத்தின் வலது கையின் நடு மூன்று விரல்கள் வெட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படியே அந்த மூன்று விரல்களும் வெட்டப்பட்டன. அந்த மூன்று விரல்கள்தான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப் பயன்பட்டவை. இறந்து போனவரின் போப் பட்டம் பறிக்கப்பட்டது. அதனால், அப்பிணம் சாமானிய மனிதப் பிணமாகக் கருதப்பட்டு எல்லாரும் புதைக்கப்படும் இடத்தில் புதைக்கப்பட்டது. இவற்றையெல்லாம், அரசி அஜில்ட்ருது மாளிகையில் அமர்ந்து ரசித்தார்.
விசாரணை நடத்திய போப்பின் பெயர் ஏழாம் ஸ்டீபன் (ஆறாம் ஸ்டீபன்தான் ஏழாம் ஸ்டீபன் என அழைக்கப்படுகிறார்). விசாரணைக்கு உள்ளான சடலத்துக்குச் சொந்தக்கார போப்பின் பெயர் போர்மொசு. எதற்காக இந்த விசித்திர விசாரணை? அப்படி என்ன தவறு செய்தார் போப் போர்மொசு? கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.
அரசர் பதவிக்குப் போட்டி: அது பொ.ஆ (கிபி) 894. மத்திய இத்தாலியைச் சேர்ந்த அரசி அஜில்ட்ருதுவுக்குத் தன் மகன் லாம்பேர்ட்டை ரோம் நாட்டுப் பேரரசனாக்க வேண்டும் என ஆசை. அஜில்ட்ருது பேரழகி. போப் ஆண்டவர்களுக்கு வானளாவிய அதிகாரம் இருந்த காலம் அது. அரசு மற்றும் அரசியல் விவகாரங்களில் போப்களின் தலையீடு அதிகம் இருந்தது. தன் மகன் லாம்பேர்ட்டை ரோம் நாட்டுப் பேரரசனாக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் அப்போதைய போப் போர்மொசுவைச் சந்திக்கச் சென்றார் அரசி. போர்மொசு அடிப்படையில் நல்லவர்.
ஆகவே, அவர் அஜில்ட்ருது மகன் லாம்பேர்ட்டைத் தவிர்த்து, காரிந்தியா நாட்டு அரசர் அர்னுல்ப் என்பவரை ரோம் நாட்டுப் பேரரசராக முடிசூட்டத் தயாராகிறார். இம்முடிவு அரசி அஜில்ட்ருதுவைக் கோபப்படுத்தும் என்பதை உணர்ந்து அர்னுல்ப்பிடம் உதவி கேட்கிறார். அர்னுல்ப் தனது படையுடன் வந்து அரசி அஜில்ட்ருதுவையும் அவருடைய மகன் லாம்பேர்ட்டையும் அவர்களது நாட்டுக்கு விரட்டியடித்துவிடுகிறான். பொ.ஆ. 896 பிப்ரவரி 22ஆம் நாள் ரோம் நாட்டுப் பேரரசராக அர்னுல்ப், போப் போர்மொசுவால் முடிசூட்டப்படுகிறான்.
பேரழகி அரசி அஜில்ட்ருது மீது அர்னுல்ப்புக்கு ரொம்ப நாளாகவே விருப்பம். ஆனால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதற்குமுன் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடுகிறான். இந்நிலையில், போப் போர்மொசு மீது பயங்கர கோபத்தில் இருந்த அரசி அஜில்ட்ருது, தன் நாட்டுக்கு வரும்படி அவரை அழைக்கிறாள். ஏப்ரல் 4ஆம் தேதி, விருந்துக்கு வந்த போப் போர்மொசுவை நயவஞ்சகமாகப் பேசி, உணவில் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறாள். போப் போர்மொசு இறந்ததால், வாடிகனில் அடுத்த போப்பாக வரப்போவது யார் என்பது மிக முக்கியக் கேள்வியாக இருந்தது. அடுத்து வரக்கூடிய போப், தன் கைப்பாவையாக இருந்தால் ரோம் பேரரசைக் கைப்பற்றுவது எளிதாக இருக்கும் என்று நினைத்த அரசி அஜில்ட்ருது, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினாள்.
கொல்லப்பட்டவரிடம் விசாரணை: அவளும் அவளைப் போலவே கொடூர குணம் கொண்ட அவளுடைய மகன் இளவரசன் லாம்பேர்ட்டும் திட்டமிட்டுத் தங்களது கைப்பாவையான ஏழாம் ஸ்டீபன் என்பவரை போப்பாக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றனர். தன் மகனை ரோம் நாட்டிற்கு முடிசூட்டாத போப் போர்மொசு இறந்தவிட்ட பின்னும், அவர் மீதுள்ள வெறுப்பு மட்டும் அரசி அஜில்ட்ருதுவுக்கு மாறவில்லை. இறந்துவிட்டாலும் அவரைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற வெறியில், தன் கைப்பாவை போப் ஏழாம் ஸ்டீபன் மூலம் காய்களை நகர்த்தினாள்.
இறந்து போனவரை என்ன செய்ய முடியும்? பரலோகத்திற்குச் சென்றா குற்றப் பத்திரிகை வாசிக்க முடியும்? இந்த நிலையில், போப் ஏழாம் ஸ்டீபன் தனக்குத் தோன்றிய விபரீத யோசனையைச் சொல்ல, அதை அரசியும் ஏற்றுக்கொண்டாள். இதற்குப் பின்னர்தான் வரலாறு காணாத கொடுமைகள் வாடிகன் மாளிகையில் அரங்கேறின. இறந்துபோன போப் போர்மொசுவின் மேல் பல்வேறு முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவரை விசாரணைக்கு அழைத்து வரும்படி போப் ஏழாம் ஸ்டீபன் உத்தரவிட, அதையடுத்து நடந்தவைதான் போப் போர்மொசுவின் கல்லறை தோண்டப்பட்டதும் அவருக்குத் தண்டனை வழங்கிய சம்பவங்களும்.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது காலத்திலேயே அதாவது அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வாடிகன் மாளிகையில் பெரும் கலவரம் ஏற்பட்டு, போப் ஏழாம் ஸ்டீபன் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், ஆங்கிலத்தில் வெளியாகி உலகையே உலுக்கிய, ‘A DARK HISTORY OF THE POPES: VICE, MURDER AND CORRUPTION IN THE VATICAN’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போப் ஏழாம் ஸ்டீபன் - சிறு குறிப்பு: போப் ஏழாம் ஸ்டீபன் என்பவர் மிகக் குறுகிய காலமே பதவி வகித்தவர். அதாவது, பொ.ஆ. 896 முதல் 897 வரை, 15 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். இவர் மனவளம் குன்றியவர் என்கிறார்கள். அரசி அஜில்ட்ருது, ஸ்டீபன் போப் ஆவதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய குறையாகக் கருதவில்லை. ஏனெனில், அரசிக்கு போப் போர்மொசுவிடம் பழைய கணக்கு ஒன்றைத் தீர்க்க வேண்டியிருந்தது. ஆகவே, ஏழாம் ஸ்டீபனின் மனநோய், அரசி அஜில்ட்ருதுவுக்கு ஒரு பெரிய தடையாகத் தோன்றவில்லை.
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கிய மகன் - ஆலிவர் கிராம்வெல் | கல்லறைக் கதைகள் 9
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago