அல்சூரில் சோமேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய மண்டபத்துக்கு நண்பர் கந்தசாமியைச் சந்திப்பதற்காக நான் அடிக்கடி செல்வேன். அது அவருக்குச் சொந்தமான இடம்.
அனைவரும் அதை மண்டபம் என்று அழைத்தாலும் உண்மையில் அது ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையைக் கொண்ட ஒரு பெரிய கூடம் மட்டுமே. நீளமான துணித்திரை யால் தேவைக்குத் தகுந்தபடி அதை இரண்டாகவும் பிரிக்கலாம். மூன்றாகவும் பிரிக்கலாம். பிறந்தநாள் முதல் திருமணம் வரை நூறு பேர் பங்கெடுக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளும் அங்கு நடக்கும்.
ஒருநாள் நான் மண்டபத்துக்குச் சென்றபோது, ஏதோ ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாசலையொட்டி போடப்பட்டிருந்த நாற்காலியில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கந்தசாமியைக் காணவில்லை. காலியாக இருந்தது. எங்காவது அவசர மாகச் சென்றிருக்கக்கூடும், விரைவில் வந்துவிடலாம் என நினைத்து நான் அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு கூடத்தைக் கவனித்தேன்.
கூடத்தில் ஐம்பது, அறுபது பேர் மேடையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். மேடை மீது சுவரோடு ஒட்டியபடி ஒரு மேசை வைக்கப்பட்டு, அதன் மீது ஒரு பெரிய ஒளிப்படம் வைக்கப்பட்டிருந்தது. முப்பது வயதுக்கும் குறைவாக மதிக்கத்தக்க ஓர் இளம் பெண்ணின் முகத்தை அந்தப் படத்தில் பார்த்தேன். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய ரோஜா மாலையையும் சந்தன மாலையையும் அணிவித்திருந்தார்கள்.
» தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு
» பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
அந்தப் படத்துக்கு அருகில் நின்றி ருந்தவர் வாழ்க்கை நிலையாமை தொடர்பான பாடல்களை எல்லாம் மேற்கோள் காட்டித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். அமர்ந்திருந்தவர்கள் அந்தப் பேச்சில் லயித்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் பேசி முடித்து அமர்ந்ததும் இன்னொருவர் பட்டினத்தார் பாடலிலிருந்து தொடங்கினார்.
”என்னங்க சார், வந்து ரொம்ப நேரமாகுதா?” என்கிற குரலைக் கேட்ட பிறகே சுய உணர்வுக்குத் திரும்பி, பக்கத்தில் நின்ற கந்தசாமியைப் பார்த்தேன். தொடர்ந்து, “நிகழ்ச்சி முடிஞ்சதும் இங்கயே சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தாங்க. சங்கீதா மெஸ்லேர்ந்து இப்பதான் எல்லாம் ஆட்டோவுல வந்து எறங்கிச்சு. எல்லாத்தையும் ஒழுங்கா சரிபார்த்து வாங்கி உள்ள வச்சிட்டு வரேன்” என்றார்.
“ம்ம்” என்று தலையசைத்தபடியே நான் பேச்சாளரின் பேச்சைக் கேட்பதைக் கவனித்துவிட்டு கந்தசாமி, “இரங்கல் நிகழ்ச்சி சார். ராகவேந்திர ஸ்வாமி கோயிலுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க. ஒரே பொண்ணு சார். போன வருஷம்தான் கல்யாணம் செஞ்சி குடுத்தாங்க. சீமந்தம் முடிஞ்சு டெலிவரிக்காக இங்க வந்திருக்குது. மாசம் முடியறதுக்குள்ளயே வலி வந்ததால ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனாங்களாம். பிரசவத்துல என்னமோ சிக்கல். பெரிய உயிரும் போயிடுச்சி. சின்ன உயிரும் போயிடுச்சி” என்றார்.
பூமாலைகளுக்கும் புகையும் வத்திகளுக்கும் இடையில் தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தை நான் மீண்டும் பார்த்தேன். உருண்ட முகம். பெரிய கண்கள். காதோரமாகப் பறக்கும் சுருள்முடிக்கற்றை. அவர் கழுத்தில் மாலையையும் மஞ்சள் பூசிய தாலிக்கயிற்றையும் பார்த்தபோது திருமண நாளன்று எடுத்த படமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
“பொண்ணு இங்கதான் மகாராணி காலேஜ்ல எம்.எஸ்.சி படிச்சிதாம். குரூப் ஒன், குரூப் டூ, யுபிஎஸ்சினு தொடர்ந்து ஏதாவது ஒரு பரீட்சையில பாஸாகி நல்ல வேலைக்குப் போகணும்ங்கறதுதான் அந்தப் பொண்ணுக்கு லட்சியமா இருந்திருக்குது. பொண்ணுடைய அப்பாதான் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு வேலூருல அக்கா பையனுக்குப் போன வருஷம் அவசரமாகக் கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி வச்சிட்டாரு. மாப்பிள்ளையும் நல்ல பையன்தான். டிசிஎஸ்ல வேலை செஞ்சிட்டிருக்கானாம்.”
கூட்டத்தினரைப் பார்த்தேன். சிலர் மட்டுமே மேடையில் பேசுகிறவரின் முகத்தைப் பார்ப்பதுபோல அமர்ந் திருந்தனர். பிறர் துயரத்தில் மனமுடைந்தவர்களைப் போல தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். பெரும்பாலானோரின் விழிகள் கலங்கி கண்ணீர் கசிந்தபடி இருந்தன. அழுது கலங்கிய அத்தனை முகங்களை ஒரே நேரத்தில் பார்த்தபோது எனக்கும் மனம் கலங்கியது.
அரங்கத்தில் இருந்து இருவர் தலைகுனிந்தபடி மெல்ல எழுந்துவந்து நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஐந்தடி தொலைவில் நின்றனர். “என்ன சார்? திடீர்னு எழுந்து வந்திட்டீங்க?” என்று கேட்டார் ஒருவர். அவரிடம், “என்னால உக்காரவே முடியலை சண்முகம். தங்கக்கட்டி மாதிரியான பொண்ணு.
அவ கல்யாணத்துல வாழ்த்திப் பேசிய ஆளுங்கள்ல நானும் ஒருத்தன். என் வாழ்த்துக்கு என்ன அர்த்தம் இருக்குது சொல்லு? எண்ணி ஒரு வருஷம்கூட முடியலை. அதுக்குள்ள செத்து சுடுகாட்டுக்குப் போயிடுச்சி. இதோ, இன்னைக்கு இரங்கல் நிகழ்ச்சியிலயும் நான் பேசிட் டேன். நெனைக்க நெனைக்க மனசு ஆறமாட்டுது” என்றார் இன்னொருவர்.
“ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போவும்போது தாயும் புள்ளையுமா நல்லபடி திரும்பணும்னுதான் நெனச்சிட்டுப் போறோம். சில நேரத்துல இப்படி ஏடாகூடமா ஆயிடுது. நம்ம கையில என்ன சார் இருக்குது?”
“அப்படி இல்லை சண்முகம். இன்னைக்கு இருக்கிற மெடிக்கல் வசதியில ஒண்ணு நார்மல் டெலிவரியா முடியும். இல்லைன்னா சிசேரியனா முடியும். டெலிவரி டெத்ங்கறது ரொம்ப ரொம்ப அபூர்வம். நமக்குத் தெரிஞ்ச புள்ளைக்கு அப்படி ஆயிட்டுதேனுதான் ஆதங்கமா இருக்குது.” அவர் முகத்தில் ஒருவிதக் கசப்பையும் தவிப்பையும் பார்க்க முடிந்தது.
மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் தன் உரையை முடித்துக்கொண்டு இருக்கைக்குத் திரும்பியதும் ஒரு பெண்மணி எழுந்து பேசத் தொடங்கி னார். என் கவனம் மீண்டும் அந்த இளம்பெண்ணின் ஒளிப்படத்தின் மீது படிந்தது.
திடீரென அந்தப் பெண்ணின் கண வரை நினைத்துக்கொண்டேன். அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. “அந்தப் பொண்ணோட கணவர் இங்க வந்திருக்காரா?” என்று கந்தசாமியிடம் கேட்டேன். “இல்லைப்பா. அவர் வரலையாம். கிரிமேஷன் முடிஞ்சதிலேருந்து அவருக்கு என்னமோ காய்ச்சல் வந்து வந்து போகுதாம். மஞ்சள் காமாலையா, டைபாய்டா, மலேரியாவான்னு ஒண்ணும் புரியலை யாம். வேலூர் சிஎம்சியில ஐசியுவுல வச்சிருக்காங்களாம்” என்றார் அவர்.
ஒருவரை அடுத்து இன்னொருவர் என ஒவ்வொருவராக எழுந்து தம் மனதி லுள்ள எண்ணங்களையெல்லாம் தொகுத்து இரண்டு, மூன்று நிமிடங்கள் பேசி விட்டு அமர்ந்தனர். சிலருக்குப் பேசிக்கொண்டிருக்கும்போதே ஏதோ ஒரு தருணத்தில் குரல் தழுதழுக்கத் தொடங்கியது. சில கணங்கள் விம்மி விம்மி அழுதுவிட்டுப் பிறகு பேச்சைத் தொடர்ந்தனர் சிலர்.
அனைவரும் பேசி முடிந்ததும் யாரோ ஒருவர் நன்றியுரை சொல்ல, இரங்கல் நிகழ்ச்சி முடிவடைந்தது. நடுவயதுக்காரர் ஒருவர் தடுப்புத் திரையை நெகிழ்த்தி அனைவரையும் கூடத்திலிருந்து உணவு மேசை வரிசைக்கு அழைத்துச் சென்றார்.
“நான் கொஞ்சம் உள்ள போய் நின்னாதான் எல்லாம் ஒழுங்கா நடக்கும். இல்லைன்னா சின்ன பசங்க சொதப்பிடுவானுங்க சார்” என்று விடைபெற்றுக்கொண்டு பின்கட்டை நோக்கிச் சென்றார் கந்தசாமி. அவர் தோளில் தட்டி விடை கொடுத்தேன்.
கூட்டத்தினர் அனைவரும் உணவுக் கூடத்துக்குச் சென்றுவிட, ஒரு பெரியவர் மட்டும் அந்தப் பெண்ணின் ஒளிப்படத்துக்கு அருகில் சென்று கூர்ந்து நோக்கியபடி நிற்பதைப் பார்த்தேன். ஒளிப்படத்தின் விழியோரம் ஒட்டிக்கொண்டிருந்த குங்குமத்தைத் தன் துண்டால் ஒற்றித் துடைத்து சுத்தமாக்கினார் அவர். முகச்சாயலில் ஒற்றுமை தெரிந்ததால், அவர்தான் அந்தப் பெண்ணின் தந்தை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
நீண்ட நேரம் அவர் அந்தப் படத்தையே பார்த்தபடி தன் நெஞ்சில் கை வைத்து எதையோ முணுமுணுத்தார். அப்போது அவர் தோள்கள் குலுங்கின. அழுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் சற்றே தொலைவில் இருந்த ஒரு நாற்காலி வரை தடுமாறி நடந்து சென்று, அந்தப் பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதுபோல உட்கார்ந்தார்.
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago