பணயக் கைதியான அதிபர்: டாஸஸ் பாபடுபொலஸ் | கல்லறைக் கதைகள் 8

By சி.ஹரிகிருஷ்ணன்

2009 டிசம்பர் 11ஆம் தேதி. சைப்ரஸ் முன்னாள் அதிபரான டாஸஸ் பாபடுபொலஸ் கல்லறைக்குச் செல்லும் வழியில் அந்த நபர் நடந்துகொண்டிருந்தார். அவர் கையில் பூங்கொத்து இருந்தது. டாஸஸ் அதிபராக இருந்தபோது அவரது மெய்க்காப்பாளர்களில் முக்கியமானவர் அவர். டாஸஸ் மீது தனிப்பட்ட முறையில் பக்தி காட்டியவர். டாஸஸும் அப்படித்தான். இந்த மெய்க்காப்பாளர் மீது தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தியவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்ச நேரம் அவர் கல்லறைக்கு வந்து வணங்கிச் செல்வார் இந்த மெய்க்காப்பாளர்.

அன்றும் அப்படித்தான் கல்லறைக்குச் சென்றவர், அதிர்ச்சி அடைந்தார். கல்லறை தோண்டப்பட்டு அங்கு ஒரு பெரும் பள்ளம்தான் இருந்தது. சடலத்தைக் காணவில்லை. காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். காவலர்கள் அலறி அடித்துக்கொண்டு தேடத் தொடங்கினர். அவர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள், சைப்ரஸ் முன்னாள் அதிபர் டாஸஸ் பாபடுபொலஸ் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

இவருடைய பெற்றோர் நிகோலாய், அகேலிக் ஆகியோர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனாகப் பிறந்த டாஸஸ், சிறு வயதிலேயே படிப்பில் சுட்டியாக இருந்தார். டாஸஸின் தந்தையின் நட்பு வட்டத்தில் பெரும்பாலும் நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர், நீதிபதி போன்ற பதவிகளில் உள்ளவர்கள் நிறைந்திருந்தால், இவருக்கும் நீதித்துறையின் மீது நாட்டம் ஏற்பட்டது.

அரசியல் ஆர்வம்: பள்ளிப்படிப்பை முடித்தவுடன் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சட்டம் படித்தார். அந்தச் சமயத்தில் அவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்பட்டது. சட்டப் படிப்பைப் படித்தபோது சைபிரோஸ் கைபிரானோ மற்றும் லிலோஸ் டெமிட்டிரியாட்ஸ் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. இவர்கள் அனைவருக்கும் ஒரேவிதமான சிந்தனையும் ஆர்வமும் இருந்ததால் இவர்களின் நட்பு மேலும் நெருக்கமானது. லண்டனில் உள்ள சைப்ரஸ் நாட்டு மாணவர்களைக் கொண்ட தனி அணியை உருவாக்கினர். இந்த அமைப்புக்கு EFEKA (National Student Union of Cypriots in England) என்று பெயர் சூட்டினர்.

சட்டம் பயின்ற பிறகு, 1955ஆம் ஆண்டில் டாஸஸ், சைப்ரஸ் நாட்டிற்கு வந்தார். அன்றைய காலக்கட்டத்தில் சைப்ரஸ் நாட்டைத் தனது காலனியாதிக்கத்துக்குள் வைத்திருந்தது பிரிட்டன். தங்கள் தாய்நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தர நண்பர்கள் சபதம் பூண்டனர். சுதந்திரத்துக்கு ஆயுதப் போராட்டம் மட்டுமே சரியாக வரும் என்று நினைத்தனர். இதன்படி, லண்டனில் உருவாக்கிய மாணவர் அமைப்பின் மூலமாக ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தனர்.

தேடிவந்த பதவி: அதன் அடிப்படையில், அந்த அமைப்பின் நிகோசியா பிரிவில் தலைவராக டாஸஸ் பொறுப்பேற்றார். அதே நேரத்தில், சைப்ரஸ் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெகா அமைப்பிலும் சேர்ந்தார். 1958ஆம் ஆண்டில் பெகா அமைப்பின் பொதுச் செயலாளரானார். அப்போது அவரது வயது 24.


1960ஆம் ஆண்டில் சைப்ரஸ் நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பதவி இவரைத் தேடி வந்தது. அதன் பிறகு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் ஆனார். ஒரு நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் மிக இளவயதில் இவ்வுளவு பெரிய பதவி கிடைத்த முதல் நபர் டாஸஸ் பாபடுபொலஸ்தான். அதன் பிறகு நிதியமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்தார்.

அடுத்தடுத்த வெற்றி: 1969ஆம் ஆண்டில் அரசியலில் தனியாகப் பயணிக்க அவர் நினைத்தார். அன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த பேராயர் மெக்கரோர்ஸ் ஆதரவுடன் தனிக்கட்சியைத் தொடங்கினார். 1970ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அக்கட்சியில் இருந்து விலகினார். நாட்டின் அரசியல் சூழ்நிலை நிலையில்லாமல் இருந்தது. 1974ஆம் ஆண்டில், சைப்ரஸ் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ராணுவத்தினரால் டாஸஸ் பாபடுபொலஸ் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அந்நாட்டின் மீது துருக்கிய நாடு படையெடுத்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.


அதன் பிறகு கிரேக்க சைப்பிராய்ட்ஸ் இன மக்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அந்த இன மக்களின் நலனுக்காகவும் சைப்ரஸ் நாட்டிற்காகவும் பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு பல்வேறு பதவிகளை அவர் வகித்தார். 1991, 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2000ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் தலைவராக எந்த எதிர்ப்பும் இன்றித் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு சைப்ரஸ் நாட்டின் தேசியக்குழு உறுப்பினரானார்.

எதிர்பாராத இறப்பு: 2003ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2008ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பு அவருக்குச் சாதகமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போது அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுத் தோல்வி அடைந்தார்.


2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் நிகோசியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிகோசியாவில் உள்ள Agia Sophia தேவாலயக் கல்லறையில் அவரது சடலம் புதைக்கப்பட்டது. இந்தக் கல்லறையில் புதைக்கப்பட்ட சடலத்தைதான் யாரோ தோண்டி எடுத்துச் சென்று விட்டனர். அன்றைய சைப்ரஸ் அதிபர் டிமிட்ரிட்ரிஸ் கிறிஸ்டோபிளேஸ், சடலத் திருட்டுச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

விடுதலைக்காக நடந்த திருட்டு: 2010ஆம் ஆண்டு தலைநகருக்கு அருகே ஒரு கல்லறையில் டாஸஸின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த சடலத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி, அது அவரது சடலம்தான் என்பதைக் கண்டறிந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சகோதரர்கள் இருவரின் வேலை இது என்பது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் ஆயுள் கைதியாக இருந்தார். அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வெளியில் இருந்த ‘புத்திசாலி’யான அவருடைய சகோதரன் பிணையாக இந்தச் சடலத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். கடைசியில் பிடிபட்டார்.

இந்தச் சடலம் கிடைத்தது குறித்து இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. திருடர்கள் சிலர், டாஸஸின் சடலத்தை எடுத்து மறைத்துக்கொண்டு அவரது குடும்பத்தாரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். திருடர்களுக்கு எந்த விதமான பணமும் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

> முந்தைய அத்தியாயம்: நாடு கடத்தப்பட்ட சடலம் - இவா பெரோன் | கல்லறைக் கதைகள் 7

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்