ஸ்விஸ் எனும் சொர்க்கம் 6: கடவுள்களின் உணவு!

By ஜி.எஸ்.எஸ்

கோடீசுவரக் குடும்பங்களை எப்படிக் குறிப்பிடலாம்? ‘இன்னும் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்த குடும்பம்’, ‘அவங்களுக்கென்ன, ஸ்விஸ் வங்கியிலேயே கணக்கு வச்சிருக்காங்க’ என்று இப்படியெல்லாம் சொல்லலாம்தான். ஒரு காலத்தில் வேறு மாதிரியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'அது சாக்லெட் சாப்பிடும் குடும்பம்' என்று! ஆம், அரசக் குடும்பத்தினரும் பெரும் செல்வந்தர்களும்தான் சாக்லெட் சுவைக்க முடியும் என்கிற காலமும் இருந்தது.

சாக்லெட்டின் தாவரவியல் பெயர் ’தியோ புரோமாகாகோ’. அதாவது 'கடவுள்களின் உணவு'. ரசனையாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். மலை என்றால் அது இமயம்தான் என்பதைப்போல சாக்லெட் என்றால் அது சுவிட்சர்லாந்துதான். ஸ்விஸ் சாக்லெட்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த மண்ணில் சாக்லெட் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

1819இல் சுவிட்சர்லாந்திலுள்ள ‘ப்ரூக்’ பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோதுதான், சாக்லெட் தொழிற்சாலையை இந்தப் பகுதியில்தான் தொடங்க வேண்டும் என்று அலெக்சாண்டர் கெய்லெர் முடிவு செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் படர்ந்த பசுமைப் புல்வெளிகளும், அவற்றை மேய்ந்து கொண்டிருந்த மாடுகளையும் பார்த்த உடனே அலெக்சாண்டர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

‘கெய்லர்’ சாக்லேட் தொழிற்சாலை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதம் குறிப்பிடத்தக்கது. 'சாக்லெட்' என்கிற ஒரு வார்த்தை மந்திரத்தை அவர்கள் எப்படியெல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது வியப்புக்குரியது. தொழிற்சாலைக்குள்ளே பயணிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள், நடுவே கண்காட்சி அறைகள் வேறு. ‘ப்ரோக்’ என்கிற பகுதியில் அமைந்துள்ள இந்த மைஸன் கெய்லெர் சாக்லெட் தொழிற்சாலை, தற்போது ‘நெஸ்லே’ நிறுவனத்தின் சகோதர நிறுவனம்.

கெய்லர் தொழிற்சாலையை நெருங்குகையிலேயே சாக்லெட் மணம் மூக்கை வருடுகிறது. உள்ளே நுழைய கட்டணம் செலுத்தி டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும். எப்போது உள் நுழைய வேண்டும் என்பதை டோக்கனில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சுமார் ஒரு மணிநேரம் காத்திருப்புக்குப் பிறகுதான் உள்ளே செல்ல முடிந்தது. கூட்டம் கூடும் ‘சீசன்’ நேரத்தில் காத்திருப்பு நேரம் அதிகமாகுமாம். காத்திருப்பவர்கள் அருகில் உள்ள பிரம்மாண்ட கூடம் ஒன்றில் அமரலாம். அப்போது சாக்லெட் காபி, சாக்லெட் ஐஸ்-க்ரீமை வாங்கி ருசிக்கலாம். உரிய நேரம் வந்ததும் 'டூர்' தொடங்குகிறது.

சாக்லெட் எப்படியெல்லாம் உலக மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார் நிறுவனப் பிரதிநிதி ஒருவர். நாவில் சுவை அரும்புகள் தூண்டப்பட்டதை, சுரந்த எச்சில் உணர்த்துகிறது. முக்கால் இருட்டில் ஓர் அறைக்குள் அனுப்பப்படுகிறோம். 'தயவு செய்து சுவர்களில் சாயாதீர்கள்' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். எச்சரிக்கையின் சூட்சுமம் இதுதான். அறையின் சுவர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ‘கதவு’ சற்று நேரத்தில் திறக்க, வேறோர் அரையிருட்டு அரங்கிற்குள் அனுப்பப்படுகிறோம்.

அங்கே சாக்லெட் குறித்த தகவல்கள் சுவையாகத் சித்தரிக்கப்பட்டன. குறும்படம், உருவச் சித்தரிப்புகள், தோல்கூத்து போல நிழல் உருவம் வாயசைக்கப் பின்னணியிலிருந்து குரல்கள் என்று பலவித உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாக்லெட் சரித்திரத்தின் சில ரசனையான பக்கங்களை நாமும் பார்க்கலாம்.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 5: சுவிட்சர்லாந்தின் ‘ப்ரீமியம்’ சீஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

இணைப்பிதழ்கள்

11 days ago

மேலும்