ஸ்விஸ் எனும் சொர்க்கம் 3: சைக்கிளில் இந்தியாவுக்கு வந்த ஐரினி!

By ஜி.எஸ்.எஸ்

லொசானிலுள்ள ரிப்போன் சனிக்கிழமை சந்தையில் தேன், ஆலிவ் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தார் ஓர் ஐரோப்பியப் பெண்மணி. "நீங்கள் இந்தியரா?" என்று கேட்டவர், 'ஐரினி' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ’ஆமாம்’ என்று நான் பதில் அளித்தவுடன் அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.“நான் உங்கள் நாட்டுக்கு சைக்கிளில் வந்திருக்கிறேன்” என்று அவர் கூறியது எனக்கு வியப்பைத் தந்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் பயணமாகவே இந்தியா வந்திருந்தாராம் அவர். தாஜ்மகால் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுலா சென்றிருக்கிறார். “இந்தியாவுக்கு வரத் தூண்டுதலாக இருந்தது எது?” என்கிற கேள்விக்கு, “உங்கள் நாட்டின் நடனக்கலைதான் முக்கியக் காரணம். கதகளி, பரதநாட்டியத்துக்கு நான் அடிமை” என்றார். ஐரினியின் சொந்த நாடு கிரீஸ். அங்கிருந்துதான் அவர் இந்தியாவுக்குப் பயணித்திருக்கிறார். “ஈரான் நாட்டைக் கடந்தபோதுதான் திணறி விட்டேன். அங்கே உடலை முழுவதும் உடையால் மறைத்துதான் பெண்கள் பயணம் செய்ய முடியும். கொளுத்தும் வெயிலில் அப்படி சைக்கிளை மிதித்துச் சென்றது பெரும் சவாலாக இருந்தது” என்றார்.

சீனச் சிற்றுண்டி ‘மோமோ’வைத் தயாரித்துச் சுடச்சுட விற்றுக் கொண்டிருந்தார் லோப்சங் டென்சிங். தெளிவாக ஆங்கிலத்தில் உரையாடிய அவரது தாய்நாடு திபெத். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் சுவிட்சர்லாந்தில் இருக்கிறாராம். “என்ன காரணம்?” என்றபோது, “அதுவரை இங்கு அனுமதி கிடைக்கவில்லை. மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து, செவிலியராக வேலை செய்கிறார். அவருடைய கணவராகவே இருந்தாலும் இந்நாட்டில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை தாமதமாகத்தான் கிடைத்தது” என்றார்.

போலீஸ் சீருடையில் உற்சாகமாகக் காபி விநியோகித்துக் கொண்டிருந்தார் கேப்ரியலே. இந்தியப் பயணம் தனது ‘பக்கெட் லிஸ்டில்’ இருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு பிரபல கடையில் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து சாக்லேட்களை விற்கும் பிரிவில் இன்முகத்தோடு விற்பனை செய்து கொண்டிருந்தார் அலீனா. அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். “இது மென்மையாக இருக்கும். இதில் கோகோ அதிகம். இந்தத் தேங்காய் கலந்த சாக்லேட் புதுமையானது. பாதாம் உள்ள சாக்லேட்டின் சுவையே அலாதி” என அவர் சாக்குலேட்டுகள் பற்றி உற்சாகம் குறையாமல் விளக்கிக் கொண்டிருந்தார். ‘சேல்ஸ்மேன்ஷிப்’ என்கிற சொல்லை இனி ‘சேல்ஸ்உமன்ஷிப்’ என்றும் மாற்றிவிடலாம் எனத் தோன்றியது!

ஆக லொசானில் உள்ள சனிக்கிழமை சந்தை என்பது விற்பனையில் மட்டுமல்ல வெவ்வேறு நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட மனித உணர்வுகளின் சங்கமமாகவும் இருந்தது.

(பயணம் தொடரும்)

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 2: பேருந்துப் பயணமும் லொசான் சந்தையும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE