கொடுங்கோல் மன்னன் தைமூர்... பேரைக் கேட்டாலே சும்மா அதிரும் | கல்லறைக் கதைகள் 5

By சி.ஹரிகிருஷ்ணன்

த்தனையோ கொடுங்கோல் மன்னர்களையும் சர்வாதிகாரிகளையும் பார்த்திருக்கிறது. ஆனால், தைமூரைப் போல ஒரு கொடுங்கோலனை அதிகம் கண்டிருக்காது.
தைமூர், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலியப் பேரரசர். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகிவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவனார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.

உலகம் முழுவதையும் வென்று, தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வெறிபிடித்து அலைந்தவர். அதற்காக வாழ்நாள் முழுவதையும் போர்க்களத்திலேயே கழித்தவர் தைமூர். இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளை செங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில், மாகாணங்களை ஆள்வதில் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களைச் சகாடை துருக்கி என்றே அழைத்தார்கள்.


தைமூரின் தந்தை தராகாய்க்குச் சொந்தமாகப் பெரிய நிலப்பரப்பு இருந்தது. 1336ஆம் ஆண்டு தைமூர் பிறந்தார். இவருக்கு எட்டு வயதானபோது தாயார் மற்றும் சகோதரர்களுடன், எதிரிப் பிரிவினரால் சிறைபிடிக்கப்பட்டு சாமர்கண்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின், அங்கிருந்து தப்பி மீண்டும் தங்கள் இடத்துக்குத் திரும்பினர்.

இனத்தின் தளபதி: 16 வயதுச் சிறுவனாக தைமூர் இருந்தபோது பழங்குடியினரிடம் அவர் தந்தை, “இனிமேல் நம் இனத்தின் தளபதி என் மகன்தான்” என்று அறிவித்தார். தன் தந்தைக்குப் பின் அவரின் பணியை தைமூர் தொடர்ந்தார். 18 வயதில் தைமூர், குதிரையேற்றத்திலும் வேட்டையாடுவதிலும் சிறந்து விளங்கினார். மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்கள் வழிவந்த தைமூரின் இனத்தவர் துருக்கி அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். தைமூரும் அவ்வாறே மாறினார்.

பாரசீகக் கல்வியும் உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர், தனது மூதாதையர்களின் பேரரசை மீண்டும் உருவாக்க எண்ணம் கொண்டார். அதற்காகத் தொடர்ந்து போர் புரிந்தார். இளம் வயதில் ஒரு போரின்போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்கு உள்ளானது. அதைச் சரிசெய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டப் பெயரே ‘தைமூர் இ லெங்க்’. இதன் அர்த்தம் ‘நொண்டி தைமூர்’ ஆகும்.

மனிதத்தன்மையற்ற ஆட்சி: தைமூரின் மாபெரும் படை முதலில் பாக்தாத் நகரத்தின் மீது படையெடுத்தது. அதன்பின் தைமூர் பாரசீகத்தின் மீது படையெடுத்தார். பாரசீகத்தில் தைமூரின் மாபெரும் படை வெட்டி வீழ்த்திய வீரர்களின் எண்ணிக்கை 70 ஆயிரம். அடுத்து தைமூர் வென்ற இடம் ரஷ்யாவின் மாஸ்கோ.


தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகளைக் காண காரணம். இரக்கம் காட்டுவதோ, எதிரிகளை ஏனோதானோ என்று விட்டுவிடுவதோ தைமூருக்குப் பிடிக்காத ஒன்று. அடியோடு அழித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார். தைமூரின் ஆட்சி மனிதத் தன்மையற்றதாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களைச் செங்கிஸ்கானைவிடக் கொடுமையாகத் தண்டித்தார். மக்களைக் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினார். கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரத்தை அமைத்து மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தினார்.

இந்தியப் படையெடுப்பு: அவருடைய முன்னோரான செங்கிஸ்கான் செய்யத் தவறிய ஒன்றை 1398இல் தைமூர் செய்தார். அது அவருடைய இந்தியப் படையெடுப்பு.
வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆழமான சிந்து நதியைக் கடந்தாக வேண்டும். இயற்கை அமைத்துத் தந்த இந்தப் பெரும் அரண்களைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைவது கடினம்.
இவற்றைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைந்தவர்கள் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர், கஜினி முகமது உள்ளிட்ட மிகச் சிலரே. பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவுக்கு 1398ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வந்து சேர்ந்தார் தைமூர். சிந்து நதியில் படகுகளை வரிசையாக நிறுத்தி இணைத்துப் பாலத்தை ஏற்படுத்திக் கணநேரத்தில் நதியைக் கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினார்.

சிந்து நதியைக் கடந்த தைமூரின் படை, மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பஞ்சாப் பகுதி முழுவதையும் சூறையாடி வெறியாட்டம் போட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் தைமூரிடம் அடிமைகளாகச் சிக்கினார்கள். ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை பேரின் தலைகளும் சீவப்பட்டன. பின் டிசம்பர் 17, 1398இல் தைமூர், டெல்லி அரியணையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரைக் கைப்பற்றினார். டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், மீரட், லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். அதன் பின்னர் 1400இல் துருக்கி, 1401இல் எகிப்து மற்றும் பாக்தாத் நகரங்களை வென்று, 1404இல் சமர்கண்ட் திரும்பினார் தைமூர். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை.

இந்தியக் கட்டிடக் கலை: பல லட்சம் பேரை வெட்டி வீழ்த்தி ரத்தச் சரித்திரத்துக்குக் காரணமான தைமூரின் மரணம் அவ்வளவு கோரமானதாக இல்லை. சீனாவைக் கைப்பற்றத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர், சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து, 1405ஆம் ஆண்டு உயிரைவிட்டார். அவரது உடலை கஸ்தூரி, பன்னீரால் அடைத்து மஸ்லின் துணியில் சுற்றி சமர்கண்ட் நகரத்திற்கு அனுப்பினார்கள்.

தைமூர் முன்பு தன்னுடன் அழைத்துச் சென்ற இந்தியக் கட்டிடக் கலைஞர்கள், துருக்கி சென்றவுடன் சில மாதங்களிலேயே துருக்கிய மற்றும் பெர்ஷியக் கலைநுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லறை கட்டப்பட்டது. இந்தியக் கட்டிடக் கலைஞர்கள் சமர்கன்ட் நகரில், ‘குர் அமிர்க்’ என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டி முடித்தார்கள்.

தோண்டப்பட்ட கல்லறை: 1941இல் சோவியத்தைச் சேர்ந்த மிகாயில் ஜிராசிமாவ் என்கிற ஆராய்ச்சியாளர் தைமூரின் கல்லறையைத் தோண்டி அவரது உடலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம் தோற்றம், மங்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிப்படுத்தினார். பின் 1942 நவம்பர் மாதம் இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

> முந்தைய அத்தியாயம்: அதிபரின் மரண மர்மம் | யாசர் அராஃபத் - கல்லறைக் கதைகள் 4

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE