ஸ்விஸ் எனும் சொர்க்கம் 1: அழகிய லொசான்!

By ஜி.எஸ்.எஸ்

சுவிட்சர்லாந்து தேசத்தை எப்படி விவரிக்கலாம்? 'சாக்லேட் தேசம்’? கறுப்புப் பணம் படைத்தவர்களின் சொர்க்கம்? கைக்கடிகாரங்களின் தலைமையகம்? நடுநிலை நாடு (இரண்டு உலகப் போர்களிலும் கலந்துகொள்ளவில்லை) என இப்படியெல்லாம் விவரிக்கலாம்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பன்முகம் கொண்ட நாடாக இது இருக்கிறது என்பது அங்கு சென்று தங்கியபோதுதான் தெரிந்தது.

சுற்றுலாப் பயணியாகச் சில நாள்கள் மட்டும் தங்காமல், இளைய மகனோடு சில மாதங்கள் அங்கு தங்கியதில் அந்த நாட்டின் நாடியைப் பெருமளவு கணிக்க முடிந்தது. இந்தியாவிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய ஸ்விஸ் நகரான லொசானுக்கு நேரடி விமானம் கிடையாது. ஜெனீவா வழியாக அல்லது மாற்றுப்பாதையில் பாரிஸ் நகருக்குச் சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். நாங்கள் பாரிஸை அடைந்து அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்லும் ரயிலில் ஏறினோம். சுமார் 5 மணி நேரப் பயணம். இருக்கைகள் வசதியானதாக இருந்தாலும், அது ‘டபுள் டெக்கர்’ ரயில் என்பதால் மாடிப்பகுதியில்தான் எங்களுக்கான இருக்கைகள் கிடைத்தன.

மூன்று மாதங்கள் தங்குவதற்கான ஐந்து கனமான பெட்டிகளை, கீழே உள்ள பெட்டிகள் வைப்பதற்கான பகுதியில் வைத்துவிட்டோம். அது அதிவேக ரயில் என்பதால் சில நிலையங்களில் மட்டுமே நின்றது. எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும் பெட்டிகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை எண்ணிக் கவலையாக இருந்தது. ரயில் நின்றபோதெல்லாம் என் மகனைக் கீழே சென்று பார்த்து வரச் சொன்னேன். இரண்டு முறை இறங்கிச் சென்று பார்த்தவர், பிறகு இறங்கிச் செல்லவில்லை. நான் காரணம் கேட்டபோது, “சுவிட்சர்லாந்துக்கு வந்தாச்சு. இனிமே கவலை இல்லை” என்றார். சுவிட்சர்லாந்து பற்றிய முதல் பிம்பம் இது!

ஜெனிவா ஏரிக்கு அருகே மேற்கு சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரம் லொசான். மூன்று குன்றுகளில் உருவான நகரமும்கூட. சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரத்தில், பிரெஞ்சு மொழிப் பேசும் மக்கள் அதிகம். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் அங்குதான் உள்ளது. எனவே அந்த நகரத்தை ‘ஒலிம்பிக் தலைநகரம்’ என்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் மெட்ரோ ரயில் பாதை உள்ள ஒரே நகரமும் இதுதான். இங்கே பாதசாரிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சாலையைக் கடக்கும் இடத்தில் பாதசாரிகள் இருந்தால், மற்ற வண்டிகள் கண்டிப்பாக வழிவிட வேண்டும். முக்கியச் சாலைகளில், பாதசாரிகள் கடக்கும் இடத்தில் உள்ள ஒரு பொத்தானை இயக்கினால், அவர்களுக்கான பச்சை விளக்கு எரிகிறது. அப்போது வாகனங்கள் நின்று பாதசாரிகளுக்கு வழிவிடுகின்றன.

“உங்களுக்கு ஜெட்லாக் இல்லைன்னா நாளை காலை ரிப்போன் மார்க்கெட் போகலாம்” என்றார் மகன். மேற்கத்திய நாடுகளில் பெரு நகரங்களுக்கு நடுவே, முக்கியச் சாலைகளின் நடுவில்கூடப் பரந்த திறந்த வெளிகள் இருக்கும். இவற்றை ‘ஸ்கொயர்ஸ்’ (சதுக்கங்கள்) என்பார்கள். லொசான் நகரின் சதுக்கத்தில் பிரம்மாண்டமான திறந்தவெளியும் முக்கியச் சாலைகளின் இணைப்புப் பகுதியுமான ரிப்போன், ஒவ்வொரு சனிக்கிழமையும் புது வடிவமெடுக்கிறது. அது விவசாயிகள், வணிகர்களுக்கான நேரடிச் சந்தை.

(பயணம் தொடரும்)

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE