வரும் ஞாயிற்றுக்கிழமை நானும் சச்சுவும் படத்துக்குப் போக வேண்டும், ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டு வைத்திருந்தோம்...
நீண்ட நாள்களுக்குப் பின் இந்த ஏற்பாடு என்பதால் இருவரும் ஆர்வமாகக் காத்திருந்தோம். சனிக்கிழமை இரவு ஆன்லைனில் படத்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டோம். ஞாயிறு வந்தது. சச்சுவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
“சொல்லுங்க சார். அப்படியா சார்.. உம்... ஓகே” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். அவர் முகம் வாடி இருந்தது.
"என்ன ஆச்சு சச்சு??"
"மேனேஜர்தான் கால் பண்ணார் நஸீ. அவசரமா ஏதோ வேலையாம். கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னார்."
"நீ என்ன சொன்ன?"
"முடியாதுன்னு சொல்ல முடியுமா? சரின்னு சொல்லிட்டேன்."
“அதைத் தவிர்த்து இருக்க முடியாதா? ரொம்ப நாள் கழித்து ப்ளான் பண்ணோமே... இன்னைக்கு லீவுதானே?”
எதையும் காதில் வாங்காமல் லேப்டாப் எடுத்தார். வேலையை ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் கழிந்தது. வேலையும் முடிந்தது. ஆனால், பல நாள் திட்டத்தை மேனேஜர் சொத்தப்பிவிட்டார் என்று சச்சுவுக்குக் கோபமும் எரிச்சலும் வந்தது.
சச்சு மட்டுமல்ல, நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘வேண்டாம்’, ‘இல்லை’, ‘முடியாது’ என்று நமக்குச் சொல்லத் தெரிவது இல்லை. இதனால் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம் என்பதை உணர்வதும் இல்லை.
‘இல்லை’ என்று சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தவறாக நினைத்துவிட்டால்? மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டால் என்று பல குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன.
வெற்றியாளர்களாக ஆக வேண்டுமென்றால், ‘என்னால் முடியும்’ என்று சொல்வது எவ்வெளவு முக்கியமோ, அதைப் போல் ‘முடியாது’ என்று சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கான பத்துச் சுலபமான வழிகள்.
1. உங்களுடைய நிலைமையை மற்றவர்கள் புரிந்து கொள்வதைவிட, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, என்னால் மூன்று ப்ராஜெக்டில் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியும்.
2. உங்கள் திட்டங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் யாராவது புதிதாக ஒரு வேலையை உங்கள் மேல் திணித்தால் ‘இல்லை’ என்று சொல்ல மனத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.
3. ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும் என்றால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று காரசாரமாகவும் இருக்க வேண்டியதில்லை.
“இப்போது என் கையில் மூன்று ப்ராஜெக்ட்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் சொல்லும் வேலையை என்னால் செய்ய இயலாது .நீங்கள் காத்திருக்க முடியுமா?” என்று கேட்கலாம். இங்கு ‘இல்லை’ என்றுதான் சொல்கிறோம், ஆனால் கேட்பவர் நம் நிலைமையைப் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாகச் சொல்கிறோம்.
4. அதிகமாக விளக்கங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ‘இல்லை’ என்று சொல்வதற்குச் சங்கடப்படுகிறீர்கள் என்கிற பிம்பத்தைக் கொடுக்காது. தெளிவற்றவர்களாகவே உங்களைக் காட்டும்.
5. ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும், அதே நேரத்தில் உதவ வேண்டும் என்றால், மாற்று யோசனையை அல்லது வேறு நபரிடம் அவர்களை அனுப்பலாம்.
6. ‘முடியாது’, ‘வேண்டாம்’ என்று சொன்னால் மற்றவர்கள் புண்படுவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்று உங்கள் மேல் நல்ல அபிப்ராயத்தை உண்டு பண்ணும். புரிந்து கொள்ளாதவர்களை அப்போதைக்கு விட்டுவிட வேண்டும். அவர்கள் தெளிவாக அவகாசம் கொடுங்கள்.
7. ‘இல்லை’ என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படிச் செய்வதால் உங்களை நீங்களே தவறானவர்களாகக் காட்டுகிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும். ஆனால், பலர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்துவிடுகிறார்கள். ‘இல்லை’, ‘முடியாது’ என்று சொல்வதைவிட, ‘இப்போது முடியாது. உங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று சொல்வது சாலச் சிறந்தது.
8. நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னதற்குப் பின் இருக்கும் உங்கள் மனநிலையைக் கூர்ந்து கவனியுங்கள். சொல்லும் போது கடினமாக இருந்தாலும், அதற்குப் பின் லேசாக இருப்பதை உணர்வீர்கள்.
9. சின்ன சின்ன சந்தர்ப்பங்களில் இல்லை என்று சொல்லும் சூழல் அமைந்தால், சொல்லிவிடுங்கள். பெரிய குழப்பமான சூழ்நிலைகளில் அந்தப் பழக்கம் கை கொடுக்கும்.
10. ‘இல்லை’ என்று சொல்வதாலோ, ‘முடியாது’ என்று விலகுவதாலோ நீங்கள் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.
சச்சு கதைக்கு மீண்டும் வரலாம். அவர் செய்திருக்க வேண்டிய விஷயம், மானேஜரிடம், “சார், இப்போது வேலையாக வெளியே கிளம்புகிறேன். நாளை அலுவலகம் வந்தவுடன் முதல் வேளையாக நீங்கள் சொல்லும் வேலையை ஆரம்பித்துவிடுகிறேன்.”
அப்படிச் செய்திருந்தால் மேனேஜருக்கும் அவர் எல்லை என்ன என்று புரிந்திருக்கும்.
அன்றைய பொழுதைத் திட்டமிட்டபடி கொண்டாடியும் இருக்கலாம். மறு நாள் வேலையையும் நிம்மதியாகக் கவனமாகச் செய்திருக்க முடியும்.
- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.
> முந்தைய அத்தியாயம்: நீங்கள்தான் அந்த வி.ஐ.பி | சக்ஸஸ் ஃபார்முலா - 12
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago