நீங்களும் ஸ்மார்ட்டாக ஆகலாம்! | சக்ஸஸ் ஃபார்முலா - 7

By நஸீமா ரஸாக்

அலுவலகம் முடித்து வந்த சச்சு வழக்கத்தைவிட ஜாலியாக இருந்தார்.

“நஸீ இன்னைக்குப் புதுசா வந்த மேனேஜர்கூட செம காமெடி, எங்க டீம்ல இனி நல்லா பொழுது போகும்.”

“என்ன சொன்னார்?”

“இன்னைக்கு ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்கல, குறைந்தபட்சம் நூறு முறையாவது ஸ்மார்ட், ஸ்மார்ட்னு சொல்லி உயிரை எடுத்துவிட்டார். எங்களுக்கு வீட்டுப்பாடம் வேற கொடுத்து இருக்கிறார்”.

“என்ன வீட்டுப்பாடம்?”

“ஸ்மார்ட். அதாவது ஸ்மார்ட் போன் போல நாங்களும் ஸ்மார்ட் ஆக, முதல்ல ஸ்மார்ட்னா என்னனு தேடச் சொன்னார். எங்கேயோ படிச்ச மாதிரியும் இருக்கு. ஆனா டக்குனு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் மேன்தான் ஞாபகத்துக்கு வருது.”

“சரி, நீ வீட்டுப் பாடம் பண்ணு.”

“பண்ணு இல்ல… பண்றோம். ப்ளீஸ்”.

“சரி சொல்றேன் கேட்டுக்கோ. S.M.A.R.T. இதை ஒரே வார்த்தையாகப் படிக்காமல் தனித் தனி எழுத்துகளாகப் படிக்கணும். திட்டம் போடுறோம், எழுதுறோம், கற்றுக் கொள்கிறோம். இதெல்லாம் எதுக்கு?”

“எடுத்த வேலையை முடிக்க.”

“அதாவது நமது இலக்கை அடைய நமக்குக் கிடைத்த ஒரு சிறந்த வஸ்துதான் S.M.A.R.T. சிலர் உணர்ச்சியில், ஒரு வீம்பில் மற்றவர்களிடம் கெத்துகாட்ட சட்டுபுட்டுனு ஒரு வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் இந்த விஷயம் செய்து முடித்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுச் சரியான இலக்கைத் தேர்ந்தெடுப்பார்கள். எது எப்படி இருந்தாலும் நீங்க எடுத்த இலக்கு ஸ்மார்ட்டா இருக்கா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்ல இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஒரு படி. இந்தப் படிகள் எல்லாம் சரியாக நம் இலக்கில் பொருந்தினால் பாதிக் கிணற்றைத் தாண்டிவிட முடியும். மீதியை உங்கள் உழைப்பு மூலம் வென்றுவிடலாம். அதற்கான வழிகளைக் காணலாம்.

1. S - Specific அதாவது ‘குறிப்பிட்ட இலக்காக’ இருக்க வேண்டும். உங்கள் இலக்கு எப்போதும் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ‘நான் பணக்காரன் ஆக வேண்டும்’,‘நான் சம்பாதிக்க வேண்டும்.’ அதற்குப் பதிலாக, இலக்குத் தெளிவாக இருக்க வேண்டும். ‘நான் வருடத்திற்கு இரண்டு முறை சுற்றுலா செல்ல வேண்டும்.’ ‘இந்த வருடம் நகைகளை மீட்க வேண்டும்”.

2. M- Measurable- உங்கள் இலக்கு அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும். சச்சு மூன்று மாதங்களில் உடல் எடையைக் குறைத்திருந்தார் . அவருக்கும் அவரைப் பார்த்த மற்றவர்களுக்கும் அது தெரிந்தது.

3. A- Appropriate- உங்கள் இலக்கு உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து உங்கள் இலக்கை நிர்ணயித்தீர்கள் என்றால் அது உங்களுக்குச் சரியானதாக இருக்காது. நண்பனுக்கு ஒலிம்பிக்கில் ஓட வேண்டும் . ஆனால், எனக்குச் சர்வதேச ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். நான் நண்பன் செய்யும் வேலைகளைச் செய்தால் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறக் காலம் எடுக்கும். ஒலிம்பிக்கில் ஓட வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. உங்கள் இலக்கை உங்களுக்குப் பொருத்தமானதாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. R- Realistic - இலக்கு யதார்த்தமானதாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததை எல்லாம் அடையலாம். இருப்பினும் யதார்த்தமாக இல்லாத இலக்கு உருகிப் போகும் ஐஸ்க்ரீமுக்குச் சமம். ஒரு தொழிலை ஆரம்பித்து இரண்டு மாதங்களில் முதலீடு செய்த பணத்தைச் சம்பாதித்து விடுவேன் என்பது கண்டிப்பாக யதார்த்தமான இலக்கு அல்ல. தொழில் ஆரம்பித்து அது வேர் பிடிக்க ஒரு வருடம் எடுக்கலாம் அதுவரை பொறுமையாக இருந்தால் மட்டுமே, தொடர்ந்து பயணிக்க முடியும்.

5. T- Timely உங்கள் இலக்குக்குக் கால அளவு இருக்க வேண்டும். இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் அப்படி ஏதாவது ஒரு காலத்தை இலக்கிற்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் கண்ணைக் கட்டி ககாட்டில் விட்ட கதையாக நாம் சுற்றிக் கொண்டே இருப்போம்.

6. மேலே சொன்ன ஸ்மார்ட் அனைத்தும் உங்கள் இலக்கிற்கு இருக்க வேண்டும். அதில் ஒன்று குறைந்தாலும் உங்கள் உழைப்பு உப்பு இல்லாத பிரியாணியாகிவிடும்.

7. இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில் பொறுமை இருக்க வேண்டும். ஃபாஸ்ட் ட்ராக்கில் வெற்றியை எதிர்பார்த்தால், அதைவிட வேகமாக அது மறைந்துவிடும்.

8. தேவையான போது இலக்குகளில் சின்ன சின்ன மாற்றங்கள் வருவதை வரவேற்க வேண்டும்.

9.ஸ்மார்ட்டாக மட்டுமல்லாமல் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்றால் உங்கள் இலக்கு உங்களுடைய வேட்கையாக இருக்க வேண்டும்.

சச்சு நான் சொன்ன அனைத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் இதை மீண்டும் மீண்டும் அசைபோட்டு வாழ்க்கையின் பகுதியாக மாற்றினால் மட்டுமே ஸ்மார்ட்டாக இருக்க முடியும்!

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.

> முந்தைய அத்தியாயம்: ஏன், எதற்கு என்று கேள்வி கேளுங்கள்! | சக்ஸஸ் ஃபார்முலா - 6

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்