அனுபவம்: மேலாளர் எங்கே?

By Guest Author

நான் பணியாற்றிய சிற்றூர் வங்கிக் கிளையில் அன்று காலை தொலைபேசி ஒலித்தபோது மணி 10.15. எதிர்முனையில் இருப்பவர், ‘மேலாளர் இருக்கிறாரா' என்று கேட்டார்.

அது திங்கள்கிழமை. வார விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றவர், சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்க வேண்டும்.

“சார், நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டேன்.

“தெரிந்தால்தான் சொல்லுவீங்களோ? நான் வட்டார அலுவலகத்திலிருந்து சீனியர் மேனேஜர் பேசுறேன். பக்கத்துக் கிளைக்கு வந்திருக்கேன். எங்கே உங்க மேனேஜர்? அவர் கிட்ட போனைக் கொடுங்க” என்றார்.

“சார், சாப்பிடப் போயிருக்கார், வந்துடுவார்” என்றேன்.

“அவர் அங்கே வந்திருக்க வாய்ப்பே இல்ல...”

இப்போது எனக்குக் கொஞ்சம் துணிவு வந்துவிட்டது. “அது எப்படி அவர் வந்திருக்க மாட்டார்னு சொல்றீங்க?” என்று கேட்டேன்.

“அப்படின்னா அவர் வரலைன்னு ஒப்புக்கிறீங்களா? ஏன் உண்மையை மறைக்கப் பார்த்தீங்க? நான் ஜீப்பில் திருத்தணியைக் கடந்து வரும்போது உங்க மேனேஜர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்ததைப் பார்த்தேன். இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும் அவர் வந்து சேர. பத்து மணிக்கு முன்பாக ஒரு மேனேஜர் வர வேண்டாமா? அவரைக் காப்பாற்ற ஒரு கேஷியரா?" என்று ஒரு பிடிபிடித்தார்.

“ஏன் சார், உங்க ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்டு வந்திருக்கலாமே, தாமதமாகியிருக்காதே...” என்று கேட்டுவிட்டேன்.

ஓர் இளம் ஊழியரின் இந்தப் பேச்சைத் திமிராகக் கருத வாய்ப்புண்டு. ஆனால் அவர், “மேனேஜர் வந்ததும் இந்தக் கிளைக்கு போன் பண்ணச் சொல்லுங்க” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

மேலாளர் வந்ததும் நடந்ததைச் சொன்னேன். அவர் உயரதிகாரியை அழைத்துப் பேசினார். சற்று நேரத்தில் எங்கள் கிளைக்கு வந்த அந்த உயரதிகாரி, கைகுலுக்கி விட்டு விடைபெற்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு உள்ளூரில் மே நாள் கொண்டாட்டம் நடந்தது. ஒரு வாரம் பணி நேரம் போக, அந்த நிகழ்ச்சிக்காக உழைத்ததில் காய்ச்சலில் விழுந்தேன்.

அன்று பிற்பகல் பக்கத்து வீட்டுப் பையன் வந்து, வட்டார அலுவலக ஜீப் வங்கிக்கு வந்திருக்கிறது என்று சொன்னான். நான் மரியாதை நிமித்தம் அதிகாரியைப் பார்க்க வங்கியை நோக்கி நடந்தேன். ஓர் ஊழியரை அழைத்துக் கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தார் முன்பு கிளைக்கு வந்த அதே உயரதிகாரி.

“எதற்குச் சிரமத்தோடு வெளியே வந்தீங்க? காய்ச்சல்னு சொன்னாங்க. உங்களிடம் நலம் விசாரிக்கத்தான் வந்து கொண்டிருந்தேன்” என்று சொல்லி என்னை இன்னொரு முறை வியக்க வைத்தார் அந்த உயரதிகாரி.

மறுநாள் அலுவலகம் சென்றேன். என் சமூகப் பணிகள் பிடிக்காத மேலாளர், மேலிடத்துக்கு என்னைப் பற்றிப் புகார் அளித்திருக்கிறார். அதை விசாரிக்க வந்த உயரதிகாரி வங்கியிலும் ஊரிலும் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, எங்கள் மேலாளரிடம், ‘உங்கள் அணுகுமுறை தவறு' என்று சொல்லிவிட்டே என்னைப் பார்க்க வந்தார் என்பதை அறிந்ததும் அவர்மீது மதிப்பு இன்னும் அதிகரித்தது.

- எஸ்.வி.வேணுகோபாலன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE