அமுல் பேபியும் சில்வெஸ்டர் டா குன்ஹாவும்

By செய்திப்பிரிவு

டிஜிட்டல் யுகத்தில் தங்கள் நிறுவனத்தை வெளிக்காட்டவும் வியாபாரத்தைப் பெருக்கவும் பல உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக விளம்பரங்கள், இதில் பெரும் பங்காற்றுகின்றன. நேரில் சென்று கூவிக் கூவி விற்பதைவிட, விளம்பரங்களின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்து, பொருள்களை வாங்க வைப்பது சுலபம். இப்படிப் பல நிறுவனங்கள் உருவாக்கிய விளம்பரங்கள், அந்தப் பொருள்களுக்கான சந்தையை அதிகரித்ததோடு, பார்வையாளர்களின் ரசனைக்குரியவையாகவும் அமைந்துள்ளன.

அந்த விதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டது, ‘அமுல் பேபி’ விளம்பரம். "அட்டர்லி பட்டர்லி டெலிசியஸ்” என்று மழலைக் குரலில், சிரிப்போடு வரும் கார்ட்டூன் குட்டிப் பெண்ணை அனைவருக்கும் பிடிக்கும். அரை நூற்றாண்டுக்கு மேல் அமுல் விளம்பரங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அமுல் நிறுவனப் பொருள்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் இருக்கின்றன.

சில்வெஸ்டர் டா குன்ஹா

அமுல் விளம்பரத்தின் குட்டிப் பெண் கார்ட்டூன் 1966 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன், அமுல் வெண்ணெய்யை மக்களிடையே பிரபலபடுத்த நினைத்து, ‘டா குன்ஹ’ தொடர்பு நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்தார். வர்கீஸ் குரியன் இதற்கு இரண்டு நிபந்தனைகளை வைத்தார். வரைவதற்கு எளிமையாகவும் அனைவரின் மனதில் பதியும் வகையிலும் இருக்க வேண்டும் என்றார்.

அப்போது டா குன்ஹ நிறுவனத்தின் தலைவராக இருந்த சில்வெஸ்டர் டா குன்ஹ 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஒளிப்படங்களைப் பார்த்தும் எதுவும் சரியாக அமையவில்லை. பின்னர் தன்னுடைய நெருங்கிய நண்பரின் மகளான ஷோபா தரூரின் ஒளிப்படத்தை, கார்ட்டூனாக உருவாக்கினார். இந்த விளம்பரத்திற்கான சொற்றொடரை சில்வெஸ்டர் தேடிக்கொண்டிருந்த பொழுது, தன் மனைவியிடம் இது குழந்தைகளையும் பெண்களையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்றார். அதற்கு நிஷா குன்ஹ, "அட்டர்லி அமுல்" என்று கூற அதனை சில்வெஸ்டர் “அட்டர்லி பட்டர்லி டெலிசியஸ்” என்று பிரபலமான சொற்றொடராக மாற்றி அமைத்தார். பட்டர்லி என்பதற்கு ஆங்கிலத்தில் பொருள் இல்லாததால் அந்த நிறுவனத்தில் இது பேசும் பொருளாக ஆனது.

சில்வெஸ்டருக்குக் காத்திருந்த மற்றொரு தடை, அந்த நேரத்தில் தொலைகாட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்ய அதிக தொகை வசூலிக்கப்பட்டது. அதனால் அவர்கள் செய்திப் பலகையை நாடினார்கள். அந்த யோசனை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சிவப்பு போல்கா புள்ளி உடை அணிந்த சிறுமி இந்தியாவின் மிகவும் பிரபலமான விளம்பரப் பாத்திரமாக மாறினாள். பண்டிகை நேரத்தில் நம் குழந்தைகளின் கண்கள் இனிப்புகளை நோக்கிச் செல்வதைப் போல, ஒரு கண்ணை முடிக்கொண்டு மற்றொரு கண்ணை வெண்ணெய் மீது வைத்து இருக்கும் குறும்புகாரச் சிறுமியாக இந்த கார்ட்டூனை வடிவமைத்துள்ளனர்.

அவள் தன் இரு கால்களைத் தரையில் மண்டியிட்டு, "இன்று எங்களுக்கு அமுல் வெண்ணெய்யுடன் ரொட்டியைக் கொடுங்கள்" என்று பிரார்த்தனை செய்யும் விளம்பரப் பலகையை முதல் முதலில் வெளியிட்டு, மக்களின் மனங்களைக் கவர்ந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் பலருக்குப் பிடித்த விளம்பரக் கதாபாத்திரமாகத் திகழ்கிறார் அமுல் சிறுமி .

வெண்ணெய்யை மட்டும் வைத்து விளம்பரம் செய்தால் நீண்ட காலம் நிலைக்காது என்பதை உணர்ந்த சில்வெஸ்டர், சமூக வலைத்தள யுகத்தில், சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் பல பிரபலங்களையும் அமுல் கார்ட்டூன்களுடன் சேர்த்து மீமாக வடிவமைத்து மக்களைக் கவர்ந்தார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமரானது, ராகுல் காந்தி நரேந்திர மோடியைக் கட்டிப்பிடித்துக்கொண்டது, கேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி சீசன் உள்பட அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அமுல் கார்ட்டூன் சிறுமியுடன் இணைத்து மீம்களாக உருவாக்கி இணையத்தில் வைரலாக்கினர்.

மக்கள் மனதில் அமுல் சிறுமிக்கு எப்போதும் இடம் உண்டு. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் நம் கண்களைக் கவர்ந்து, விளம்பரங்களின் மூலமாக நம் உணர்வைத் தூண்டி, அமுல் பொருள்களைப் பயன்படுத்த வைத்துவிடுவாள் இந்தச் சிறுமி. அரசியல், சினிமா, கிரிக்கெட், பண்டிகைகள் என்று இவள் கால் தடம் பதிக்காத இடம் இல்லை. காலை உணவில் பிரெட் பட்டர் ஆகியவற்றோடு தற்பொழுது பீட்சா பர்கர் வந்துவிட்டது. விளம்பரங்கள் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இருப்பினும் அமுல் சிறுமியைப் பார்தால் நாமும் குழந்தையாக மாறிவிடுவோம். அமுல் சிறுமியைப் படைத்த சில்வெஸ்டர் டா குன்ஹா 92 வயதில் கடந்த ஜூன் 20 அன்று காலமானார்.

- கெளதம். ஆர், பயிற்சி இதழாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE