கடந்த நிதி ஆண்டில் விற்பனையான ராயல் என்பீல்ட் வாகனங்களின் எண்ணிக்கை 8 லட்சம். இதில் 1 லட்சம் பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்நிறுவனத்தின் வருடாந்திர லாபம் ரூ.2 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது அந்நிறுவனம் அடைந்திருக்கும் புதிய உச்சம். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால் நிலைமை இப்படி இல்லை.
திரைப்படங்கள் வழியாக மக்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் பிரபலம் என்ற போதிலும், பெரிய அளவு விற்பனை இல்லை. ஆண்டுக்கு 20 ஆயிரம் வாகனங்கள் விற்பனையானால் அதிகபட்சம். இழுத்து மூடப்படும் நிலையில் நிறுவனம் இருந்தது. டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார் (Eicher Motors) நிறுவனர் விக்ரம் லாலின்மகன் சித்தார்த்த லால், ராயல் என்பீல்டுக்கு 2000-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 26.
வாகனக் காதலர். பைக்கில் அன்றாடம் சுற்றுப் பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டவர். ராயல் என்பீல்ட் நிறுவனத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று உறுதியெடுக்கிறார். பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, 2009-ம் ஆண்டில், புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்ட் கிளாசிக் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த மாடல், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய வாகன உலகில் ஒரு கல்ட் (Cult) பைக்காக மாறுகிறது. அதுவரையில், ராயல் என்பீல்டின் வாடிக்கையாளர்கள் 45 வயதுக்குமேற்பட்டவர்களாக இருந்தனர்.
» மக்களவையில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது
» தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் நிலவும்
கிளாசிக் அறிமுகத்துக்குப் பிறகு ராயல் என்பீல்டின் சராசரி வாடிக்கையாளர்களின் வயது 26 ஆக மாறியது. இந்த 15 ஆண்டுகளில் இந்தியா தவிர்த்து, பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ராயல் என்பீல்ட் ஆலைகள் திறந்துள்ளது.
ராயல் என்பீல்டின் மறுஎழுச்சி காலகட்டத்தில் சித்தார்த்த லாலுடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் ஒருவர் பி.கோவிந்தராஜன். மயிலாடுதுறைக்காரர். இவரும் சித்தார்த்த லாலும் நெருங்கிய நண்பர்களும்கூட. கோவிந்தராஜனின் தனித்துவம், அவர் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, வாகன தயாரிப்பு, வடிவமைப்பு சார்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவர்.
ராயல் என்பீல்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களில் கோவிந்தராஜனின் பங்கு மிக முக்கியமானது. மேலாளராக தன் பணியைத் தொடங்கியவர் இன்று ராயல் என்பீல்டின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பொறுப்பு வகிக்கிறார். சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கும் ராயல் என்பீல்டின் தலைமை அலுவலகத்தில், கோவிந்தராஜனை ஒரு நண்பகல் வேளையில் சந்தித்தேன். அவரது அறையின் ஒரு மூலையில் கிளாசிக் 500சிசி மாடலின் மினியேச்சர் வைக்கப்பட்டிருந்தது. தங்கம்போல் அது ஜொலித்துக் கொண்டிருந்தது. உரையாடல் தொடங்கியது…
ராயல் என்பீல்ட் மறுபிறப்பு எடுத்த காலகட்டம் என்று 2009-ம் ஆண்டை நாம் சொல்ல முடியும். பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, யமஹா ஆர்15 ஆகிய மாடல்கள் பெரும் வரவேற்பை பெறத் தொடங்கிய காலகட்டம் அது. ஸ்போர்ட்ஸ் மாடல்கள் இளைஞர்களின் தேர்வாக இருந்தன. இத்தகைய ஒரு சூழலில்தான், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சந்தையை இழந்திருந்த ராயல் என்பீல்ட், மீண்டும் களமிறங்கியது. அதுவும் ரெட்ரோ மாடலில் (பழைமை தோற்றம்) அறிமுகமாகிறது. ஆச்சர்யமூட்டும் விதமாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் ராயல் என்பீல்ட் இந்திய வாகன உலகில் ஒரு முன்னுதாரணத்தைக் கட்டியெழுப்பியது. எப்படி இந்த மறுஎழுச்சி சாத்தியமானது?
1980-களுக்குப் பிறகு ராயல் என்பீல்ட் விற்பனை முற்றிலும் சரிந்திருந்தபோதிலும், மக்கள் மனதில் ராயல் என்பீல்ட் மீது தனி மதிப்பு இருந்தது. அதற்குக் காரணம், அதன் தனித்துவமான வடிவமைப்பு. அதேசமயம், இந்திய ராணுவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், அது ராணுவத்துக்கான பைக் என்றும் பொதுப் பயன்
பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் ஒரு பார்வை நிலவியது.
ராயல் என்பீல்ட் விற்பனை குறைவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.இந்தப் பார்வையை மாற்றும் வகையில், அனைவருக்கும் ஏற்ற தன்மையில் வடிவமைத்தால், மீண்டும் மக்கள் ராயல் என்பீல்டை நோக்கி வருவார்கள் என்று நம்பினோம். ராயல் என்பீல்டின் ஆன்மா குறையாமல், தற்போதைய காலகட்டத்தின் தேவைக்கு ஏற்ப அதன் வடிவத்தை மாற்ற முடிவு செய்தோம்.
ராயல் என்பீல்டில் இன்ஜினில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. அந்த இன்ஜின்கள் காஸ்ட் அயனில் செய்யப்பட்டவை. நவீன சூழலுக்கு ஏற்றதாக அது இல்லை. காஸ்ட் அயன் இன்ஜின்களுக்குப் பதிலாக யுசிஇ என்றழைக்கப்படும் யுனிட் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினை அறிமுகம் செய்தோம். சொல்லப்போனால், யுசிஇ வழியாகவே ராயல் என்பீல்ட் மறுபிறப்பு எடுத்தது.
அந்த இன்ஜினால் ராயல் என்பீல்டின் செயல்திறன் பலமடங்கு மேம்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரேக், கியர் சிஸ்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்தோம். அடுத்து எங்கள் முன் இருந்த கேள்வி, ராயல் என்பீல்டில் பயணிக்கும் ஒருவருக்கு, அது என்ன உணர்வைக் கொடுக்க வேண்டும்? மனிதன் - இயந்திரம் - நிலம். இந்த மூன்றை
யும் இணைக்கக்கூடியதாக ராயல் என்பீல்ட் இருக்க வேண்டும் என்பது எங்களது இலக்காக இருந்தது.
அதாவது, வேலை தவிர்த்து ஒரு மனிதன் தனக்கான ஓய்வை செலவிடுவதற்கான வாகனமாக அது இருக்க வேண்டும். ஐடி துறை அப்போது உச்சம் அடைந்திருந்தது. அன்றாடம் 9 மணி நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் சூழல். வாரம் இரு நாள் விடுமுறை. இந்த விடுமுறையை அர்த்தப்படுத்தக்கூடியதாக ராயல் என்பீல்ட் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படியென்றால், அது சுத்தமான, கலப்படமற்ற பயண அனுபவத்தைத் தர வேண்டும்.
நிதானமாக ஓட்டுவதற்குரியதாக இருக்க வேண்டும்; பார்ப்பதற்கு ஆபரணம் போல் இருக்க வேண்டும்; ஓட்டுவதற்கு கம்பீரமாக இருக்க வேண்டும்; இவை எல்லாவற்றை உள்ளடக்கியும் அது எளிமையாக இருக்க வேண்டும். இத்தகைய அழகியல் தன்மை நிறைந்ததாக ராயல் என்பீல்டை மறுவடிவமைப்பு செய்தோம். ராயல் என்பீல்ட் புத்துயிர் பெற்றது.
ராயல் என்பீல்டின் தோற்றம் எவரையும் வசீகரிக்கக்கூடியது என்றபோதிலும், அது குறித்து ஒரு விமர்சனமும் எழுகிறது. காரணம், அதன் தோற்றத்தில் வெளிப்படும் தீவிர ஆண்தன்மை. பாலின சமத்துவ தளத்தில் நின்று அணுகும்போது, அதன் ஆண்தன்மைமிக்க தோற்றத்தை நாம் பெருமிதத்துக்குரியதாக முன்வைக்க முடியாது. தன் வடிவமைப்பில், பாலின சமத்துவத்துவத்தை ராயல் என்பீல்ட் எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது?
புல்லட், கிளாசிக் மாடல்களில் நீங்கள் சொல்லும் ஆண்தன்மை வெளிப்படலாம். ஆனால், தண்டர்பேர்ட், ஹிமாலயன், மீட்டியர், ஹண்டர் மாடல்களில் அத்தகைய தன்மையை நீங்கள் பார்க்க முடியாது. அவற்றில் வெளிப்படுவது ராயல் என்பீல்டுக்கென்று தனித்துவமாக உள்ள ஒரு தோற்றம்.
மீட்டியர் அறிமுகத்துக்குப் பிறகு ராயல் என்பீல்ட் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரேசிலில் மீட்டியர் விற்பனையில் 20 சதவீத வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். தற்போது இந்தியாவிலும் பெண்கள் ராயல் என்பீல்ட் பயணம் சார்ந்து குழு அமைக்கின்றனர்.
ஒரு முன்னணி கார் நிறுவனத்தின் சமீபத்திய மாடல் ஒன்று, அப்படியே ஆடி நிறுவனத்தின்மாடலை நகல் செய்ததுபோல் இருக்கிறது. தற்போது வெளியாகும் வாகனங்களில் தனித்துவமிக்க வடிவமைப்பைப் பார்ப்பது அரிதாக உள்ளது. ராயல் என்பீல்டின் சமீபத்திய வெளியீடான ஹண்டர் மாடலில்கூட பிரபலமான பிரிட்டன் இருசக்கர வாகன நிறுவனமான டிரையம்ப் போனவில்லின் சாயலை பார்க்க முடிகிறது. போனவில்லை மனதில் கொண்டுதான் ஹண்டரை வடிவமைத்தீர்களா?
இல்லை. நாங்கள் ஒருபோதும் பிற நிறுவனங்களின் மாடல்களை நகல் செய்வதில்லை. இன்ஸ்பிரேஷன் எடுப்பதுண்டு. நகலுக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். இன்ஸ்பிரேசன் என்பது ஒரு வடிவமைப்பில் ஏதோவொன்று உங்களுக்குதூண்டுகோலாக அமைவது.
அந்த இன்ஸ்பிரேஷசனை எடுத்துக் கொண்டு உங்கள் பாணியில் தனித்துவமான வடிவமைப்பை உருவாக்க முடியும். அப்படிப்பார்த்தால், வெஸ்பா, ஆடி, போக்ஸ்வேகன் என பல தயாரிப்புகள் எங்களுக்கு தூண்டு கோலாக இருப்பதுண்டு. வாகனங்கள் என்றில்லை, ஒரு ஐபோன் டிசைன் எங்களுக்கு தூண்டுகோலாக அமையும்.
ராயல் என்பீல்டின் ஸ்பீடோ மீட்டரில் உள்ள முள்ளின் வடிவமைப்பானது, ஹெலிகாப்டரின் ஸ்பீடோ மீட்டரின் வடிவமைப்பிலிருந்து தூண்டுகோல் பெற்றது. இதை வாகனத் துறையில் ‘மூட் போர்ட்’ என்பார்கள். இதற்கும் நகல் எடுப்பதற்கும் தொடர்பில்லை. எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் வாகனத்தின் வடிவமைப்பு என்பது அழகியல் ரீதியாக பிரபஞ்சத்தில் நிகழும் ஒரு முன்னகர்வாக இருக்க வேண்டும்.
ஒரு புதிய மாடலுக்கான ஐடியா எப்படி உருவாகும்? ஒரு ஐடியா தயாரிப்பாக மாறுவதற்கு இடையில் உள்ள நடைமுறைகள் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?
பொதுவாக, நாங்கள் அடிக்கடி இமயமலையில் ராயல் என்பீல்டை ஓட்டி, சோதனை நிகழ்த்துவோம். ஒருமுறை இமயமலை வழித்தடத்தில் கிளாசிக் மாடலில் பயணம் செய்தபோது, அந்த வழித்தடத்துக்கு கிளாசிக் மாடலின் வீல் பேஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் போதவில்லை என்பதை உணர்ந்தோம். அத்தகைய வழித்தடங்களுக்கு வாகனத்தின் வடிவமைப்பு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தோம்.
அப்படித்தான் எங்களது பிரபலமான மாடல் ஹிமாலயனுக்கான ஐடியா உதயமானது. முதலில் வாகனத்தின் உத்தேச வடிவமைப்பை படமாக வரைவோம். அதற்கேற்றாற்போல் மாதிரி வாகனம் ஒன்றை உருவாக்குவோம். அது முழுமையான வாகனமாக இருக்காது. எங்களது மற்ற மாடல்களிலிருந்து பாகங்கள் எடுத்து அந்த பைக்கை உருவாக்குவோம். அதன் பாகங்கள் adjustable ஆக இருக்கும்.
ஹிமாலயன் மாடலைப் பொறுத்தவரையில், இந்த அட்ஜெஸ்டபிள் பாகங்கள் கொண்டு உருவாக்கிய மாதிரி பைக்கை எடுத்து இமய மலையில் ஓட்டினோம். இந்த நில அமைப்புக்கு சஸ்பென்சன், ஹேண்டில் பார், சீட், ஹெட்லைட் என ஒவ்வொரு பாகமும் எப்படி இருந்தால் வசதியாக இருக்கும் என்று நுணுக்கமாக ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஹிமாலயன். ஒரு மாடலுக்கான ஐடியா உதயமாகி, அதுவாகனமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு செல்வதற்கு சராசரியாக 4 ஆண்டுகள் வரை ஆகும்.
ராயல் என்பீல்டை ஓட்டும்போது கிடைக்கும் தனித்த அனுபவத்துக்கு, அந்த வாகனத்தின் சத்தமும் அதிர்வும் முக்கிய காரணிகளாக உள்ளன. தற்போது ராயல் என்பீல்ட் மின்வாகனப் பிரிவில் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். மின்வாகனமாக மாறும்போது, இந்த அனுபவத்தை தக்கவைக்க முடியாது, இல்லையா. எனில், இ-ராயல் என்பீல்ட் என்ன வகையான அனுபவத்தைக் கொடுக்கப்போகிறது?
இவ்வளவு நாளும் வாகனம் என்பது இயந்திர பாகங்களால் ஆனதாக இருந்தது. இனி, அது பெரும்பான்மையாக மின்னணு பாகங்களாக இருக்கும். வாகனங்கள் கிளவுடில் (Cloud) இணைக்கப்பட்டிருக்கும். ஆக, டிஜிட்டல் ரீதியான அனுபவத்தை தனித்துவமாக வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். டிஜிட்டல் அனுபவங்களை எவ்வளவு தூரம் உங்களது உணர்வோடு பிணைக்க முடியும் என்பதில்தான் எங்களது தனித்துவம் வெளிப்படும்.
அதேசமயம், மின்வாகனப் பிரிவை நோக்கி நகர்ந்தாலும், ராயல் என்பீல்ட் அதன் சாராம்சத்திலிருந்து விலகாது. இவ்வளவு ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி வந்திருக்கும், ‘ராயல் என்பீல்ட் யுனிவர்’ஸின் அங்கமாகவே அதன் மின்வாகனங்களும் இருக்கும்.
ராயல் என்பீல்ட் தமிழ்நாட்டு நிறுவனமாக மாறியது எப்படி?
ராயல் என்பீல்ட் ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யமளிக்கக்கூடும். பிரிட்டனில் தொடங்கப்பட்ட ராயல் என்பீல்ட் தமிழ்நாட்டு நிறுவனமாக மாறியதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டனில் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகவே ராயல் என்பீல்ட் தொடங்கப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சைக்கிளில் மோட்டாரை இணைத்து வடிவமைப்பில் புதிய முன்னெடுப்புகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே - இன்று வரையில் ராயல் என்பீல்டின் அடையாளமாக இருக்கும் - ‘புல்லட்’ மாடல் 1932-ல் அறிமுகமானது.
மிக உறுதியான கட்டமைப்பை கொண்டிருந்ததாலும், கரடுமுரடான பகுதிகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருந்ததாலும், பிரிட்டன் அரசு இரண்டாம் உலகப் போரில் ராணுவப் பயன்பாட்டுக்கு புல்லட்டைப் பயன்படுத்தியது. இந்தியா சுதந்திரமடைந்த சமயம்.
1949-ம் ஆண்டு, சென்னையில் கே.ஆர். சுந்தரம் ஐயர், ராயல் என்பீல்ட் உட்பட பிரிட்டிஷ் பைக்குகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்காக ‘மெட்ராஸ் மோட்டார்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
இந்திய அரசு தனது ராணுவத்தில் ராயல் என்பீல்டைப் பயன்படுத்த முடிவு செய்து மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை அணுகியது. இது மெட்ராஸ் மோட்டார்ஸுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது.
பிரிட்டனிலிருந்து அதிக எண்ணிக்கையில் வாகனத்தை இந்தியாவுக்கு அனுப்புவதை விடவும், மெட்ராஸ் மோட்டாருடன் இணைந்து இந்தியாவிலேயே ஆலை தொடங்க ராயல் என்பீல்ட் நிறுவனம் முடிவு செய்தது.
அப்படியாக, 1955-ம் ஆண்டு திருவெற்றியூரில் ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கான ஆலை தொடங்கப்பட்டது. பல்வேறு நிர்வாகக் காரணங்களால் 1971-ல் பிரிட்டனில் உள்ள ராயல் என்பீல்டின் தாய் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், தமிழ்நாடே ராயல் என்பீல்டுக்கான செயல்பாட்டு மையமாக மாறியது.
ராணுவத்தை முதன்மை இலக்காகக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்ட நிலையில், பொதுமக்
கள் ராயல் என்பீல்டை வாங்குவது குறையலானது. இதனால், ராயல் என்பீல்ட் கடும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் 1994-ம் ஆண்டு, டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் ராயல் என்பீல்டை வாங்கியது. இன்று எய்ஷர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் ராயல் என்பீல்ட் 90 சதவீதத்துக்கு மேல் பங்கு வகிக்கிறது.
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 mins ago
சிறப்புப் பக்கம்
14 mins ago
சிறப்புப் பக்கம்
18 mins ago
சிறப்புப் பக்கம்
43 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago