சபாஷ் சாணக்கியா: நிகழ்காலமே நிதர்சனம்!

By சோம.வீரப்பன்

நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை. அவரது பையன் சிஏ தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்ததாகப் பெருமையாகவும், அதே சமயம் சிறிது கவலையாகவும் சொன்னார் நண்பர்!

பையனை எனக்குச் சிறுவயது முதலே தெரியும். படிப்பு ஒன்றே வேலை. சும்மா வாழ்த்துச் சொல்லலாமே என்றவுடன் வாங்க என அவனது அறைக்கு அழைத்துச் சென்றார் அவர். கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்தது. ஐந்தாறு முறை தட்டிய பின்னர் தான் திறக்கப்பட்டது.

பையனைப் பார்த்ததும் பயந்து விட்டேன். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்திருக்கணும். `நேற்று பைனான்ஸியல் ரிப்போர்ட்டிங் (Financial Reporting) பரீட்சை எழுதி வந்தவன் தான். ஏதோ பித்துப் பிடித்தவன் போலப் பிதற்றிக் கொண்டே இருக்கிறான் ' என்றார். தேர்வெல்லாம் முடிந்து விட்டதா என்று கேட்டதற்கு மறு நாள் திங்கட்கிழமை பைனான்ஷியல் மேனேஜ்மெண்ட் (Financial Management) என்றும் , அது தவிர இன்னும் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன என்றார்.

உடனே அவர் மகன், `அட போங்கப்பா, முதல் பேப்பரே ஊத்திக்கிச்சு. சிஎப்எஸ்-ல் 16 மார்க்கைக் கோட்டை விட்டுட்டேன். எவ்வளவோ தயார் செய்தும் எல்லாம் வீண் ' என்றான்.

நான், `தம்பி, நடந்ததை விடுப்பா. மிச்சமுள்ள மூன்றையும் நல்லா எழுதலாமே' என்றேன். ஆனால் அவனோ, `அங்கிள், எனக்கு ஆடிட்டிங் பேப்பரை நினைத்தால் பயம் அதிகமாகுது. இன்ஸ்டிட்யூட்டா நடத்துகிறார்கள், பாஸ் பண்ண விட மாட்டார்கள்' என விரக்தியாகப் பேசினான்.

ஒருவழியாக அவனிடம் முதல் பேப்பர் முடிந்த கதை என்பதையும், மூன்றாவது, நாலாவது பேப்பர்களுக்கு அவகாசம் இருப்பதையும், அப்போதையத் தேவை மறுநாள் எழுதப் போகும் பரீட்சையில் கவனம் முழுவதையும் செலுத்துவது என்பதைப் புரிய,தெளிய வைத்தோம்!

‘அதிருப்திப்படுவதோ, குறை காண்பதோ, குற்றம் சொல்வதோ, தன்னிரக்கமோ நடக்கப் போவதை மாற்றப் போவது இல்லை!' என்கிறார் ‘பவர் ஆப் நவ் (Power of now)' எனும் அற்புதமான புத்தகம் எழுதிய எக்கார்ட் டோல்லே !

எனக்குப் பரிச்சயமான தொழிலதிபர் ஒருவர். அமெரிக்காவிற்கு 1970-களிலேயே சென்று, பெரும் பணம் சம்பாதித்த கெட்டிக்காரர். 65 வயது ஆகிவிட்டது, இனி சொந்த ஊரிலேயே கோவில் குளமென்று நிம்மதியாக இருப்போம் எனக் கிராமத்திற்கே திரும்பி வந்து விட்டார். அடடா, என்ன ஒரு தெளிவான சிந்தனை, வாழ்க்கைப் பாடத்தை இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பலரும் பாராட்டினார்கள்.

ஆனால், பாருங்கள். அவர்கள் குடும்பத்தில் ஒன்று விட்ட சித்தப்பா ஒருவருக்கு மறதி நோய். சிலசமயம் திடீரென்று நடந்தவை எல்லாம் மறந்து விடும். அந்த நோய் இவருக்கும் வர வாய்ப்பு உண்டு எனக் கேள்விப் பட்டு அதையே நினைத்து நினைத்துக் கவலைப் படுவார்.

மனுஷன் இங்கு வந்து இருந்த அடுத்த 12 ஆண்டுகளில் அந்த நோய் வரவும் இல்லை; ஆனால் அதை நினைத்து நினைத்து அவர் பயப்படாத நாளும் இல்லை! ஐயா, சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த நோய் வந்து விட்டால் என்ன செய்வதென்று, தான் புதிதாய் கட்டிய பங்களாவிற்கு காம்ப்பௌண்ட் சுவரை எட்டு அடி உயரத்திற்குச் சிறைச்சாலை மாதிரி கட்டி விட்டார். கேட்டால், அந்நோய் வந்து மறதியில் சுவர் ஏறிக் குதித்து விடாமல் இருக்கப் பாதுகாப்பு ஏற்பாடாம்!

அண்ணே, நம்மில் பலருக்கும் இதே நிலை தான். எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம் எனும் ஒரு விஷயத்தை அதீதமாகக் கற்பனை செய்து தேவையில்லாமல் நிகழ்காலத்தைப் பாழாக்கிக் கொள்வோம்!

ஐயா, வருங்காலத்திற்குத் திட்டமிட வேண்டியது தான். நமக்குத் தெரிந்த தெரியாதவைகளுக்கு (known unknowns) ஏற்பாடாக இருக்க வேண்டும்தான். ஆனால் அதற்காகத் தெரியாத தெரியாதவைகளுக்குப் (unknown unknowns) பயந்தால் உருப்பட்ட மாதிரி தான்!

இறந்து விட்ட கடந்தகாலத்தைப் பற்றிய அர்த்தமற்ற சிந்தனைகளிலும், என்ன நடக்கும் என்றே தெரியாத எதிர் காலம் பற்றிய எண்ண உற்பத்தியிலும் (breeding thoughts ) நேரத்தைச் செலவிடலாமா?

செயல் வடிவம் (actionable plan) கொடுக்கப்பட முடியாத சிந்தனைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்லவா? இல்லாவிட்டால் அவை நம்மை நிகழ்காலத்தில் இருந்து கடத்திச் சென்றுவிடுமல்லவா?

யதார்த்தம் என்னவென்றால், நடந்தவை நடந்தவை தான்! மாற்ற முடியாது! அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அந்த எண்ணங்களிலேயே மூழ்கி விடக் கூடாது! அதே போல நடக்க இருப்பவற்றில் பலவற்றை நம்மால் தடுக்க முடியாது! அவற்றிற்குத் தயாராக இருக்கலாமே தவிர பயப்பட்டுப் பயனில்லை. தம்பி, நிகழ் காலம் தான் நிதர்சனம்! அது மட்டுமே நம் கையில் !

`நடந்ததை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணிக் கவலையுறுவதும் பயனற்றது. அப்போதைய நிலைமையைச் சரியாகக் கையாள்வதே கெட்டிக்காரத்தனம்' என்கிறார் சாணக்கியர்!

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்