ஆசைப்படுங்கள்... கண்டிப்பாக நிறைவேறும்...

By எஸ்.ரவீந்திரன்

ந்தியாவின் முன்னணி விளையாட்டு இணையதளமான கேம்ஸ்2வின் (www.games2win.com) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அலோக் கேஜ்ரிவால். (இவருக்கும் டெல்லி முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கன்டெஸ்ட்ஸ்2வின், மொபைல்2வின் போன்ற நிறுவனங்களையும் இவர்தான் தொடங்கினார். மொபைல்2வின் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி இவரிடமிருந்து வாங்கி நடத்தி வருகிறது. கேமிங் நெட்வொர்க் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த காம்ஸ்கோர் நிறுவனம், கேம்ஸ்2வின், இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு இணையதளம் என புகழ்ந்துள்ளது. சமீபத்தில் அலோக் கேஜ்ரிவால் ட்விட்டரில் ஒரு தகவலை தெரிவித்திருந்தார். ஆசைப்படுங்கள்... கண்டிப்பாக நிறைவேறும் என்பதுதான் அது.

``அது 2000-ம் ஆண்டின் ஆரம்ப காலம். நானும் தினேஷ் கோபால கிருஷ்ணனும் (நண்பர், புராடக்ட்ஸ் மேனேஜர்) கேம்ஸ் எக்ஸ்போவில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்செலீஸ் சென்றிருந்தோம். ரொம்பவும் சாதாரண ஒரு ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். பஸ்ஸில்தான் பயணம் எல்லாம். காரணம் பண நெருக்கடி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எக்ஸ்போ முடிந்த பிறகும், ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். சான்டா மோனிகாவுக்கு வந்தோம். அது ஒரு அழகான கடற்கரை நகரம். பே வாட்ச் பெண்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம் என ஒரு நப்பாசை. ஆனால் அதிர்ஷ்டமில்லை.

பீச் மணலில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே தெரிந்த ஒரு சூப்பரான ஹோட்டலைப் பார்த்தேன். ஆஹா என்ன அருமையான, ஆடம்பரமான ஹோட்டல் என பிரமித்தேன். இங்கேயும் தங்குவதற்கு ஆள் இருக்கே.. என பெருமூச்சு விட்டேன். நமக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தால் எப்படி இருக்கும் என மனசுக்குள் ஆசைப்பட்டேன்.

சில மாதங்கள் கடந்தன. ஐபிஎம் இந்தியா மும்பையில் ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதற்கு அழைப்பு வந்தது. சென்றேன்.. வந்தேன்.. அங்கு என்ன பேசினேன் என்று நினைவில்லை. சில வாரங்கள் கழித்து லாஸ் ஏஞ்செலீஸில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கும்படி ஐபிஎம்-மிடம் இருந்து அழைப்பு வந்தது. ராஜ மரியாதை. ஏர்போர்ட்டில் இறங்கியதும் சொகுசு கார் காத்திருந்தது. ஏறியதும் ஒரு மணி நேர பயணம். ஹோட்டலை அடைந்தோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதே ஹோட்டல். ஓராண்டுக்கு முன்பு எந்த ஹோட்டலைப் பார்த்து பிரமித்து, அதில் தங்க வேண்டும் என ஆசைப்பட்டேனோ அதே ஹோட்டல். மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

சரியாக ஓராண்டு கழித்து சுமந்த் மண்டல் கேம்ஸ்2வின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அவர் சான்டா மோனிகாவை சேர்ந்த முதலீட்டாளர். அதன்பிறகு கேட்க வேண்டுமா... இந்தியாவுக்கும் சான்டா மோனிகாவுக்கும் ஷண்டிங் அடிக்காத குறைதான். செல்லும்போதெல்லாம். அதே ஹோட்டல், அதே சந்தோஷம்.

நீங்கள் எதையாவது மனதார விரும்பினால், அது நடக்கும். நம்புங்கள். மனம் தளராதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கே தெரியாது, அது உங்களை எந்த உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது'' என முடிக்கிறார் கேஜ்ரிவால்.

நிறுவனத்தில் சிக்கனம் குறித்த அவரின் இன்னொரு ட்விட்டர் பதிவும் மிக பிரபலம். அமெரிக்கன் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி பாப் கிராண்டல் பற்றிய சுவையான தகவல் அது.

``முதல் வகுப்பில் பரிமாறப்படும் சாலட்டில் ஒரே ஒரு ஆலிவை குறைத்தால், ஆண்டுக்கு 40 ஆயிரம் டாலர் மிச்சப்படுத்தலாம் எனக் கணக்குப் போட்டு, அதை செயல்படுத்திக் காட்டியவர் பாப் கிராண்டர். ஒரு முறை பாதுகாப்புக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என பாப் விசாரித்திருக்கிறார். ``செக்யூரிட்டி கார்டுகளுக்கு இவ்வளவு சம்பளமா...'' எனக் கேட்டபோது, ``அவர்கள் எல்லாம் சாதாரண செக்யூரிட்டி கார்டுகள் இல்லை... விமானங்களைப் பாதுகாக்கும் செக்யூரிட்டி கார்டுகள்..'' என பதில் வந்துள்ளது. ``விமானங்களைத்தானே பாதுகாக்க வேண்டும்.. அதற்கு எதற்கு இவ்வளவு சம்பளத்தில் இத்தனை ஆட்கள்... பயிற்சி பெற்ற நாய்களை வேலைக்கு வைக்கலாமே..'' எனக் கேட்டவர், உடனே அதையும் அமல் செய்தார். பல ஆயிரம் டாலர்கள் அடுத்த மாதத்தில் இருந்தே மிச்சமானது.

சில மாதங்கள் போனது. நாய் பிஸ்கெட்டுகள் ஏன் வாங்குகிறோம்..? அதற்கு ஏன் இவ்வளவு செலவாகிறது எனக் கேட்டார் பாப். ``அய்யா... நீங்கதான் செக்யூரிட்டி கார்டுக்குப் பதிலா நாய்களை வாங்கச் சொன்னீங்க... அவை சாப்பிட பிஸ்கெட் வாங்க வேண்டாமா..'' எனக் கேட்டார்கள் ஊழியர்கள். அப்படியா... எனக் கேட்டவர், நாய்கள் குரைப்பதை ஒரு வாரத்துக்கு டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். விமானங்கள் நிறுத்தும் ஹாங்கரில் அந்த ரிக்கார்டிங்கை ஒலிக்க விட்டார். ஒரே நேரத்தில் நாய்களுக்கும் வேலை காலியானது... நாய் பிஸ்கெட் வாங்குவதும் நின்றுபோனது.

கேம்ஸ்2வின் நிறுவனத்தின் முதல் போர்டு மீட்டிங் மும்பையில் உள்ள எங்களது அலுவலகத்தில் நடந்தது. எங்களுடைய முதலீட்டாளர்களில் ஒருவரான ஆஷ் லிலன் அதில் பங்கேற்றார். ``அலோக், முதலில் ஆபிஸை மாற்றுங்கள்.. ஏறி வரும் படியெல்லாம் ஒரு வெற்றிலை கறையாக இருக்கிறது. வேறு ஒரு நல்ல இடத்துக்கு மாறலாமே...'' என்று கேட்டார்.

``இருந்துவிட்டுப் போகட்டுமே...அதனாலதான் இந்த இடத்திற்கு இவ்வளவு குறைவான வாடகை. இதெல்லாம் சுத்தமா இருந்தால் வாடகை அதிகமாக அல்லவா இருக்கும்''. என நகைச்சுவையாக பதிலளித்தேன். அந்த நேரத்தில் அப்படி நகைச்சுவையாகத்தான் சொன்னேன். ஆனால் அந்த அலுவலகத்தில்தான் 17 ஆண்டுகள் குப்பை கொட்டினோம் என்கிறார் அலோக் கேஜ்ரிவால்.

ravindran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்