அடுத்த முறை இந்தியா வரும்போது புல்லட் ரயிலில் பயணிக்க விரும்புகிறேன் என தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே. தனது விருப்பத்தை நிறைவேற்ற ரூ.88,000 கோடியை இந்தியாவுக்கு கடனாகவும் அளிக்க உள்ளார். கூடவே ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு அளிக்கிறது ஜப்பான். இது அபேவின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றில் ஒரு நாடு கொண்டிருக்கும் வளர்ச்சியைப் போலவே போக்குவரத்தில் உண்டாகும் மாற்றங்களும் முக்கியமானது. ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புல்லட் ரயில் ஏற்படுத்திய பொருளாதார நன்மைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிவேக புல்லட் ரயிலால் பயண நேரம் குறையும் என்பதைத் தாண்டி பல சாதக அம்சங்கள் உள்ளன. இரு நகரங்களின் இணைப்புக்கு இடையில் அதிவேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. தொலைதூர கிராமங்களும் மிக எளிதாக நகரங்களுடன் இணைக்கப்படுகின்றன.
நகரங்களின் மக்கள் நெருக்கத்தை அதிவேக போக்குவரத்து முறை கட்டுப்படுத்துகிறது. தவிர இரண்டு நகரங்களுக்கு இடையிலான ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் சாதகமான சூழலை உருவாக்குகிறது. நாடு முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அதிவேக இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வேலைவாய்ப்பு பகிர்வு, தொழிலாளர் பகிர்வு உடனுக்குடன் சாத்தியமாகிறது. தொழில்நுட்ப மையங்களை இணைப்பது எளிதாகின்றது. பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் பல மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது. ஒரு நகரத்தில் பயணிகள் தங்குவதும் செலவு செய்யும் விகிதமும் அதிகரிக்கும். மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்ட நாட்டுக்கு அதிவேக இணைப்பு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் முக்கியமான வளர்ச்சி திட்டம் என்பது மிகையில்லை.
வேலைவாய்ப்பு சார்ந்து மக்கள் நகர்புறங்களுக்கு குடிபெயர்வது அதிவேக போக்குவரத்தால் குறையும் என்பதை சீனா நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சியில் அதிவேக ரயிலுக்கும் முக்கிய இடமுள்ளது. இரு நகரங்களுக்கு விரைவாக விமானத்தில் செல்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆனால் குறைவான கட்டணத்தில் அந்த வாய்ப்பை அதிவேக ரயில் சேவை வழங்குகிறது. அதிவேக ரயிலால் சீனாவின் சுற்றுலாத்துறையின் ஆண்டு வளர்ச்சி 15.9 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 6,178 கோடி டாலர் வருமானத்தை ஈட்டித் தருகிறது. மக்களின் விடுமுறை கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் சீன கிராமப் புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்கு 5 சதவீத அளவுக்கு உள்ளது. இதை சாத்தியமாக்கியது அதிவேக ரயில்தான் என்கிறது டெலிகிராப் பத்திரிகை. சீனாவில் பொருளாதார வளர்ச்சி புவியியல்சார் இணைப்புகள் மூலம்தான் சாத்தியமாகியுள்ளது என்கிறது அந்த ஆய்வு.
தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் முக்கிய நகரமான ஷாங்காய் 1,300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தொலைவை 5 மணி நேரத்தில் அடைந்து விடலாம். பெய்ஜிங்கிலிருந்து 2,300 கிலோ மீட்டரில் உள்ள குவான்ஸூ நகரத்தை 8 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். சராசரியாக 300 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து விடலாம். இப்படி 22,000 கிலோமீட்டர் தூரத்துக்கு புல்லட் ரயில் திட்டங்களை சீனா உருவாக்கியுள்ளது. பொதுப் போக்குவரத்தில் சீனா மேற்கொண்ட புரட்சிகரமான தொழில்நுட்பங்களும் சேர்த்துதான் அதனை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கியுள்ளது.
ஜப்பானில் அனைத்து நகரங்களும் அதிவேக ரயில் இணைப்பில் உள்ளன. இதுவரையில் ஒரு விபத்தைகூட சந்தித்ததில்லை ஜப்பான் தொழில்நுட்பம். தவிர ஜப்பான் அதிவேக ரயிலின் அதிகபட்ச தாமதமே ஒரு நிமிடம்தான் என்கிறது புள்ளி விவரங்கள். தெற்காசிய அளவில் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளும் அதிவேக ரயில் திட்டங்களுக்கான முயற்சிகளில் உள்ளன. தவிர ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானின் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான முனைப்பில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய இந்த வர்த்தகத்தில் இந்தியாவும் ஒரு அங்கம் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படையான நோக்கம். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1.08 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88,000 கோடியை ஜப்பான் அளிக்க உள்ளது. இந்தியாவின் பங்கு 19 சதவீதம்தான்.
இவ்வளவு ஏற்றத் தாழ்வு இருக்கும் நாட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவு செய்யாமல் இந்த நவீன வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு அவசியமானதா என்கிற கேள்வியையும் ஒரு தரப்பு மக்கள் எழுப்புகின்றனர். ஆனால் பொதுப் போக்குவரத்துக்கான இந்த ஒதுக்கீடு இந்தியாவின் உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு என்பதை மறுக்க முடியாது. இதன் மூலம் இரண்டு நகரங்களுக்கு இடையிலான வர்த்தக உறவில் புதிய பரிணாமங்கள், வாய்ப்புகள் உருவாகும் .
மும்பை - அகமதாபாத் இரண்டு வர்த்தக நகரங்களுக்குமான இந்த திட்டத்தின் தூரம் 508 கி.மீட்டர். இந்த தூரத்தை இணைப்பதற்கு தற்போது 8 மணி நேரமாகிறது என்றால் அதிவேக ரயில் 2 மணி நேரத்தில் இணைத்துவிடும். இந்த 508 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில் 468 கி.மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையாகவும் 13 கி.மீட்டர் தொலைவு சமவெளியிலும் அமைக்கப்படுகிறது. சுரங்கப்பாதையில் 7 கி.மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் அமையும். 2022-ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்கிற இலக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட புல்லட் ரயில் திட்டத்தை அடுத்து முக்கிய ஆறு திட்டங்களுக்கான வரைவுகளும் பரிசீலனையில் உள்ளன. குறிப்பாக புதுடெல்லி - மும்பை, புதுடெல்லி - கொல்கத்தா, மும்பை- சென்னை, புதுடெல்லி - சண்டீகர், மும்பை - நாக்பூர், புதுடெல்லி - நாக்பூர் என ஆறு திட்டங்களுக்கான வரைவுகள் பரிசீலனையில் உள்ளன என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே புல்லட் ரயிலை விடவும் அதிவேக பயணத்தை சாத்தியமாக்கும் ஹைப்பர்லூப் பயணத்துக்கான முயற்சிகளில் ஆந்திரப் பிரதேச அரசு இறங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கும் விஜயவாடாவுக்கும் இடையிலான 35 கிலோ மீட்டர் தொலைவை 5 நிமிடத்தில் கடந்து விடலாம் என்கிறது இந்த திட்டம். இதற்காக அமெரிக்காவின் ஹைப்பர்லூப் நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான முதலீடு எவ்வளவு என்பதை இதுவரை சொல்லப்படவில்லை. அடுத்த மாதத்திலிருந்து இதற்கான ஆய்வு பணிகளை தொடங்க உள்ளனர்.
பொது போக்குவரத்தில் நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நவீன வசதிகள் மக்களின் வாழ்க்கைத் தர முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.
-maheswaran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago