எனது நண்பர் ஒருவர். ஒரு தனியார் நிறுவனத்தில் தென் மாநிலங்களுக்கான தலைமை அதிகாரி. சிரித்த முகம். எல்லோரிடமும் கனிவான பேச்சு. அத்துடன் யாரைப் பார்த்தாலும் அடிக்கடி ஏதாவது சொல்லிப் பாராட்டும் நல்ல குணம். `இப்பவே போய் அந்தப் பொறியாளரைப் பார்த்துப் பேசிவிட்டு வாங்க’ என்று அதிகார தோரணையில் சொல்ல மாட்டார்.
எப்பொழுதும் ஒரு please உடன் தான் பேச்சு தொடங்கும்.அல்லது `போய்விட்டு வந்திடுறீங்களா தம்பி’ எனத் தான் கேட்பார்! அதே போல இந்த நன்றியும் sorry-யும் அவருக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் பிடித்த மற்ற இரு வார்த்தைகள்! ஒவ்வொரு நாளும் ஏதோ மந்திரம் சொல்வது போல அவ்வார்த்தைகளை விடாது பலமுறை சொல்வார்!
`எப்படித் தம்பி இப்படி சட்டைக்கும் பாண்ட்டிற்கும் இவ்வளவு பொருத்தமாகப் பார்த்து அணிகின்றீர்கள்?’ எனச் சொல்லி, அந்த ஆளைக் காலையிலேயே கவிழ்த்து விடுவார் ! அப்புறம் என்ன? அந்த 40 வயது `தம்பி’ காலையிலிருந்து மாலை 7 வரை அடிமையாக, அதுவும் மகிழ்ச்சியாக நண்பர் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருப்பார்!
நம் நண்பரின் பாராட்டு சும்மா பொய்யாகவோ,போலியாகவோ இருக்காது. காரணம் எங்கும் எவரிடத்திலும் உள்ள நல்லவை, பாராட்டத் தக்கவை உடனே அவர் கண்ணில் பட்டுவிடும்! ஞாபகம் வைத்துக் கொள்வார். அதைத்தான் குறிப்பிட்டுப் பாராட்டுவார்!
பின்னே என்னங்க? எல்லோரிடமும் ஏதாவது ஒரு நல்லது இல்லாமல் இருக்காதே? அது அவர்களது தோற்றமாக இருக்கலாம் அல்லது குரலாக, உடையாக இருக்கலாம். சுருட்டை முடி, நல்ல உயரம், சிவந்த நிறம் ,கணீரென்ற குரல், தன் தோற்றத்திற்கு ஏற்ற ஆடை போன்றவைகளை மற்றவர்கள் குறிப்பிடும் பொழுது மகிழாதார் யார்?
நாம் பேசும் நபரின் தோற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களின் மற்ற குணாதிசியங்களைக் கூடப் பாராட்டலாமே! சிலர் எதையும் சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள். அல்லது கொடுத்த வேலை முடியும் வரை விட மாட்டார்கள். வேறு சிலர் மிக்க பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.
`எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கின்றீர்களே’ என்று சொன்னால் அந்த ஆள் மேலும் சுறுசுறுப்பாக இருப்பாரா, மாட்டாரா? அதன் அளவு 80% ஆக இருக்கிறதென்றால் அதுவே 90, 95% ஆகக் கூடுமல்லவா?
`ஒருவரைப் பாராட்டுவதன் மூலம் அவரது திறமைகளின் பலனை நமதாக்கிக் கொள்கிறோம்’ என்று பிரெஞ்சு தத்துவஞானி வால்டேர் சொல்வது 100% உண்மை தானே! ஐயா, இந்தப் பாராட்டு என்பது , அலாதியானது; அதீத சக்தி கொண்டது! அதைச் சரியாக உபயோகப் படுத்தினால் செயற்கரியனவெல்லாம் செய்யலாம்!
சற்றே யோசித்துப் பார்த்தால், அங்கீகரிப்பதும், புகழ்வதும், பட்டங்கள் கொடுப்பதும், பாராட்டுதலின் வெவ்வேறு பரிமாணங்கள் தானே? இதில் அடிப்படையான உளவியல் உண்மை என்னவென்றால், நாம் எல்லோருமே பாராட்டிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குகிறோம்!
இதற்கு அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் அரசியல்வாதிகளும்,புகழின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் கலைஞர்களும் கூட விதி விலக்கில்லையே!பெரிய திறமை கொண்ட,வெற்றி கண்ட விளையாட்டு வீரரையோ, தொழிலதிபரையோ, இசைக் கலைஞரையோ யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால் என்ன ஆவார்கள்? வெதும்பி விடுவார்கள் இல்லையா?
தெரிந்தோ தெரியாமலோ, இதற்கு நேர்மாறாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி.சொந்தக்காரப் பெண் ஒருவர் விலை உயர்ந்த சேலை உடுத்தி வந்து இருந்தார். அடிக்கடி அதை சரி செய்து கொண்டே இருந்தார். அதே ஞாபகமாக இருப்பது போலத் தோன்றியது!
அப்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த சிநேகிதி ஒருவர் , `மாமி இந்தச் சேலை உங்கள் நிறத்திற்கு எடுப்பாக இல்லையே’ என எதேச்சையாகச் சொல்லிவிட்டு போய் விட்டார். அவ்வளவு தான். அந்தப் பெண் தன்னை நொந்தாள். இந்த சேலையை வாங்கிக் கொடுத்தற்கு , இல்லை, வாங்கச் சம்மதித்தற்குத் தன் கணவனை நொந்தாள்!
மொத்தத்தில் அந்த இனிய மாலை பாழானது! நல்ல இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் மாடுகள் கூடுதல் பால் கறப்பதாகவும், தொடர்ந்து வசை பாடினால், தாவரங்கள் கூட வாடி விடுவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன!
தரைக்கு வந்த நட்சத்திரங்கள் ' (தாரே ஜமீன் பர்) இந்தித் திரைப்படத்தில் அமீர்கான் சொல்வது போல, யாரையும் தொடர்ந்து `நீ எதற்கும் லாயக்கில்லை' என்று சொன்னால் அவன் வாழ்க்கையை வெறுத்து உண்மையிலேயே உதவாக்கரை ஆகி விடுவான்.
`இவ்வுலகில் மனிதனுக்குத் தேவையானவை மூன்று...உணவு,நீர் மற்றும் இனிய சொற்கள்! இவைதான் உண்மையில் ரத்தினங்கள். வெறும் கற்களின் துண்டுகளை ரத்தினங்கள் என முட்டாள்கள்தான் சொல்வார்கள் ' என்கிறார் சாணக்கியர்! உயிர் வாழ உடலுக்குத் தேவையான உணவு , நீருடன் உள்ளத்திற்குத் தேவையான இனிய சொற்களையும் சாணக்கியர் சேர்த்தது சரி தானே?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago