அறக்கட்டளையின் அதிகாரங்கள் என்ன?

By வாசு கார்த்தி

அட்சய பாத்திரத்தில் ஒரு நாளைக்கு ஒரு தரம்தான் உணவு கிடைக்கும். ஆனால் சைரஸ் மிஸ்திரி ரத்தன் டாடா விவகாரம் நாள்தோறும் பல்வேறு தகவல்களை அளித்துக் கொண்டே இருக்கிறது. டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் நீக்கப்பட்ட பிறகு குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து அவரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை டாடா சன்ஸ் எடுத்தது.

இது எண்கள் அடிப்படையிலான விளையாட்டு என்பதை புரிந்துகொண்ட சைரஸ் மிஸ்திரி அனைத்து நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து விலகிவிட்டார். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவர் குடும்பத்துக்கு 18 சதவீத பங்குகள் இருப்பதால் அந்த இயக்குநர் குழுவில் இருந்து மட்டும் அவர் வெளியேறவில்லை.

தன்னுடைய நீக்கத்தை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் டாடா அறக்கட்டளை நடவடிக்கையில் அரசு தலையிட வேண்டும் என்றும் மிஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளது இந்தப் பிரச்சினையை வேறு பாதைக்கு மாற்றி இருக்கிறது. ஆரம்பத்தில் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை, நம்பிக்கை பெறவில்லை என்று காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் இப்போது அனைவரின் கவனமும் டாடா அறக்கட்டளை மீது திரும்பி இருக்கிறது.

அறக்கட்டளை அமைப்பு என்ன?

டாடா குழுமம் உப்பு, கடிகாரம், ரசாயனம், சாஃப்ட்வேர் என பல தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை. சில தனிப்பட்ட முறையில் இயங்கி வருபவை. இந்த ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் பிரத்யேகமாக தலைமைச் செயல் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்தார். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்டுகள் 66 சதவீத பங்குகள் (சர் டோரப்ஜி டாடா டிரஸ்ட் 27.98%, சர் ரத்தன் டாடா டிரஸ்ட் 23.56%, ஜே.ஆர்.டி. டிரஸ்ட் 4.01% மற்றும் நான்கு டிரஸ்டுகள் உள்ளன) வைத்திருக்கிறது. டாடா சன்ஸ் வழங்கும் டிவிடெண்ட்களை வைத்து இந்த டிரஸ்டுகள் சமூக மேம்பாட்டு பணிகளை செய்துவருகின்றன.

டாடா சன்ஸ் தலைவர் பதவி என்பது பெரிய பதவியாக இருந்தாலும், அந்த நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருக்கும் டாடா டிரஸ்டுகளின் தலைவர் சொல்படியே நடக்க வேண்டும் என்பதுதான் விதி.

டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருக்கிறார். டாடா டிரஸ்டுகளின் தலைவராக ரத்தன் டாடா இருக்கிறார். என்னதான் டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் இருந்தாலும் தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் டிரஸ்டின் தலையீடு (ரத்தன்) இருப்பதாக சைரஸ் குற்றம் சாட்டினார். ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் நாங்கள் தலையிடுவதில்லை. பெரும்பான்மை பங்குதாரராக அங்கு (டாடா சன்ஸ்) என்ன நடக்கிறது, எங்களுடைய முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என அறக்கட்டளையின் இயக்குநர் குழு உறுப்பினர் விஆர் மேத்தா தெரிவித்தார்.

ஆனால் ரத்தன் டாடா தலைவராக 1991-ம் ஆண்டு பொறுப்பேற்ற போது வேறு நிலைமை இருந்தது. 1991-ம் ஆண்டு ரத்தன் டாடா சன்ஸ் தலைவராக இருந்தார். ஜேஆர்டி டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். 1993-ம் ஆண்டு ஜே.ஆர்டி டாடா இறந்தபிறகு ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் தொடர்ந்தார். இந்த இரு வருட காலமும் ஜே.ஆர்.டி டாடாவின் தலையீடுகள் இருந்ததாக ரத்தன் டாடாவே குறிப்பிட்டிருக்கிறார். அதனால் ரத்தன் டாடாவுக்கு இருந்த சுதந்திரம் சைரஸ் மிஸ்திரிக்கு இல்லை என்ற கருத்தும் இருக்கிறது.

இடையில் சில காலம் மட்டுமே டாடா அறக்கட்டளைக்கும், டாடா சன்ஸுக்கும் வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். லேடி நவாஜ்பாய் டாடா சில காலம் அறக்கட்டளை தலைவராக இருந்திருக்கிறார். அதன் பிறகு டாடா சன்ஸுக்கும், டாடா டிரஸ்டுக்கும் ஒரே தலைவர்தான். இப்போது இரு தலைவர்கள் இருப்பதால் இரு அதிகார மையங்கள் உருவாகி இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் டாடா சன்ஸ், டாடா அறக்கட்டளைக்குமான உறவு மற்றும் டாடா சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கும் இடையேயான உறவினை நெறிப்படுத்த வேண்டும். இதில் நிர்வாக கோளாறு ஏற்படும் பட்சத்தில் டாடா குழுமத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என சைரஸ் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டார்.

உடனடி காரணம் என்ன?

மிஸ்திரி நீக்கத்துக்கு உடனடி காரணம் கூட டாடா டிரஸ்ட் அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்ததுதான் என மிஸ்திரியின் நண்பரும், குரூப் எக்ஸிகியூட்டிங் கவுன்ஸில் உறுப்பினரான நிர்மால்யா குமார் கூறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை விவாதிக்க திட்டமிடப்பட்டது. டாடா சன்ஸ், டாடா அறக்கட்டளை, குழும நிறுவனங்கள் மற்றும் குரூப் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் ஆகியவை எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் அன்றைய நாளின் திட்டம். இதற்கான வரைவு இயக்குநர் குழு உறுப்பினர்களுக்கு இரு வாரம் முன்பாகவே அனுப்பட்டது.

அதில் டாடா அறக்கட்டளைக்குத் தேவையான தகவல்கள் கொடுக்கப்படும் ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பது போன்ற விதிமுறைகள் இருந்தன. ஆனால் அந்த வரைவு குறித்து விவாதம் நடைபெறவில்லை. அன்றைய தினமே அவர் நீக்கப்பட்டார். மேலும் குரூப் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலும் கலைக்கப்பட்டது. அதற்கு கூறப்பட்ட காரணம் இந்த கவுன்சில் மாற்று அதிகார மையமாக இருக்கிறது என்று விளக்கம் கூறப்பட்டது. ஆனால் நிர்மால்யா குமார் கூறும்போது இந்த குழுவுக்கு செயல்பாட்டு அதிகாரங்கள் ஏதும் கிடையாது. இது ஆலோசனை வழங்கும் குழு மட்டுமே. நோயல் டாடா, என்.சந்திரசேகரன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை கூறட்டும் என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் குழு கூடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மிஸ்திரி அறைக்கு சென்ற இயக்குநர்கள் சிலர், இயக்குநர் குழுவின் நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் அல்லது இயக்குநர் குழு ஒட்டெடுப்பின் படி நீக்கப்படுவீர்கள் என்று கூறி இருக்கின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மிஸ்திரி உங்களால் முடிந்ததை செய்யுங்கள், என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என கூறிவிட்டார். அதன் பிறகு 6 இயக்குநரின் ஆதரவுடன் மிஸ்திரி நீக்கம் நடந்தது. இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் கூறும்போது, இரு மாதத்துக்கு முன்பு டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்தவர்கள் எப்படி மிஸ்திரியின் செயல்பாடுகளுக்கு மதிப்பளிப்பார்கள் என கேள்வி கேட்டிருக்கிறார்.

நம்பிக்கை பற்றாக்குறையால் நீக்கப்பட்டார் என டாடா சன்ஸ் தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் டாடா என்னும் பெயர் மீதான நம்பிக்கையின் மீதும் கேள்வி எழுந்திருப்பது மறுக்க முடியாது.

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்