பொருளாதாரத்தை ஜிடிபி வளர்ச்சியை மட்டும் கொண்டு மதிப்பிட முடியாது. அந்த வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்று சேரவேண்டும், தவிர வளர்ச்சி என்பது சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியிருந்தார்.
கடந்த சில வருடங்களாக வளர்ச்சிக் காக கொடுத்த முக்கியத்துவத்தை சுற்றுச்சுழலுக்கு நாம் கொடுக்கத் தவறிவிட்டோம். இதன் விளைவாக பருவமழை பொய்த்துப் போவது, எல்நினோ விளைவு என பல இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது அனைத்து தரப்புகளிடம் அதிகரித்துக் கொண் டிருக்கிறது. இதற்கு மேலும் முக்கியத் துவம் கொடுக்கும் வகையில் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மெகா கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார்.
இந்த கூட்டணி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிறுவனங்களில் முதலீடு செய்ய இருக்கிறது. எரிசக்தி, போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யும். இதற்காக 100 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகை அடுத்த ஆண்டில் இருந்து முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருந்தலைகள்
சர்வதேச அளவில் முக்கியமான பல முதலீட்டாளர்களை பில்கேட்ஸ் ஒருங்கிணைத்திருக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த நிதியத் திற்கு பிரேக் த்ரூ எனர்ஜி வென்சர்ஸ் (Breakthrough Energy Ventures) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அமேசான் நிறுவனர் ஜெப் பியோஸ், புளூம்பெர்க் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் புளூம்பெர்க், விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன், கோஸ்லா வென்ச்சர் நிறுவனத்தின் வினோத் கோஸ்லா, அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா, சோரஸ் பண்ட் மேனேஜ்மென்ட் தலைவர் ஜார்ஜ் சோரஸ், சாப்ட் பேங்க் தலைவர் மசாயோஷி சன், ஹியூலெட் பக்கார்டு சிஇஒ மெக் விட்மன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில முதலீட்டாளர்கள் இந்த நிதியத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்கள்.
நோக்கம் என்ன?
தற்போதைய எரிசக்தி தேவையைவிட நடப்பு நூற்றாண்டின் மத்தியில் இரு மடங்கு எரிசக்தி தேவை. ஆனால் சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாத எரிசக்தியாக அது இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாத, பசுமை இல்ல வாயுக்களை வெளியிடாத எரிசக்தி சாதாரண மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு விலை குறைவாக இல்லை. இதுபோன்ற புதுமையான யோசனைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது இந்த நிறுவனத்தின் நோக்கம். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி அனைவருக்கும் கிடைக்கும்.
அரசாங்கத்தின் உதவி மூலம் ஆராய்ச்சி நடக்கலாம். ஆனால் புதுமை யான கண்டுபிடிப்பை சந்தைப் படுத்த அரசாங்கத்தின் உதவி மட்டுமே போதாது. மென் பொருள் துறையில் ஒரு யோசனையை எளிதாக சந்தைப் படுத்தலாம். ஆனால் பொருள் தயாரிப்பு துறையில் அதனை சந்தைப்படுத்த அதிக முதலீடு மற்றும் அதிக காலம் தேவைப்படும்.
இதற்காக இந்த நிதியம் உருவாக்கப் பட்டுள்ளது. பொதுவாக வென்சர் கேபிடல் நிறுவனங்களின் முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். ஆனால் இந்த பண்டின் காலம் 20 வருடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது முதலீடு செய்த தொகையை 20 வருடங்களுக்கு பிறகே எடுப்பார்கள்.
கேட்ஸ் கூறுவது என்ன?
எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது ரிஸ்க்கான தொழில் என்பதால் இது பெரிய சந்தையாக வளரவில்லை. சில மில்லியன் டாலர்களை முதலீடு செய்து சில ஆண்டுகள் காத்திருந்தால்தான் முதலீட்டின் பலன் எவ்வளவு என்பதே தெரியும் என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எரிசக்தி மிகப்பெரிய சந்தை. உலகுக்கு தேவையான எரிசக்தியின் ஒரு முக்கியமான பகுதியை வழங்குகிறீர்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சந்தையாக இருக்கும் என்று பில்கேட்ஸ் கூறியிருக்கிறார். 2040-ம் ஆண்டில் உலகின் எரிசக்தி துறையின் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி டாலர் இருக்கும் என பிரேக் த்ரூ எனர்ஜி வென்சர்ஸ் கணித்திருக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு தேவையான பாதுகாப்பான எரிசக்தி நிறுவனங்களை உருவாக்குவதுதான் எங்களது இலக்கு. இதற்காக சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த 10 வருடங்களில் உருவாகும் கண்டுபிடிப்புகளால் 2050-ம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறாது என்னும் சூழல் உருவாகும். இது ரிஸ்கான சந்தையாக இருந்தாலும் இதில் வாய்ப்புகள் இருக்கின்றன என பில் கேட்ஸ் கூறியிருக்கிறார்.
எதிர்காலத்தின் தூய்மையான எரி சக்திக்காக சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் ஒன்றாக இணைந்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறப் பான முதலீடு தவிர எதிர்காலத்துக்கு தேவையான முதலீடு என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் மாசசூஸெட்ஸ் தொழில் நுட்ப மைய (எம்ஐடி) ஆய்வின்படி எரி சக்தி துறையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் செய் யப்பட்ட முதலீடுகளில் பாதியை முத லீட்டு நிறுவனங்கள் இழந்திருக்கின்றன என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிதியம் ஆரம்ப கட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வது திட்ட மாக இருந்தாலும், முதலீட்டாளர்கள், அரசுகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறது.
முதலீடு வெற்றியடையுமா?
இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் மின்சாரம் மற்றும் கட்டுமான நிறுவனங் கள்தான். திட்டங்களை செயல்படுத்து வதில் இருந்து, சந்தைப்படுத்துவது வரை பல பிரச்சினைகள் இருந்ததால்தான் வாராக்கடன் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எரிசக்தி துறையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை.
கடந்த சில வருடங்களில் `கிளின் டெக்’ (சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம்) துறையில் சோலார், எலெட்ரிக் கார் உள்ளிட்ட பல நிறுவனங் கள் அமெரிக்காவில் திவால் ஆகி இருக் கின்றன. இந்த தொழில்நுட்பங்களுக் கான தேவை அதிகரிக்கவில்லை, அதே சமயம் விலையும் அதிகமாக இருப்ப தால் இந்த நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால் சுற்றுச்சூழ லுக்கு உகந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதையே வென்சர் கேபிடல் நிறுவனங்கள் தவிர்த்து வந்தன.
வருங்காலத்தில் எரிசக்தியின் தேவை அதிகரிக்கும், அதிக மக்கள் பயன்படுத்த தொடங்குவார்கள் என பிரேக் த்ரூ எனர்ஜி வென்சர்ஸ் கணித் திருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை விட்டு செல்வதற்காகவாவது இந்த முதலீடுகள் வெற்றி பெற வேண்டும்.
நாடு கடந்து, அரசியல் அல்லாத, தொழில்துறையினர் ஒருங்கிணைந் துள்ள இந்த மெகா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம்தான் பசுமையான எதிர்காலம் சாத்தியமாகும்!
தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago