செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் (குறள்: 516)
உங்களுக்கு மாஸ்கோ, டோக்கியோ, நியூ யார்க், பாரீஸ், லண்டன் நகரங்களுக்குள்ள மற்றொரு ஒற்றுமை தெரியுமா? இந்த 5 நகரங்களிலும் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் ஓடுகிறது.அதுவும் சுமார் 80 முதல் 150 வருடங்களாக! சென்னையில் மெட்ரோ சேவை இவ்வளவு தாமதமாகிறதே என்கின்றீர்களா?
சரி, டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித் துள்ளீர்களா? தற்பொழுது மொத்தம் 160 ரயில் நிலையங்கள், 213கிமீ நீளம்! தினமும் சுமார் 2,000 ரயில் சேவைகளில் 26 லட்சம் பயணிகளாம்! டெல்லிவாசிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம்! அங்குள்ள வாகனங்களின் எண்ணிக்கை மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய மூன்று நகரங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாயிற்றே!
1997-ல் இவ்வேலை தொடங்கியது. டெல்லியில் எவ்வளவு அரசியல், அதிகாரத் தலையீடுகள் இருக்கும்! அவற்றையெல்லாம் மீறி செயல்பட்டு, திட்டமிட்ட 8 ஆண்டுகளில், திட்டமிட்ட செலவில் இந்த மாபெரும்திட்டம் முடிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? இப்படி அசாத்திய வேலை செய்தது யார்? அவரை எங்கே எப்படித் தேடிக் கண்டுபிடிச்சாங்க? சொல்கிறேன், வாங்க. 1964ல் ராமேஸ்வரத்தில் மணிக்கு 250கிமீ வேகத்தில் புயல் வீசியதும்,அதனால் பாம்பன் இரயில் பாலம் உருக்குலைந்து போனதும் உங்களுக்குத் தெரியுமா?
அதை 6 மாதங்களுக்குள் சரி செய்ய இரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அப்பணியின் மேலாளரோ தனது பொறியாளரைக் கூப்பிட்டு, அவ்வேலையை 90 நாட்களில் முடித்துக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்! அந்தப் பொறியாளர் தயங்காது அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். வேலையையும் முடித்தார். ஆனால் 45 நாட்களில்!அப்பொழுது அவருக்கு வயது 30!
ஸ்ரீதர் எனும் இந்த இளைஞர் இந்திய ரயில்வே துறையில் இருந்து பணிநிறைவு பெற்ற பொழுது அப்போதைய இரயில்வே அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவரைக் கொங்கன் ரயில்வேயின் தலைவராக்கினார்! அரபிக் கடலோரம் 740கிமீ நீளத்தில் மராட்டிய மாநிலத்தை கோவா வழியாக கேரளாவுடன் இணைக்கும் ரயில்தடம் இது.
சும்மா இல்லைங்க. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 93 குகைகள் அமைத்து சீறிப்பாயும் காட்டு ஓடைகளிலும் ஆறுகளிலும் 150 பாலங்கள் அமைத்துக் கட்டப்பட்டதுங்க! இதை நிர்ணயிக்கப்பட்ட 7 ஆண்டுகளிலேயே, அதுவும் நிர்ணயிக்கப்பட்ட செலவிலேயே கட்டி முடித்து விட்டார் இந்தக் கர்மயோகி ஸ்ரீதர்! அவரது அலுவலகமெங்கும் திட்டத்தை முடிக்க மீதமுள்ள காலத்தைக் காட்டும் Reverse clock தானாம்!
அப்புறம் அவரை விடுவார்களா என்ன? டெல்லி மெட்ரோ திட்டத்தையும் இவரிடம்தான் ஒப்படைத்தார்கள்! இப்பக் காரணம் புரிந்ததா? இன்று இந்த `மெட்ரோ மனிதர்’ கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர், விசாகை, விஜயவாடா மெட்ரோக்களின் ஆலோசகர்! செயல் எவ்வளவு பெரியது, கடினமானது, என்பவைகளை மட்டுமல்லாது காலக்கெடுவையும் கருத்தில் கொள்பவரே சிறந்தவரில்லையா?
காரியத்தின் இயல்பை ஆராய்ந்து,அதைத் திட்டமிட்ட காலத்திற்குள்ளாக முடிக்க வல்லவனைத் தேடிப் பிடித்து, அவனையே அச்செயலில் ஈடுபடுத்த வேண்டும் என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago