இந்திய ராணுவத்தில் ஜிப்சி போனது, சஃபாரி வந்தது!
ராணுவத்தின் அபிமான வாகனமாகத் திகழ்ந்த ஜிப்சி தற்போது அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. ராணுவத்தில் தற்போது 30 ஆயிரம் ஜிப்சி வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை மாற்ற ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கென ராணுவம் பல்வேறு வாகனங்களை சோதித்துப் பார்த்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தின் ஸ்கார்பியோவும், டாடா மோட்டார் ஸின் சஃபாரி வாகனங்களுக்கிடையே இறுதிப் போட்டி இருந்தது.
ராணுவத்தின் செயல்பாடுகளுக் கேற்ப மலைப் பாங்கான பிரதேசம், பனி உறைந்த பகுதிகள், பாலைவனம் மற்றும் சதுப்பு நிலங்களில் சிறப்பாக செயல்படும் வகையிலான வாகனத்தை ராணுவம் எதிர்பார்த்தது. அனைத்து நிலப் பரப்புகளிலும் இரு வாகனங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டன. இதில் ராணுவத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக டாடா சஃபாரி ஸ்டோர்ம் இருந்தது.
முதல் கட்டமாக 3,198 டாடா சஃபாரி ஸ்டோர்ம் வாகனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜிப்சி வாகனத்தை மாற்றுவது என பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்த வுடன், அதைவிட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, கூடுதல் செயல்பாடுகள் கொண்ட வாகனத்தை வாங்குவது என முடிவு செய்தது. அதிக திறன் மற்றும் டீசலில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என ராணுவம் எதிர்பார்த்தது. இந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக டாடா சஃபாரி அமைந்தது.
அடுத்த ஆண்டு முதல் ஜிப்சி வாகனங்களுக்கு மாற்றாக சஃபாரி வாகனங்களைப் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. ராணுவத்தின் ஆர்டர் கிடைப்பது மிகவும் பெருமையான விஷயம்தான். அந்த விதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இது ஏற்றம் தரும் ஆர்டர்.
சஃபாரியின் முதல் கட்ட ஆர்டரில் அளிக்கப்படும் வாகனங்கள் சிறப்பாக செயல்படுமாயின் 30 ஆயிரம் ஜிப்சி வாகனங்களுக்கு மாற்றாக இது அமையும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இது இரட்டை சந்தோஷம் அளிக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் கனரக வாகனங்களை ராணுவத்துக்கு சப்ளை செய்வதற்காக ரூ.1,300 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.