ஹோண்டாவின் நியூவ்!
பேட்டரி கார் தயாரிப்பில் இன்றளவில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை விட இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் இதை வாங்கிப் பயன்படுத்துவது அனைவருக்கும் சாத்தியமாகாமல் உள்ளது. இந்நிலையில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹோண்டா நிறுவனம் நியூவ் (NeuV) எனும் புதிய ரக பேட்டரி காரை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்த காரை அறிமுகப்படுத்தப் போவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பேட்டரி காரை விட இது மேம்பட்டது. ஆம், டிரைவரின் உணர்வுகளுக்கேற்ப செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை உணர்திறன் (ஏஐ) நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதில் உள்ள இன்ஜின் காரை செலுத்தும் டிரைவருடன் உரையாடி அதற்கேற்ப செயல்படுமாம். கோக்ரோ எஸ்பி கார்ப் உருவாக்கியுள்ள எமோஷன் இன்ஜின் இதில் உள்ளது. இந்த இன்ஜின் மனிதனுடன் உரையாடும் நுட்பம் கொண்டதால் இது வாடிக்கையாளருக்கு மேம்பட்ட வசதி கொண்ட காராக இருக்கும் என ஹோண்டா தெரிவிக்கிறது.
ஒரு அட்டைப் பெட்டி அல்லது சூட்கேஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த கார், அடிப்படையில் காருக்கான அனைத்து வடிவமைப்பு விஷயங்களையும் முறியடித்துள்ளது. சூழல் பாதுகாப்பான போக்குவரத்துக்காக இந்த காரை மேலும் மேம்படுத்துவதற்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் இத்துறையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா அறிவித்துள்ளது.
பொதுவாக தங்களிடம் உள்ள காரைப் பற்றி பெருமையாகப் பேசுவதைத்தான் வாடிக்கையாக வைத்திருப்பார்கள் பல பிரபலங்கள். ஆனால் இந்த காரோ அவர்களுடன் உரையாடும், அவர்களது உணர்வுகளுக்கேற்ப செயல்படும் இன்ஜினைக் கொண்டிருக்கும். இத்தகை கார் நிச்சயம் உணர்வு பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.