கனவுகளுக்கு சரியான வடிவம் கொடுக்க வேண்டும் என்றால் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட முதல்பாடம் என்கிறார் கார்வேந்தன். நாமக்கல் புறவழிச் சாலையில் ரித்விக் ரூபிங் நிறுவனத்தை நடத்திவரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.
விவசாயம் சார்ந்த மதிப்புகூட்டு பொருளைத் தயாரிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தது தற்செயலானதுதான். வீட்டுத் தேவைக்காக ரூபிங் ஷீட் வாங்கியதில், தொடங்கிய தேடல்தான் இதையே செய்தால் என்ன என்பதில் கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும்போதும், படித்த பிறகும் எனது ஒவ்வொரு செயல்களிலும் இதற்கான தேடலில் இருந்தேன். படித்து முடித்ததும் ஒரு பிசினஸ் கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு நான் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமாக என்னையும் தயார்படுத்திக் கொண்டேன்.
அப்போதே ரூபிங் தொடர்பான அனைத்து ஆரம்ப கட்ட தகவல்களையும் சேகரித்துக் கொண்டேன். நான்கு ஆண்டுகளில் அந்த வேலையிலிருந்து விலகியதும், இந்த தொழில் தொடர்பான கண்காட்சிகளை பார்க்க பெங்களூரு, கொல்கத்தா என பயணத்தை தொடங்கினேன். இதன் மூலம் 30 சதவீத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
நண்பர் மூலம் எர்ணாகுளத்தில் உள்ள ரூபிங் நிறுவனம் ஒன்றில் நேரில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சில நாட்கள் தங்கி கற்றுக் கொண்டதன் மூலம் 30 சதவீத அறிவு கிடைத்தது. இதற்கடுத்து நாமே நேரடியாக பட்டுத் தெரிந்து கொள்வோம் என சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டேன்.
இயந்திரங்களை ஆர்டர் கொடுத்து எடுக்க ஆறு மாதம் ஆகும் என்பதால், அந்த இடைவெளியில் மார்க்கெட்டிங் வேலைகளை தொடங்கினேன். நாமக்கல், கரூர் மாவட்டங்கள்தான் இலக்கு. கரூர் போகிறேன் என்றால் அங்குள்ள ஹார்டுவேர் கடைக்காரர்கள், வெல்டிங் பட்டறைக்காரர்களை ஒரு நாளில் 50 பேர் என இலக்கு வைத்துக் கொண்டு அவர்களைப் பார்ப்பது, அவர்களது விசிட்டிங் கார்டு வாங்குவது என முதல் நான்கைந்து மாதங்கள் சலிக்காமல் அலைந்தேன். பல வெல்டிங்காரர்கள் கேள்விமேல் கேள்வி கேட்பார்கள். எனக்கு தெரியாத விஷயங்களை இயந்திரம் சப்ளை செய்யும் நிறுவனத்தாரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பதில் சொல்வேன். சிலர் பிசினஸ் கொடுக்கிறார்களோ இல்லையோ மணிக்கணக்காக பேச்சு கொடுப்பார்கள், ஆனால் சளைக்காமல் விளக்கம் கொடுப்பேன். பேச்சில் எவ்வளவு தூரம் அவர்களைக் கவர்கிறோமோ அந்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பது என் அனுபவமாக இருந்தது.
இயந்திரங்கள் வந்து ஷீட்களை தயாரிக்கத் தொடங்கியதும், திரும்ப வும் மார்க்கெட்டிங் வேலைகளை தொடங்கினேன். கார்டு வாங்கி வந்தவர்களிடம் போன் செய்து, “உங்களையெல்லாம் நம்பித்தான் இறங்கி இருக்கிறேன். எனக்கு ஆயிரம் ரூபாய்க்காவது ஆர்டர் கொடுங்கண்ணே... வளர்த்து விடுங்கண்ணே’’ என இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவேன். நேரில் சென்றும் கேட்பேன். இப்படி முதல் ஆறு மாதங்களில் 10 ஆயிரம் 20 ஆயிரம் என தொடங்கிய ஆர்டர்கள் மெல்ல லட்சங்களில் வரத் தொடங்கியது. முதலில் 3 வண்ணங்களில் ஆரம்பித்து மெல்ல மெல்ல வண்ணங்களையும் அதிகரித்தேன். இதற்கிடையே சந்தையில் எந்த பிராண்ட் ரூபிங் ஷீட்டுகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் மூலப் பொருளையே அதிகம் கொடுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் என்னோடு சேர்த்து நான்கு பேர் பணிபுரிந்தனர். இப்போது பத்து பேர் பணிபுரிகின்றனர்.
விளம்பரங்களுக்கு செலவழிப்பதை விட, விலையைக் குறைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களைக் கவரலாம் என்கிற பிசினஸ் கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். இதனால் இப்போது ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் “என்னப்பா போன்ல தொந்தரவு செய்யிற’’ என்றவர்கள்கூட இன்று உற்சாகமாக பேசுவதும், ஊக்கம் கொடுக்கவும் செய்கிறார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது எனது பாசிட்டிவான அணுகுமுறைகள்தான். பொதுவாக தொழில்முனைவோராக வளர அடிப்படை தேவை பாசிட்டிவ்வாக சிந்திப்பதுதான்.
தொழிலை தொடங்குவதற்கு முன் பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டு பக்கத்தையுமே யோசிக்க வேண்டும். ஆனால் பாசிட்டிவான எண்ணங்களுக்காகவே உழைக்க வேண்டும். இதைத்தான் நான் கல்லூரியில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன். பலருக்கு சொல்ல விரும்புவதும் அதுதான் என்று முடித்தார்.
vanigaveedhi@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago