குறள் இனிது: பாம்பெனத் தெரிந்தும் பக்கத்திலே வச்சுக்கலாமா..?

By சோம.வீரப்பன்

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (குறள்: 550)

பல வருடங்களுக்கு முன் நடந்தது.

வம்புக்குப் பெயர் போன ஒரு ஊரில் ஒரு வங்கிக் கிளையில் எனது நண்பர் ஒருவர் மேலாளராகப் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

வங்கிகள் கணிணி மயமாக்கப்படாத காலம் அது. கிளையில் 7 வருடங்களாக 100 லெட்ஜர்கள் டாலி (tally) ஆகாமல் இருந்தன.

அதாவது சிலபல வாடிக்கையாளர்களின் கணக்கில் இருப்பு தவறாகக் காண்பிக்கப் பட்டிருந்தது. எனவே அவர்கள் செலுத்தாத பணத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அபாயம் இருந்தது!

நண்பர் பணியாளர்களிடம் அதைச் சரி செய்ய உதவி கோரினார். ஒரு அதிகாரி மட்டுமே உதவ முன்வந்தார். பெயரா? அடாடா, விடமாட்டீர்களே, குமார் தான்!

குமாருக்குக் கூட்டல் கழித்தல் எல்லாம் மின்னல் வேகம். காதில் கூர்மையாகச் சீவிய பென்சில் இருக்கும், அவரது புத்தியைப் போலவே! தப்பு எங்கிருக்கும் என்பதை டக்டக்கென்று கண்டுபிடித்து விடுவார்.

குமார் நேரம் காலம் பார்க்காமல் அலுவலகத்தில் அதே வேலையாய்க் கிடந்தார். பழைய ஆவணங்களைத் தேட வேண்டுமென்றால் தூசி குப்பை எல்லாம் பார்க்க மாட்டார். அவரே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி விடுவார்.

இருவருமாகப் படிப்படியாக லெட்ஜர்களை சரி செய்தனர். பிரச்சினை மூன்றே மாதங்களில் தீர்ந்து விட்டது போலத் தோன்றியது!

ஆனால் குமாரால் பணியாளர்களுக்கான ஒரு சேமிப்பு லெட்ஜரை மட்டும் டாலி செய்ய முடியவில்லை! ரூ2,000 வித்தியாசத்தைக் குமாரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

மேலதிகாரிகளோ லட்சக்கணக்கான ரூபாய்க்கான வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாச்சு. வெறும் 2,000 வித்தியாசத்தைக் கண்டு பிடிக்க நேரத்தை வீணடிக்காமல் அதை நட்டக்கணக்கில் எழுதி விடலாம் என்றனர்.

ஆனால் நம்ம நண்பர் விட்டேனா பார் எனத் தனியே களமிறங்கினார்.மிகவும் சிரமப்பட்டார். ஆனால் ஒரு வாரத்தில் விடை கிடைத்த பொழுது பெரும் அதிர்ச்சி!

குமார் இரு முறை ரூ1,000 பொய்யாக வரவு வைத்துப் பணம் கையாடல் செய்து இருந்தார்!

நண்பருக்குத் தர்ம சங்கடம். யோசித்தார், யோசித்தார். அந்த இரண்டு மாதங்களில் குமார் நமது நண்பருக்கு வலது கையாகவே ஆகியிருந்தார்!

ஆனால் வங்கி பெரும் பணம் புழங்கும் இடமாயிற்றே. குமாரை இருக்க விட்டால், அவர் எதிர்காலத்தில் பெரும் மோசடிகள் செய்ய வழியாகும். அது மற்ற பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏன் வங்கிக்கே கூட ஆபத்தாக முடியலாம்!

கனத்த இதயத்துடன் நம்ம நண்பரே குமாரை பதவி நீக்கம் செய்து விட்டார்!

பின்னே என்னங்க? திறமையற்றவனைக் கூட வைத்து ஒப்பேத்தலாம்.நேர்மையற்றவன் கரையான் போல, புற்றுநோய் போல ஆபத்தானவன்!

கொலைகாரர்களையும் தேசத்துரோகிகளையும் சமூகத்திலிருந்து விலக்கி விடுகிறோமில்லையா? நிறுவனத்திற்குக் கேடு நினைப்பவர்களையும், குழி தோண்டுபவர்களையும் உள்ளே வச்சுக்கலாமா?

அரசன் கொடியவர்களைத் தண்டிப்பது பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரானது என்கிறார் வள்ளுவர்!

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்