மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய பொருளா தாரத்திலும் மக்கள் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் ஒரு புறம் தங்களது தினசரி வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இயல்பு வாழ்க்கை பெரும்பாலான இடங் களில் இன்னும் திரும்பவில்லை. ஆனால் அதே சமயத்தில் மக்கள் இனி மாற்றங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டு மக்களை பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சி இந்த நடவடிக்கை என்கிற வகையிலும் பார்க்கப்படுகிறது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இந்தியாவில் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் பணமில்லா பொருளாதாரத்துக்கு மாறுவதற்கு மக்கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும், இந்தியாவில் தற்போது அதற்கான வாய்ப்புகளும், அதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பணமில்லாமல் பரிவர்த்தனைகளை எளிதாக இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆகிய சேவைகள் இருக்கின்றன. ஆனால் அதை விட தற்போது பணமில்லா பொருளா தாரத்தின் வேகத்தை அதிகரிப்பதில் வாலட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக் கின்றன. மக்களின் அடிப்படை தேவை கள் பலவற்றை இந்த வாலட்டுகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு சேவைகள் விரிவடைந்துள்ளன. தனியார் நிறுவனங்களும், வங்கிகளும் இந்த வாலட் சேவையை நடத்தி வருகின்றன. அடுத்த பத்து வருடத்தில் இந்த துறை சிறப்பான இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாலட்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது இதில் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் வாலட் நிறுவனங்கள் தற்போது அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பணம் செலுத்திக் கொள்வது பரிமாற்றம் செய்வது என இரண்டு முக்கியமான சேவைகளை இந்த வாலட் நிறுவனங்கள் வழங்குகின்றன. பேடிஎம், மொபிக்விக், பேயூமணி, ஃபிரீசார்ஜ், சிட்ரஸ்பே போன்ற நிறுவனங்கள் இந்த சேவைகளை மிகச் சிறப்பாக வழங்கி வருகின்றன.
பேடிஎம்
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அடுத்த நாளே பேடிஎம் மிகப் பெரிய அளவில் விளம்பரங்களை வெளியிட்டது. தற்போது எங்கு பார்த்தாலும் பேடிஎம் விளம்பரப் பலகைகள் உள்ளன. ஆனால் இதன் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் வாலட் நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்த நிறுவனம். கிட்டத்தட்ட ஒரு கோடி பயனாளிகள் பேடிஎம் நிறுவனத்திற்கு உள்ளனர். முதலில் இந்த நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு என்றுதான் பிரபலமானது.
ஆனால் அதன் பிறகு எலெக்ட்ரானிக்ஸ், ஆன்லைன் புட் டெலிவரி, தியேட்டர் டிக்கெட் முன்பதிவு செய்வது, டிடிஹெச் கட்டணம், மின்சாரக் கட்டணம் செலுத்துவது என பல சேவைகளை அளித்து வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக வீடு வாங்கும் சேவையையும் தொடங்கியுள்ளது. பேடிஎம் வாலட்டில் கேஒய்சி இல்லாமல் ரூ. 20,000 வரை வைத்துக் கொள்ளமுடியும். கேஒய்சியுடன் ஒரு லட்சம் ரூபாய் வரை வைத்துக் கொள்ள முடியும். மேலும் கிரெடிட் கார்டிலிருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.
மொபிக்விக்
பேடிஎம் நிறுவனம் போலவே இதன் சேவையும் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தற்போது 25 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் சில பிரத்யேக சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. மொபிக்விக் வாலட் மூலம் பிர்லா சன் லைப் இன்ஷூரன்ஸ், ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ், டாடா ஏஐஏ இன்ஷுரன்ஸ் போன்ற நிறுவனங்களின் பாலிசி கட்டணங்களை செலுத்த முடியும். தற்போது 391 சுங்க சாவடிகளில் பணமில்லாமல் மொபிக்விக் வாலட் மூலம் கட்டணங்களை செலுத்த முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பேயூமணி
குர்காவ்னை மையமாக கொண்டு இயங்கும் பேயூமணி நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒரே ‘டச்’ மூலம் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளமுடியும். சில வாலட்களில் பரிவர்த்தனை ரத்தானால் பணம் திரும்ப வாலட்டுக்குள் வருவதற்கு சிறிது நேரம் ஆகும். ஏன் சில நாள்கள் கூட ஆகலாம். ஆனால் பேயூமணி வாலட்டில் ரத்தான பணம் உடனேயே திரும்ப கிடைக்கிறது.
இதுபோன்ற தனியார் நிறுவனங்களை தவிர்த்து வங்கிகளும் வாலட் சேவைகளை வழங்கி வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி பட்டி (buddy) என்ற வாலட்டையும், ஹெச்டிஎப்சி வங்கி பேஸாப் (Payzapp) என்ற வாலட்டையும் ஆக்ஸிஸ் வங்கி லைம் (Lime) என்ற வாலட்டையும் ஐசிஐசிஐ வங்கி பாக்கெட்ஸ் (pockets) என்ற வாலட்டையும் செயல்படுத்தி வருகின்றன.
இந்த வங்கியில் கணக்கு வைத் துள்ளவர்கள் இந்த வாலட்டை எளிதாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக எஸ்பிஐயின் பட்டி வாலட் மூலம் அவசர தேவைகளுக்கு நம் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பணம் கேட்க முடியும். இந்த வாலட் தற்போது 13 மொழிகளில் இயங்குகிறது. சாதாரண மாக மொபைல் பேங்கிங் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யும் போது ஐஎப்சி எண், பான் எண் என பல தகவல் கள் கேட்கும். ஆனால் இதுபோன்ற வாலட்களில் இந்த விவரங்கள் தேவை யில்லை. எஸ்பிஐ வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இந்த வாலட்டை பயன்படுத்த முடியும்.
இதுபோல வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் எம்-பேசா வாலட் மூலம் ரீசார்ஜ் சலுகைகளும் கிடைக்கும். தவிர எம்-பேசா வாலட் மூலம் நண்பர்கள் உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக பணம் அனுப்பலாம். அவர்கள் வோடபோன் சேவை வழங்கும் கடைக்காரர்களிடம் மேசேஜ் ஐ காட்டி பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.
இவையெல்லாம் உதாரணங்களே. இதுபோன்ற பல வாலட்களும் பல்வேறு வகையில் பிரத்யேக சேவைகளை வழங்கி வருகின்றன. வாலட்டுகளை பயன்படுத்துபவர்களில் 38 சதவீதம் மக்கள் மொபைல் கட்டணம், டிடிஹெச் கட்டணம், லேண்ட்லைன் கட்டணங் களை செலுத்த பயன்படுத்துகின்றனர். 31 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங், ஹோட்டல் முன்பதிவு, பயண கட்டணங்கள், திரைப்பட முன்பதிவு ஆகிய சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற சேவைகளை விட வாலட்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் ஒரு வாலட்டில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளமுடிகிறது. மேலும் கிரெடிட் கார்டையோ அல்லது டெபிட் கார்டையோ பயன்படுத்தும் போது சலுகைகள் வழங்கப்படுவதில்லை.
நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல சலுகைகளை வழங்குகிறது. கேஷ்பேக் சலுகை, சிறிய அளவிலான கடன்கள், கேஷ் பேக் சலுகைகளையும் இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இது நல்லதொரு ஆரோக்கியமான போக்கு. தற்போது இந்தியாவில் 1.54 கோடி பேர் இந்த வாலட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது 2022-ம் ஆண்டில் 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில பத்தாண்டுகளில் டிஜிட்டல் இந்தியா உருவாவதை தடுக்க முடியாது என்பதே உண்மை.
- devaraj.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago