எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன்?

By வாசு கார்த்தி

ஒவ்வொரு செய்திக்கும் ஒரு கால அளவு இருக்கிறது. குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு அந்த செய்திக்கு மதிப்பு இருக்காது. உதாரணத்துக்கு பெட்ரோல் விலை ஏற்றம் என்னும் செய்திக்கு ஒரு மணிநேரம் மட்டும்தான் ஆயூள். அதன் பிறகு அது குறித்து யாரும் கவலைப்பட போவதில்லை. பெரிய பெரிய விபத்துகள் கூட 2 நாட்களுக்கு மேல் நினைவில் நிற்காது. ஆனால் 18 நாட்களுக்கும் பிறகும் கூட பண மதிப்பு நீக்கம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு மற்றும் அதைச் செயல்படுத்தும்விதம்.

ஒரே அறிவிப்பில் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்து, என்ன செய்வது என்ற கேள்விக் குறியை ஏற்படுத்திய அரசின் மீது ஆத்திரம் கொப்பளிக்காமல் இருக்காது. அறிவிப்பை வெளியிட்ட அரசின் மீதே ஆத்திரம் குமுறுகிறது என்றால், இந்த யோசனையை வழங்கியவர் உங்கள் கையில் சிக்கினால்…

பண மதிப்பு நீக்கம் என்ற ஆலோசனையை வழங்கியது அர்த்கிராந்தி பிரதிஷ்டான் என்ற அமைப்புதான். இதை வழங்கியவர் இதன் நிறுவனரான அனில் போகில். உங்களது கோபம் இவர் மீது திரும்பும் முன்பாக இதை இவர் அளித்ததற்கான காரணம், ஆனால் அதை அரசு செயல்படுத்திய விதத்தைப் பார்த்தோமானால் நிச்சயம் உங்களுக்கு இவர் மீது கோபம் வராது.

அனில் போகில் பல விஷயங்களை பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் அதில் ஒன்றை மட்டுமே மோடி அரசு அமல்படுத்தி இருக்கிறது. அவர் பரிந் துரை செய்த விஷயங்கள் என்ன என்று பார்ப் பதற்கு முன்பு அனில் போகில் குறித்து பார்ப்போம்.

யார் இந்த அனில்?


அனில் போகில்

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மாரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜி னீயரிங் படித்தவர். 2004-ம் ஆண்டு அர்த்கிராந்தி பிரதிஷ்டான் அமைப்பை தொடங்கினாலும், 1999-ம் ஆண்டு முதலே பொருளாதார மாற்றம் குறித்த விஷயங்கள் குறித்து செயல்படத் தொடங்கியவர். முக்கிய முடிவுகள் குறித்து அரசுக்கு ஆலோனைகள் வழங்கிவந்தார். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். அப்போது போகில் தன் சகாக்களுடன் அகமதாபாத் சென்று தன்னுடைய பரிந்துரைகளை வழங்கினார்.

முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டில் இருந்தே பாஜகவின் முன்னணி தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் மற்றும் மனோகர் பாரிகர் உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர்.

பாஜக மட்டுமல்லாமல் சிவசேனை, காங்கிரஸில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து தன்னுடைய பரிந்துரைகளை விளக்கி இருக்கிறார்.

மோடியை சந்திக்க குஜராத் முதல் அமைச்சர் அலுவலகம் அவருக்கு 10 நிமிடங்கள் மட்டுமே வழங்கி இருந்தது. ஆனால் 90 நிமிடங்களுக்கு மேல் விவாதம் தொடர்ந்ததாக போகில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடியை சந்தித்து உரையாடி இருக்கிறார். இந்த ஆண்டு ஜூலை மாதம் கூட பிரதமர் மோடி மற்றும் நிதிச்சேவைகள் பிரிவு செயலாளர் ஹஷ்முக் ஆதியாவை சந்தித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் நாங்கள் பரிந்துரை செய்ததை முழுமையாக அமல்படுத்தவில்லை. இது வருத்தம் அளிக்கிறது என செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

பரிந்துரைகள் என்ன?

# வருமான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும் (சுங்கம் மற்றும் இறக்குமதி வரியை தவிர).

# 100, 500 மற்றும் 1,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். அதிக பட்ச கரன்ஸி மதிப்பு ரூ.50 மட்டுமே.

# அதிக தொகை பரிவர்த்தனைகள் அனைத்தும் காசோலை, வரைவோலை, ஆன்லைன் என வங்கி பரிவர்த்தனைகள் மூலமே நடக்கவேண்டும்.

# ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு எல்லை (அதிகபட்சம் ரூ.2,000) விதிக்க வேண்டும். அதற்கு வரி கூடாது.

# வங்கியில் பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கு 0.7 சதவீதம் மூலம் 2 சதவீதம் வரி (வங்கி பரிவர்த்தனை வரி) விதிக்க வேண்டும். கிடைக்கும் தொகையில் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

என ஐந்து பரிந்துரைகளை வழங்கி இருந்தார். ஆனால் தற்போது உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு 2,000 ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.

பயன்கள் என்ன?

வரியை நீக்கினால் அரசுக்கு வருமானம் எப்படி கிடைக்கும் என்பது பொதுவான கேள்வி. ஆனால் அதற்கும் போகில் வசம் பதில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வரி வருமானம் ரூ.20 லட்சம் கோடி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வரி கிடைத்திருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கி கணிப்புப்படி ரூ.120 லட்சம் கோடி கோடிக்கு வங்கி பரிவர்த்தனை நடக்கிறது எனில் நாங்கள் பரிந்துரை செய்திருக்கும் சதவீதம் மூலம் இதே தொகை கிடைக்கும்.

இந்த ஐந்து நடவடிக்கைகள் மூலம் கறுப்பு பண புழக்கத்தை பல வழிகளில் குறைக்க முடியும் என இந்த அமைப்பு உறுதியாக கூறுகிறது. ஒரு நாட்டில் 70 சதவீத மக்கள் 150 ரூபாய்க்கு கீழே சம்பாதிக்கும் சூழலில் எதற்காக 1,000 ரூபாய் நோட்டு.

வரியில்லை என்பதால் நடுத்தர மக்கள் கையில் அதிக தொகை இருக்கும். அதனால் அவர்களின் வாங்கும் திறன் உயரும். ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்னும் பேச்சு இருக்கிறது. இது உண்மைதான். ஆனால் உண்மையான ஏழைகளுக்கு வங்கி கணக்கே தேவையில்லை.

விமர்சனம் என்ன?

ஒட்டுமொத்தமாக அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருக்கக் கூடாது என பரிந்துரை செய்தோம். ஆனால் பண மதிப்பை நீக்கிவிட்டு புதிய நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. தவிர 2,000 ரூபாய் நோட்டு புதிதாக வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போதைய இந்த நடவடிக்கைகள் கறுப்பணத்தை ஒழிக்காது. ஆனால் சிறிது காலத்துக்கு கள்ளப்பணத்தை தடுக்க முடியும். மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போல அரசின் நடவடிக்கை இருக்கிறது என்கிறார் போகில்.

பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளைத் தான் வழங்குவார்கள். அதை சரிவர செயல் படுத்தவேண்டியது அரசுதான். பரிந்துரைகளை பாதிப் பாதியாக செயல்படுத்தினால் என்னவாகும் என்பதற்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம்.

அனில் போகில் ஒரு கருவிதான். அதை இயக்கியது அரசுதான். எனவே அரசின் மீதான உங்கள் கோபம் நியாயமே!

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்