பேட்டரி கார் தயாரிப்பு கூட்டு திட்டம்: வெளியேறுகிறது மாருதி சுஸுகி

By செய்திப்பிரிவு

சூழல் பாதிப்புக்குத் தீர்வாகவும், எதிர்காலத்தில் எண்ணெய் வளம் வறண்டு போகும் என்ற முன்னெச்சரிக்கையின் வெளிப்பாடாக பேட்டரி வாகனத் தயாரிப்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியாவிலும் மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட், மஹிந்திரா ரேவா எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த ஜூன் மாதம் உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கமே பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான உதிரிபாக தயாரிப்பாளர்கள் வட்டத்தை விரிவு படுத்துவது, இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்வதாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து 6 பேட்டரி கார்களை உருவாக்கவும் திட்டம் போட்டன.

இந்த கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் சாலையில் ஓட வேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம். அரசின் ஆதரவோடு எக்ஸ்இவி என்ற பெயரில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன்பாகவே ஒரு மாதத்திலேயே அதாவது கடந்த ஜூலை மாதம் இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக ஃபோர்டு அறிவித்து வெளியேறிவிட்டது. இந்தக் கூட்டமைப்பு இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில் இப்போது மாருதி சுஸுகி நிறுவனமும் இதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சில சொந்த திட்டங்கள் காரணமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய முடிவை மாருதி சுஸுகி எடுத்ததற்கு காரணம்; சமீபத்தில் சுஸுகி நிறுவனம் டொயோடா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததுதான். மாருதி சுஸுகியின் தாய் நிறுவனமான சுஸுகி ஜப்பான் நிறுவனமும், டொயோடா நிறுவனமும் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்தே பேட்டரி கார் தயாரிப்பு கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை மாருதி சுஸுகி வெளியிட்டுள்ளது.

பேட்டரி வாகனம் தொடர்பான ஆராய்ச்சியை ஜப்பானில் மேற்கொள்ளலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதை கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த பிற நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டமைப்பிலிருந்து வெளியேறு வதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்இவி திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தது தொடர்பாக அந்நிறுவனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி கூறியது: `` மாறிவரும் சூழலுக்கேற்ப சூழல் பாதுகாப்பு மற்றும் புகை அளவு கட்டுப்படுத்தும் வாகனங்கள் தயாரிப்பு தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இங்கு போதிய வசதிகள் இல்லை. இத்தகைய சூழலில் எக்ஸ்இவி திட்டத்துக்கு உரிய பங்களிப்பை செய்ய மாருதி சுஸுகியால் முடியாது.

ஏற்கெனவே இந்தியா, ஜப்பான் இடையே பேட்டரி வாகனத் தயாரிப்பு குறித்து பல்வேறு தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எக்ஸ்இவி திட்டத்துக்கு முதலீடு செய்வது லாபகரமானதாக மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு இருக்காது என்பதும் ஒரு காரணமாகும். மேலும் சுஸுகி- டொயோடா கூட்டு திட்டத்தில் மாருதி சுஸுகி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி, ஃபோர்டு நிறுவனங்கள் வெளியேறினாலும், இந்தக் கூட்டமைப்பு வாகனத் தயாரிப்பில் ஈடுபடுமானால் திட்டமிட்டபடி இரண்டு ஆண்டுகளில் பேட்டரி வாகனத் தயாரிப்பு இங்கு முழு அளவில் சாத்தியமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்