வீழ்ச்சியின் விளிம்பில் டாயிஷ் வங்கி?

By வாசு கார்த்தி

பங்குச் சந்தையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்த தலைப்பு கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியதாகத்தான் இருக்கும். இது நடப்பதற்காக வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் கூட, அதற்கு வாய்ப்புகளே இல்லை என்று மறுக்கமுடியாத சூழல் இருக்கிறது.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் கிரைசிஸ் நிகழ்வின்போது அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலாயின. அதில் முக்கிய வங்கி லேமன் பிரதர்ஸ். இந்த வங்கி திவாலான சமயத்தில் சர்வதேச அளவில் முக்கிய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அந்த சமயத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டாயிஷ் வங்கி முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அமெரிக்கா நீதிமன்றம் (டிஓஜே) 1,400 கோடி டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்தது. இந்த அபராதத்தை குறைப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த வங்கி ஈடுபட்டிருந்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

சர்வதேச அளவில் குறைவான வட்டி விகிதம், மந்தமான வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக இந்த வங்கியின் சந்தை மதிப்பு கடந்த இரு வருடங்களில் அதிகமாக சரிந்திருக்கிறது. இதன் பங்குகள் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பங்கு 30 யூரோவாக வர்த்தகமானது. ஆனால் இப்போது 12 யூரோ என்ற அளவில் வர்த்தகமாகி வரு கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு அபராதத்தை இந்த வங்கியால் தாங்க முடியுமா என்பது குறித்த விவாதம் வலுக்கத் தொடங்கி இருக்கிறது.

அரசாங்க உதவி கிடைக்குமா?

இது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாக இருந்தாலும் அரசியலும் இதில் கலந்திருக்கிறது. இந்த வங்கிக்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசாங்க உதவி கிடைக்காது என ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே அரசியல் ரீதியாக மெர்கலுக்கு இப்போது சாதகமான சூழல் இல்லை. பிரெக்ஸிட் விவகாரம் இருக்கிறது; சிரியா அகதிகளுக்கு ஜெர்மனியில் அடைக்கலம் கொடுத்திருப்பதும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் செப்டம்பரில் அங்கு தேர்தல்கள் நடக்க இருக்கின்றன என்பதால் டாயிஷ் வங்கிக்கு ஜெர்மனி அரசின் உதவி கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்னொரு சிக்கல் என்னவென்றால் ஜெர்மனியின் மொத்த ஜிடிபியில் 50 சதவீத அளவுக்கு டாயிஷ் வங்கியின் நிதிநிலை இருக்கிறது. ஒரு லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். வங்கிக்கு நிதி உதவியும் கொடுக்க முடியாது. ஒரு வேளை 1,400 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டு வங்கிக்கு நிதி உதவி செய்ய முடியவில்லை என்றால் இதைவிடவும், பிரச்சினையும் பெரிதாக உருவாகக் கூடிய சூழல் இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் ஒரளவுக்கு பலமான நாடு என்றால் அது ஜெர்மனிதான். ஜெர்மனியில் பிரச்சினை, அதுவும் ஒரு வங்கிக்கு கடும் நிதி நெருக்கடி என்னும் போது ஒட்டு மொத்த ஐரோப்பிய யூனியனையும் பாதிக்கும். ஏஞ்சலா மெர்கலுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன் வங்கியின் தலைவர் மரியோ டிராகி-க்கும் இது நெருக்கடியான காலம்தான்.

சிஇஓ சொல்வதென்ன?

ஆனால் இந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் கிரியான் தனது பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இது ஒரு பிரச்சினையே இல்லை. பல வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்த பிரச்சினையை எளிதாக சமாளித்துவிடும். இந்த செய்திகளால் வங்கி பங்குகளில் ஊக வர்த்தகம் நடந்துவருகிறது. இந்த நெருக்கடியை வங்கி எளிதாக சமாளிக்கும் என்பது போல தனது பணியாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தவிர இந்த பிரச்சினையை வங்கியே சமாளித்துக்கொள்ளும் ஜெர்மனி அரசாங்கத்தின் உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அபராதம் குறைப்பா?

இந்த நிலையில் நீதித்துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தி அபராதத்தை 540 கோடி டாலராக குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து, சரிந்த டாயிஷ் வங்கி பங்குகள் 15 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. ஆனால் அபராதம் குறைப்பு பற்றி முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இதுபோல பல வங்கிகள் நீதித்துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தி அபராதத்தை குறைத்த வரலாறுகள் உள்ளன. பேங்க் ஆப் மெரில் லிஞ்ச் அனலிஸ்ட் ஒருவர் கூறும்போது, பொதுவாக அமெரிக்க நீதித்துறை மிக அதிகமாக அபராதம் விதிப்பதாக கூறும், பேச்சு வார்த்தைக்கு பிறகு அபராதம் குறைவதற்கான சாத்தியம் அதிகம். டாயிஷ் வங்கி பிரச்சினையிலும் இது சாத்தியமே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேபி மார்கன் தனது அறிக்கையில் கூறும்போது அபராதத்தின் அளவு 400 கோடி டாலர் வரை இருக்கும் பட்சத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. அந்த வங்கியே சமாளித்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

கத்தார் முதலீட்டாளர்கள்

கத்தாரை சேர்ந்த முதலீட்டாளர்கள் சிலர் டாயிஷ் வங்கியில் 10 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். தற்போது பங்குகள் மிகவும் குறைந்த விலையில் வர்த்தகமாகி வருகிறது. முதலீடு செய்வதற்கு ஏற்ப மதிப்பீடுகள் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அந்த பங்குகள் சிறிதளவு உயர்ந்தன. இந்த வங்கியில் 25 சதவீதம் அளவுக்கு பங்குகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்திய வங்கிகளுக்கு பாதிப்பா?

உலகம் சுருங்கி வரும் சூழ்நிலையில் பிரச்சினை ஒரு இடத்தில் இருந்தாலும் அதன் பாதிப்புகள் பல இடங்களுக்கு விரிவடைந்து வருகின்றன. இந்த பிரச்சினையால் இந்திய வங்கிகள் பாதிப்படையுமா என்பது குறித்து பங்குச்சந்தை வல்லுநர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டபோது, டாயிஷ் வங்கி திவால் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் இந்திய வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் காரணம். இந்திய வங்கிகள் டெபாசிட் வாங்கி, கடன் கொடுக்கின்றன, ஆனால் வெளிநாட்டு வங்கிகள் சிக்கலான டெரிவேட்டிவ் உள்ளிட்ட புராடக்ட்களில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாகவே அந்த வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவில்லை.

இந்திய வங்கிகளுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், ஒரு வேளை அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்தியாவில் கரன்ஸி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். இந்தியாவில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறும். அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவதற்காக வாய்ப்புகள் உருவாகும். இந்திய பங்குச்சந்தையின் மதிப்பீடுகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஒரு சிறு கெட்ட செய்தி கூட சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

டாயிஷ் வங்கிக்கு அமெரிக்கா அபராதத்தை குறைவாக கூட விதிக்கலாம். இந்த இடத்தில் சர்வதேச செலாவணி நிதியம் கூறியிருப்பது முக்கியமானது. வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சூழலில் வங்கிகள் தங்களுடைய பிஸினஸ் மாடலை மாற்றி அமைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெறவேண்டும் என கூறி இருக்கிறது.

பிஸினஸ் மாடலை மாற்றாவிட்டால் எட்டு வருடங்களுக்கு ஒரு முறை இது போல நெருக் கடியை சர்வதேச வங்கிகள் சந்திக்க நேரிடலாம். 2008-ல் லேமன் பிரதர்ஸ் சிக்கலில் சிதறுண்டது. இப்போது 8 ஆண்டுகளாகிறது.

இந்த முறை டாயிஷ் வங்கி சிக்குமா? தப்பிக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

வாசு கார்த்தி, karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்