உன்னால் முடியும்: கற்களே எனக்கு படிக்கற்கள்...

By நீரை மகேந்திரன்

உன்னால் முடியும் கலையை வியாபாரமாக்க முடியாது என்றாலும் வியாபாரமாகும் கலைக்கு என்று ஒரு சந்தை இருக்கவே செய்கிறது. ஓட்டல்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் உள் மற்றும் வெளி அலங்காரத்தில் இதற்கென்று தனி பட்ஜெட்டே ஒதுக்குகின்றனர். வீடுகளை அழகாக்குவதிலும் கலை அலங்காரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதுபோன்ற உள் வெளி அலங்கார துறையில் வெற்றிகரமாக வலம் வருகிறார் சுஜித். இந்த வாரம் இவரது அனுபவம் இடம் பெறுகிறது.

பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா பெயிண்டிங் மொத்த காண்ட்ராக்ட் எடுத்து செய்து கொண்டிருந்தார். அண்ணன் பொறியியல் படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழிலில் இறங்கி அப்படியே டிசைனர் ஸ்டோன் இண்டீரியர், டெக்‌ஷர் பெயிண்டிங் என விரிவாக்கம் செய்திருந்தார். நான் 2009 டிஜி வைஷ்ணவா கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்தேன். ஆனால் நேரடியாக அண்ணன் செய்து கொண்டிருக்கும் தொழிலில் இறங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் எனது நண்பர்களுடன் இணைந்து எனது சொந்த முயற்சியில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் தொழிலை செய்தேன். இதன் மூலம் தொடர்புகள் மற்றும் தொழிலின் நெளிவு சுளிவுகள் கிடைத்தது. இதற்கு பிறகு அண்ணனுடன் இணைந்து வேலைகளைப் பார்க்கலானேன்.

நான் தொழிலில் இணைந்த பிறகு இதில் மேலும் என்ன செய்யலாம் என யோசித்து பல முயற்சிகளை மேற்கொண்டோம். குறிப்பாக வெளிப்புற அலங்காரத்துக்கு பதிக்கப்படும் டிசைனர் ஸ்டோன்களை நேரடியாக சுரங்கங்களுக்கே சென்று வாங்கி வந்தேன். இதன்மூலம் கற்கள் குறித்த அறிவு மற்றும் இதன் விலைகள் எங்கு எவ்வளவு நிலவுகிறது. அதிக கொள்முதல் செய்பவர்களுக்கு கிடைக்கும் விலை போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தவிர கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களுக்கே போகிறபோது கற்களின் வகைகளை தெரிந்து கொண்டு வாங்க முடியும்.

அதுபோல மார்க்கெட்டிங் செல்கிறபோது நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். முதலில் சென்னையில் இருக்கும் பில்டர்கள், பொறியாளர்கள் தொடர்பு எண் பட்டியல் எடுத்து ஒவ்வொருவராக சென்று பார்ப்பேன். கிட்டத்தட்ட மெடிக்கல் ரெப் போல பல நாட்கள் அலைந்திருக்கிறேன். நான் எங்களிடம் இருக்கும் சில ஐடியாக்கள் மற்றும் அலங்கார டிசைனை கொண்டு செல்வேன். அவர்களுக்கு வேறொன்று தேவையாக இருக்கும். இப்படி பத்து பேர் கேட்கிறார்கள் என்றால் அவர்களின் தேவையை உடனே எங்களது பிசினசில் சேர்த்து விடுவோம். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்போதுகூட தேங்காய் சிரட்டையில் ஒரு புதிய டைல்ஸை சீனாவில் தயாரித்துள்ளனர் என்பதை அறிந்து அதை இங்கு கொண்டுவரவேண்டும் என பேசிவருகிறேன். அதை இங்கு தயாரிக்க அதிகம் செலவாகும் என்பதால் இறக்குமதி செய்ய கேட்டிருக்கிறேன். இப்படித்தான் மியூரல் என்று சொல்லப்படும் புடைப்பு சிற்பங்களை சுவர் அலங்காரத்தில் சேர்த்தேன்.

பொதுவாக இந்த துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் பெரிய முதலீடு செய்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும் என்கிற பேச்சு இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக நிற்பதற்கு காரணம் கற்றுக் கொள்வதுதான்.

போட்டியாளர்களைவிட விலையை சற்று குறைத்துக் கொண்டால் இந்த துறையில் புதிய ஆர்டர்களை எடுத்துவிடுவது எளிதானது. ஆனால் அதை தக்க வைக்க முடியாது. விரைவான சப்ளை, மற்றும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து கொடுக்க வேண்டும்.

தவிர எங்களிடம் உள்ள சிறப்பு, வாடிக்கையாளருக்கு ஏற்ப பைபர் மோல்டிங் சிற்பங்கள், சுவர் அலங் காரங்களை உருவாக்கிக் கொடுக்கிறோம். இதை அப்பா கவனித்துக் கொள்கிறார். தற்போது இந்த மோல்டிங் வேலைகளில் நான்கு பேருக்கும், ஸ்டோன் பதிக்கும் பணிகளில் தொடர்ந்து ஆறு நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளோம். ஆர்டர்களுக்கு ஏற்ப ஆட்களை அதிகப்படுத்திக் கொள்வது உண்டு. இப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இதற்கென தனியாக விற்பனையகத்தையும் தொடங்கியுள்ளோம்.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் நிற்க வேண்டும் என்றால் புதிய முயற்சிகள், புதிய வடிவமைப்புகளில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என்னை முன்னேற்றும் படிக்கற்கள் என்றார். உண்மைதான் கற்கள்தான் இவரது ஏற்றத்துக்கான படிக்கற்கள் என்பதுதான் இன்னும் சுவராஸ்யம்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

39 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்