பொருளாதாரத்தைப் பாதிக்கும் வறட்சி

By பெ.தேவராஜ்

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த ஒரு பகல் நேரத்தில் எங்கள் தெருவே பரபரப்பாக இருந்தது. தேர்தல் நேரம் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒலி பெருக்கி அலறியது.. ``தண்ணி வண்டி வந்திருக்கு சீக்கிரம் வாங்க.. அடுத்து இரண்டு நாளுக்கு பெறகுதான் திரும்ப வருவோம்.. சீக்கிரம் வாங்க என ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். புதுக் கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் நிலைமை இது. ‘‘கடலே வத்தி னாலும் நம்ம ஊரு கம்மாய் வத்தாதுடா’’ என்று பெருமை பேசியதுபோய் இப்போது தண்ணீர் லாரி எப்போது வரும் என காத்து கிடப்பது பெரும் அதிர்ச்சியாகத்தான் எனக்கு இருந்தது..

ஆனால் இதைவிடவும் படுமோசமான நிலையில் வட இந்திய மாநிலங்கள் பஞ்சத்தின் கோரப்பிடியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் உள்ள சோன்வதி கிராமத்தில் வசிக்கும் மம்தா தேவி அங்குள்ள கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு 5 முதல் 6 மணி நேரம் செலவிடுகிறார். கிணறு ஊற ஊற ஒவ்வொரு குவளையாக சேமித்து குடத்தை நிரப்ப இவ்வளவு நேரம் ஆகிறது என்கிறார்.

நாட்டின் அதிகமாக வறட்சியை சந்தித்த மரத்வாடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் பருவமழை பொய்த்துவிட்டது. 305 மீட்டருக்கு கீழே நிலத்தடி நீர் சென்று விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கு ஏற்பட்ட வறட்சியை போக்க நிவா ரணமாக அரசு செலவிட்டத் தொகை ரூ.21,000 கோடி. இதுதான் இன்றைய இந்தியாவின் 11 மாநிலங்களில் நிலவுகின்ற உண்மை நிலை. இந்தியா மீண்டும் பஞ்சத்தை சந்திக்கும் அபாய கட்டத்துக்கு போய் கொண்டிருக்கிறதோ என அனைவரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கக் கூடிய நிலை.

வறட்சிக்கு காரணம்

கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. 2014-15-ம் ஆண்டு நாட்டில் மொத்த மழைப் பொழிவின் அளவு 760.6 மில்லி மீட்டர். இது ஆண்டு சராசரி மழைப்பொழிவை விட குறைவானது. குறிப்பாக 2015-16 ஆண்டின் மழை பற்றாக்குறை அளவு 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தவிர எல்நினோ போன்ற சூழலியல் காரணங்களாலும் வறட்சி உருவாகிறது என்கிற காரணத்தையும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாய முறைகள், பெருங் கடலின் வெப்பம் அதிகரிப்பு என பல் வேறு காரணங்களும் இதில் உள்ளன.

ஆனால் இவற்றைவிடவும் முக்கிய காரணமாக இருப்பது நீர் மேலாண்மை யில் இந்தியா பின்தங்கி இருப்பதுதான். 2014-15 ஆம் ஆண்டில் இந்தியா விரயம் செய்த நீரின் அளவு 4 கியூபிக் மீட்டர். சர்வதேச அளவில் நீர் விரயத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

நீர்த் தேக்கங்கள்

1990களுக்குப் பிறகுதான் மழைநீர் சேகரிப்பு என்கிற திட்டம் செயல்பாட் டுக்கே வந்தது. இது ஓரளவுக்கு மழைநீரை சேமிக்கும் திட்டமாக இருந்தாலும் இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தண்ணீரின் தேவையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. நீர் மேலாண்மை நம்மிடம் சரியாக இல்லாததால் நாட்டிலுள்ள 91 பெரிய நீர்தேக்கங்களில் தற்போது 23 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

மழை நீரை தேக்கிவைக்க அணைகள், ஏரிகள், குளங்கள் போன்ற அமைப்புகள் மிக முக்கியமானது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் இந்த உள்கட்டமைப்பு வேலைகளை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் இதன் நோக்கம் திசை மாறி வறட்சியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வெறும் வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமாக மாறிபோனதுதான் மிகப்பெரிய பின்னடைவு.

பிரிட்டிஷ் ஆட்சியில் செயல்படுத்திய அளவுக்குகூட சுதந்திர இந்தியா பஞ்சத்தை எதிர்கொள்வதற்கான எந்த நடைமுறையையும் இதுவரை கொண்டு வரவில்லை. பெரிய அணைக் கட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது பிரிட்டிஷ் ஆட்சியில்தான்.

அப்போதைய சூழ்நிலைக்கு இந்த நடைமுறைகள் பொருந்திபோனாலும் தற்போது இவற்றை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற் போது தனிநபர் நுகர்வு, மின்சார ஆலை போன்ற தொழில்துறைக்கான தண் ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது.

1999-ம் ஆண்டு தொழிற்சாலைகளின் தண்ணீர் பயன்பாடு 34 பில்லியன் கியூபிக் மீட்டரிலிருந்து என்ற அளவில் இருந்தது. 2010 நிலவரப்படி 42 பில்லியன் கியூபிக் மீட்டராக ஆக உயர்ந்துள்ளது.

பணப்பயிர் சாகுபடி

இன்னொருபக்கம் விவசாயிகள் அதிக நீரை செலவிடும் பணப்பயிர்களை நாடிச் செல்கின்றனர். இதனால் விவசாயத்திலும் தண்ணீரின் தேவை அதிகரித்து விட்டது.

மரத்வாடா பகுதியில் கரும்பு அதிகம் பயிரிடுகின்றனர். சில பத்தாண்டுகளுக்கு முன்பு அரசாங்கமே கரும்பு பயிரிட்டால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தியது. கரும்பு பயிரிட்டால் வருமானம் அதிகம் என்பதால் வறட்சி காலங்களில் கூட பயிர்களை மாற்றி பயிரிட விவசாயிகள் மறுக்கின்றனர்.

அரசாங்கமும் விவசாய முறையை மாற்றச் சொன்னாலும், பெரிய அளவில் மாற்றம் இல்லை. தவிர விவசாயத்துக்கு கொடுக்கப்படும் மானியமும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். மின்சாரத்திற்கு மானியம், விவசாய பொருட்களுக்கு மானியம் என பல்வேறு மானியங்களை பெரு விவசாயிகள் பெறும்பொழுது நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விவசாயம் செய்து வருகின்றனர்.

மீண்டும் பஞ்சமா?

வறட்சிக்கான காரணங்கள் அனைத்தும் வறட்சியை எதிர்கொள்ளும் முறையிலேயே இந்தியா இன்னும் தெளிவு பெறவில்லை என்பதைதான் காட்டுகிறது. இந்தியாவில் 1972-ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் நிலவியது. கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் இந்தப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர். 10 கோடி டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அடுத்து 1979, 1987, 2009 என மூன்று முறை பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 2009 பஞ்சம் முழுக்க தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்பட்டது. அந்த ஆண்டு மட்டும் 18.62 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு பிறகும் கூட இந்திய அரசு படிப்பினைகளை கற்றுக்கொள்ளவில்லை.

தற்போது உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா என 11 மாநிலங்கள் வறட்சி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1901க்கு பிறகான வறட்சியில் இது மிகவும் மோசமான நிலை என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் இன்னும் வறட்சி என்ற சொல்லை பயன்படுத்த தயங்குகிறது. இப்போதும் பருவமழை பற்றாக்குறை என்றே சொல்லையே பயன்படுத்தி வருகின்றன.

பருவமழைப் பொழிவு, வறட்சி, பஞ்சம் இந்த மூன்று சொற்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இதனால் உணவுச் சங்கிலியிலும் சிக்க லாகும். வறட்சியால் உணவு பொருட் களின் உற்பத்தி குறையும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் உணவுப் பொருட்கள் உற்பத்தி 18 சதவீதம் குறையும் என அம்மாநில பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் அரிசி 4.1 மில்லியன் டன் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் உணவுப்பொருட் களின் விலை உயர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் உணவுப் பொருட் களின் இருப்பு குறையும். இருப்பு குறைவதால் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும். உணவுப் பொருட்களின் உற்பத்தி குறையும் பொழுது அது நாட்டின் மொத்த ஜிடிபியில் எதிரொலிக்கும். தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதம் பாதிக்கப்படும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது.

அரசின் மெத்தனம்

இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளிடம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. வறட்சியை கையாளுவதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வறட்சியை ஏன் தேசிய பேரிடராக அறிவிக்கக்கூடாது என்ற கேள்வியையும் கேட்டுள்ளது.

தற்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு ரூ. 1,300 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த நிதி நிவாரணத்திற்கு போதாது என்ற குரல்களும் எழுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேசிய பேரிடர் படை அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2020-ம் ஆண்டு தற்போது இருக்கும் உணவுப் பொருட்களை விட கூடுதலாக 100 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டி இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்ந்தால் 36 மில்லியன் டன் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்குரிய நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவேண்டும்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஆண்டு முழுவதும் இருக்கிறது. ஆனால் அங்கு நீர் மேலாண்மை திட்டங்களை அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. அவசியமில்லாத தண்ணீர் பயன்பாட்டை இந்த நாடுகள் குறைத்துள்ளன. இதுதான் இந்தியாவிற்கு தேவை.

மேலும் விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவேண்டிய காலத்தில் இருக்கிறோம். 1951-ம் ஆண்டு தனிநபர் தண்ணீர் இருப்பு 5,177 கியூபிக் மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது 1,545 கியூபிக் மீட்டர் தண்ணீர் இருப்பு மட்டுமே இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த அளவும் குறையும். ஆகவே ஓர் ஆண்டில் இவ்வளவு தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே குறைக்க முடியும்.

நாட்டில் வறட்சி இனி எப்போதும் நிரந்தரமானது. சூழலியல் காரணங் களும் அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் உள்ளன. ஆனால் அதை நிரந்தரமாக எதிர்கொள்ள சிறந்த நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். இல்லையேல் வறட்சிக்கு பலியாகும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்