வங்கிகள் இணைப்பு அவசியமா?

By வாசு கார்த்தி

வங்கிகள் இணைப்பு என்பது காலங் காலமாக பேசப்பட்டு வந்த விஷயம்தான் என்றாலும் இப்போது இந்த விவாதம் சூடுபிடித்திருக்கிறது. 1991-ம் ஆண்டு அந்நிய செலாவணி சிக்கலில் இருந்த சமயத்தில் நரசிம்மன் கமிட்டி வங்கிகள் இணைப்பினை பரிந்துரை செய்தது. அவ்வப்போது வங்கிகள் இணைப்பு என்ற பேச்சு வந்து அடங்கும். கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வங்கிகள் இணைப்பு பற்றி அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரத் தில் எஸ்பிஐ அதன் ஐந்து துணை வங்கி களையும், பாரதிய மகிளா வங்கியையும் இணைக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளி யானது. இந்த அறிவிப்பு வெளியான உடனே வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன.

வங்கி வாரியத்தின் தலைவர் வினோத் ராய் 27 பொதுத்துறை வங்கிகளை ஆறு பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும் என்று கடந்த வாரத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வங்கிகள் இணைப்பு என்பது முக்கிய விவாதப் பொருளானது. வங்கிகள் இணைப்பு சரியா, தவறா என்று ஆராய்வதற்கு முன்பு வங்கிகள் இணைப்புக்குச் சொல்லப்படும் காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

காரணம் என்ன?

சர்வதேச அளவில் முதல் 50 இடங்களில் உள்ள வங்கிகளின் பட்டியலில் இந்திய வங்கிகள் ஏதும் இல்லை. எஸ்பிஐ தன்னுடைய துணை வங்கிகளை இணைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் 45-வது பெரிய வங்கியாக உருவாகும். இது தவிர பல நன்மைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி கூறியிருக்கிறார். வங்கிகள் இணைப்பு மூலம் வங்கிகளின் திறன் மேம்படும், ரிஸ்க் குறையும், பெரிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திறன் உயரும், பெரிய வங்கியாக இருப்பதால் குறைந்த வட்டிக்கு சந்தையில் கடன் வாங்க முடியும் என்பது உள்ளிட்ட பல சாதகங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது இவர் கருத்து மட்டுமல்லாமல் வங்கித் துறை வல்லுநர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இவை நடக்கும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சியும் உயரும் என்ற கருத்தும் இருக்கிறது.

ஏன் கூடாது?

வங்கிகளை இணைக்கக் கூடாது என்று ஊழியர் சங்கங்களும் முன்னாள் ஊழியர்களும் கூறுகின்றனர். ஒரு புறம் பேமென்ட் வங்கி, சிறிய வங்கி என்று ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து வருகிறது. இன்னொரு பக்கம் வங்கிகளை இணைக்கிறது. இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. அடுத்த பிரச்சினை மனிதவளம். வங்கிகள் இணைப்பால் உடனடியாக அதிகம் பாதிப்படைவது ஊழியர்கள்தான். தென் இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இருக்கும் வங்கிகளுக்கும் கலாச்சாரம் வேறு. ஒருவேளை இணைப்பதாக இருந்தாலும் விருப்ப ஓய்வில் பலர் செல்ல வேண்டி இருக்கும். தவிர அதிகாரிகளின் பணியிடங்களில் குழப்பம் ஏற்படும்.

வங்கிகள் இணையும் போது இரண்டு பொது மேலாளர்கள் இருக்கும் பட்சத்தில் பெரிய வங்கியின் பொது மேலாளருக்குதான் பதவி உயர்வு கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், இணைப்புக்கு பிறகு சில வருடங்களில் வங்கித் துறையின் வளர்ச்சி பாதிக்கும். தவிர மொத்தமாக ஆறு வங்கிகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் போட்டி இருக்காது. வங்கிகள் பெரிதாக பெரிதாக அதனை நிர்வகிப்பது கடினம். தவிர வங்கிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெவ்வேறு. வங்கிகள் இணைப்புக்கான செலவு வீண்தான் என்று பொதுத்துறை வங்கியின் முன்னாள் பொது மேலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் தேவை?

இந்த விவகாரம் குறித்து வங்கித் துறை வல்லுநர் ஒருவரிடம் பேசினோம். வங்கிகள் இணைப்பு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி இது தேவையா என்ற விவாதம் முதலில் வரவேண்டும். வங்கிகள் இணைப்பு விஷயத்தில் வங்கி நிர்வாகம், அரசு, பணியாளர்கள், பொரு ளாதாரம் என பல முகங்கள் உள்ளன. அனைத்துத் தரப்பினையும் ஒரே சமயத்தில் திருப்திபடுத்த முடியாது.

வங்கிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும். மாநகரில் ஒவ்வொரு வங்கிக்கும் மண்டல அலுவலகங்கள், பல அடுக்கு அதிகாரிகள், ஒரே தெருவில் பல பொதுத்துறை வங்கிகள் எதற்கு? கிராமப்புற பகுதிகளில் வங்கி கிளைகள் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் நகர்ப்புற பகுதியில்? இணையம் பெருகிக் கொண்டே இருப்பதால் நகர்ப்புற பகுதியில் வங்கிகளுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இடையே உள்ள வாராக்கடன் அளவினை பார்த்தால் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த நிலைமையில் பலவீனமான வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் பட்சத்தில்தான் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை சீர் செய்ய முடியும்.

இந்த வங்கிகள் இணைப்பு என்பது இன்றைக்கானது அல்ல. இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பங்குகளின் நிலைமை?

வங்கிகள் இணைப்பில் இன்னொரு முக்கியமான தரப்பு சிறு முதலீட்டாளர்கள். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவது வங்கிப்பங்குகள்தான். ஒவ்வொரு சிறு முதலீட்டாளரின் டீமேட் கணக்கிலும் ஏதாவது ஒரு வங்கிப் பங்கு இருக்கும். இந்த நிலைமையில் வங்கிப் பங்குகள் நிலைமை என்னவாகும் என்பது குறித்து மும்பையில் உள்ள பங்குச்சந்தை வல்லுநரிடம் பேசினோம்.

பொதுத்துறை வங்கிகளின் நிலைமை இன்னும் மேம்படவில்லை. இன்னும் ஓரிரு காலாண்டுகளுக்கு நிதி நிலை அறிக்கைகள் மோசமாகத்தான் இருக்கும். முன்பை விட நஷ்டம் அதிகரிக்காது என்றாலும் நஷ்டம் இருக்கத்தான் செய்யும். தவிர எந்த வங்கிகளை இணைக்கப்போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரிய வில்லை என்பதால், பொதுத்துறை வங்கிப் பங்குகளில் முதலீட்டை இப்போது தவிர்ப்பது நல்லது.

ரிஸ்க் எடுக்க இருக்கும் முதலீட்டாளர்கள் நிகர வாராக்கடன் 4 சதவீதத்துக்கு கீழே இருக்கும் பங்குகளை வாங்கலாம். தவிர நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற வகையில் இந்த பங்குகள் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பங்குகளில் முதலீடு செய்து லாபம் கிடைத்தால் வெளியேறுவது நல்லது.

பொதுத்துறை வங்கிகளின் மீதான கட்டுப்பாட்டு உரிமையை மத்திய அரசுதான் வைத்துள்ளது. வங்கிகள் இணைப்புதான் சரியான வழி என்று மத்திய அரசு நினைக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கையைத் தடுக்க முடியாது. எந்த ஒரு சரியான முடிவையும் தவறாக கையாளும் பட்சத்தில் பிரச்சினை மேலும் அதிகமாகும். அதுபோல வங்கிகள் இணைப்பு சரியான முடிவாக மத்திய அரசு நினைத்தாலும் கூட அதை எப்படி செயல்படுத்துகிறது, எந்தெந்த வங்கிகளை இணைக்கிறது, எவ்வளவு இடைவெளியில் இணைக்கிறது என்பது முக்கியம். எந்த நடவடிக்கையாக இருந் தாலும் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வங்கிகள், என யாருக்கும் பாதகமில்லாத வகைகள் அமையவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்