கார் பார்க்கிங்: பாஷ் நிறுவனத்தின் புதிய நுட்பம்

By செய்திப்பிரிவு

பல்வேறு சவுகரியங்களைக் கருத்தில் கொண்டு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கியவர்கள் நொந்து கொள்ளும் ஒரே விஷயம் குடும்பத்தினருடன் கடைகளுக்குச் சென்று நிம்மதியாக பொருள்களை வாங்க முடியாததுதான். காரை நிறுத்த உரிய இடத்தைத் தேடி அலைவதே பெரும் பிரச்சினையாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை போன்ற நகரங்களில் இந்தப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கும்படி இருந்தாலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் உரிய பார்க்கிங் வசதி இல்லையெனில் அந்தப் பகுதிகளுக்கு காரில் செல்லவே பலரும் தயங்குகின்றனர். இதுபோன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாது போனால் வாடகைக் காரில் செல்லும் குடும்பத்தினரும் உண்டு. காரை நிறுத்த உரிய இடம் தேடி குறைந்தது 5 கி.மீ. தூரமாவது பயணிக்க வேண்டிய நிலை இப்போது உள்ளது.

இதற்கு இப்போது தீர்வு கண்டுள்ளது பாஷ். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளில் செயல்படக் கூடிய கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடங்களில் இடம் காலியாக உள்ளது என்று துல்லியமாகக் காட்டும். அத்துடன் கார் எவ்வித ஸ்கிராட்ச் இல்லாமல் நிறுத்தவும், திரும்ப எடுக்கவும் வழிகாட்டுகிறது.

கார்களில் ஏற்படும் உராய்வுகள் மற்றும் ஸ்கிராட்சுகளில் 30 சதவீத அளவுக்கு பார்க் செய்யும்போது உருவாகிறது. இதிலும் பல சமயங்களில் காரின் வெளிப் பாகங்கள் சேதமடையும் நிகழ்வுகளும் ஏற்பட்டுவிடுகின்றன.

காப்பீடு நிறுவனங்களில் இழப்பீடு கோரும் கார் உரிமையாளர்களில் 40 சதவீதம் பேர் கார் பார்க்கிங் செய்கிறபோது சேதமடைந்ததாக கூறுகின்றனர் என்று அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காரை பார்க் செய்யும்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக பெரும்பாலும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் உருவாக்கியுள்ளது.

தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்ப கருவியை உருவாக்க பாஷ் பொறியாளர்கள் சுமார் 5 ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளனர்.

இந்தக் கருவி இருப்பதால் கார்களை நிறுத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்காது. இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். அத்துடன் கார் இயங்குவதால் வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும்.

காரை எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று தேடி அலைவதும் குறையும்.

இந்த கருவி விற்பனை நடப்பாண்டில் 100 கோடி யூரோவை ஈட்டித் தரும் என பாஷ் நம்புகிறது.

இந்த தானியங்கி பார்க்கிங் கருவி ஜெர்மனியில் அதிகம் விற்பனையாகிறது.

ஜெர்மனியில் புதிதாக தயாராகும் கார்களில் பாதிக்கு மேல் இதுபோன்ற தானியங்கி பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பம் பொறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் காலியாக உள்ள இடத்தை காண்பிப்பதோடு அங்கு எவ்வித உரசலும் இன்றி காரை நிறுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. ஜெர்மனியில் கடந்த ஆண்டு விற்பனையான 30 லட்சம் கார்களில் 18 லட்சம் கார்களில் இப்புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதாக பாஷ் தெரிவிக்கிறது. பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இத்தொழில்நுட்பத்திலான கார்கள் தயாராகின்றன. இங்கிலாந்தில் இப்போதுதான் இத்தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டில் 19 சதவீத கார்களில் இந்த நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழில் நுட்பம் கொண்ட கார்களை நிறுத்துமிட வாயிலில் நிறுத்தி டிரைவர் இறங்கிக் கொண்டாலே போதும். மொபைலில் உள்ள ஆப்ஸ் மூலம் கார் தானாக இயங்கி காலியான இடத்தில் நின்றுவிடும். பிறகு வெளியில் வரும்போது ஸ்மார்ட்போன் மூலம் இயக்கினால் நாம் இருக்குமிடத்துக்கு கார் வந்துவிடும். இதனால் காரை நிறுத்த இடம் தேடி அலைவதோ பிறகு பார்க் செய்த இடத்தை மறந்து தேடிச் செல்வதோ இருக்காது.

சிலர் தாங்களாகவே காரை நிறுத்த வேண்டும் என்று விரும்பினாலும், குறிப்பிட்ட கார் நிறுத்தும் பகுதியில் எந்த இடத்தில் இடம் உள்ளது என்பதை காரில் உள்ள வரைபடம் காட்டிவிடும். அங்கு காரை நிறுத்திவிடலாம். அதேபோல கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் கார் இருக்கும் இடத்தையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

திரையரங்குகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கார் நிறுத்துமிட வசதி உள்ள பொது உபயோக பகுதிகளில் காலியாக உள்ள இடத்தைக் கண்டறிவதால் இந்த கருவி பொறுத்தப்பட்ட கார்கள் தயாரிப்பு இப்போது ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. இத்தகைய நுட்பம் இந்தியாவில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்