இந்த தலைப்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கலாம். ஆனால் பங்குச் சந்தை வட்டாரங்களில் இப்படி ஒரு தகவல் உலாவுகிறது என்பதுதான் உண்மை. பருவ மழை கூடுதலாக பொழியும் என்ற எதிர்பார்ப்பும், பணவீக்கம் குறைந்திருக்கிறது என்பதாலும் மேலும் வட்டி விகிதம் குறையக்கூடும் என்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்றம் இருந்தது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் இருந்தாலும் இந்த ஏற்றம் நீடிக்காது என்பதே மும்பை வட்டாரங்களில் உள்ள செய்தியாகும்.
சில நேர்காணல்களுக்காக கடந்த வாரத்தில் மும்பை சென்ற போது சில பங்குச்சந்தை வல்லுநர்களையும் சந்திக்க நேர்ந்தது. முக்கிய நிறுவனத்தின் பங்குச் சந்தை பிரிவின் தலைமை ஆலோசகரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியிடம் இருந்து பங்குச்சந்தை வல்லுநருக்கு போன் வந்தது. அவருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிநாதம் பங்குச் சந்தை கடுமையான சரிவுக்கு தயாராகி வருகிறது என்பதுதான்.
பல வல்லுநர்களின் தகவலின் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு அதிகாரி முடிவினை எடுத்தாலும், இந்த தகவலும் அவருக்கு முக்கியமானது. பல ஆயிரம் கோடிகளை கையாளும் ஒருவருக்கு கிடைத்த இந்த தகவல், அவரை சேர்ந்த பலருக்கும் கிடைக்கக் கூடும் என்பதும் இங்கே கவனிக்க கூடியது.
சரிவுக்கு சொல்லும் காரணம்?
பங்குச் சந்தை வல்லுநர் நம்மிடம் கூறிய தகவல் இதுதான். தற்போது 7850 புள்ளியில் நிப்டி இருக்கிறது. மேலும் 50 புள்ளிகள் கூட பங்குச்சந்தை உயரலாம். உயரும் ஒவ்வொரு முறை யும் வெளியேறுவதற்கான வாய்ப்பாக கருதவும். அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் தற்போதைய நிலைமை யில் இருந்து நிப்டி 1000 புள்ளிகள் வரை கூட சரிய வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி நிப்டி அதிகபட்ச புள்ளியாக 9119 என்ற புள்ளியை தொட்டது. அதிலிருந்து 6825 என்ற புள்ளி அளவுக்கு (பிப்ரவரி 29, 2016) மிக வேகமாக சரிந்தது. கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதத்துக்கு மேல் சரிந்திருப்பதால் பங்குச் சந்தை மேலும் சரியவே வாய்ப்பு உள்ளது. 7890 என்னும் புள்ளியை கடந்து மேலே செல்லாத வரையில் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மிரட்டும் வரலாறு!
கடந்த 25 ஆண்டு கால சென்செக்ஸ் வரலாற்றில் 1995,96,98,2001,2008,2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் முந்தைய வருடத்தின் குறைந்தபட்ச புள்ளிக்கும் கீழே பங்குச் சந்தை சரிந்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் இருந்ததில்லை. அதாவது இந்த வருடம் சென்செக்ஸ் அதிகபட்சமாக 26197 புள்ளியையும் நிப்டி அதிகபட்சமாக 7972 புள்ளியை தொட்டிருக்கிறது. இந்த புள்ளிகளுக்கு மேலே இந்த ஆண்டில் பங்குச்சந்தை உயர்வதற்கான வாய்ப்பு குறைவு.
எட்டு வருட சுழற்சி
தவிர எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு சென்செக்ஸ் 4546 புள்ளியில் இருந்து 1980 புள்ளிக்கு சரிந்தது, 2000-ம் ஆண்டு 6150 புள்ளியில் இருந்து 2594 புள்ளிக்கு சரிந்தது. 2008-ம் ஆண்டு 21206 புள்ளியில் இருந்து 7967 புள்ளிக்கு சென்செக்ஸ் சரிந்தது. ஆனால் இப்போது ஏழாவது வருடமே பங்குச்சந்தை சரிய ஆரம்பித்திருக்கிறது. சென்செக்ஸ் 30025 என்ற உச்சபட்ச புள்ளியில் இருந்து சரிய ஆரம்பித்திருக்கிறது. 21000 புள்ளிகள் வரைக்கும் கூட சரியலாம். இதற்கும் கீழே சரியும் போது பங்குச் சந்தையில் மேலும் சரிவு ஏற்படலாம். தவிர இந்த ஆண்டும் அமெரிக்காவில் தேர்தல் நடக்க இருக்கிறது. அமெரிக்காவில் எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அந்தந்த ஆண்டுகளில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எட்டு வருட சுழற்சி மற்றும் அமெரிக்க தேர்தல் இரண்டும் ஒரு சேர நடக்கிறது என்பதால் சரிவு இருக்க கூடும்.
இதைவிட காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. காலாண்டு முடிவுகளில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்னும்பட்சத்தில் பங்குச்சந்தையில் ஏற்றம் எப்படி இருக்க முடியும் என்று பங்குச்சந்தை வல்லுநர் நம்மிடம் கூறினார்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இன்னொரு கருத்தும் சந்தையில் இருக்கிறது. மும்பையில் இருக்கும் முன்னணி நிபுணரிடம் சந்தை சரிவதற்கான காரணங்களை நாம் அடுக்கியதும், பங்குச்சந்தை சரியவே சரியாது என்பதல்ல விஷயம். ஆனால் நீங்கள் கூறும் அளவுக்கு சரிய வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, இது போல தற்செயல் நிகழ்வுகளை தவறு என்பதை பல உதாரணங்களுடன் நிரூபிக்க முடியும். எல்லா நேரத்திலும் வரலாறு திரும்பாது.
சில மாதங்களுக்கு முன்பு கிரீஸ், ஐரோப்பிய பிரச்சினை உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. அப்போது அதனை விவாதித்த யாரும் இப்போது கிரீஸ் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு தூரம் ஏன் செல்ல வேண்டும் பிஹார் தேர்தலை பங்குச் சந்தையின் போக்கு முக்கிய காரணம் என்று பலர் கூறினார். ஆனால் பிஹார் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. பிஹார் தேர்தல், அமெரிக்கா தேர்தல் என்று சொல்லப்படும் காரணங்கள் குறுகிய கால நிகழ்வுகள். பலர் இந்த குறுகிய கால நிகழ்வுகளை பெரிது படுத்துகின்றனர். அரசியல் நிகழ்வுகள் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அவை குறுகிய கால பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும்.
இங்கு பலரின் கணிப்புகள் சொந்த அடிப்படையில், அதன் விருப்பு வெறுப்புகளின் பேரில் எடுக்கப் படுகிறது. பங்குச் சந்தை சரிவு என்று சொல்வதற்கு, சரிய வேண்டும் என்ற அவர்களது விருப்பம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதைக்கு முதலீட்டு சூழல் சாதகமாக இருக்கிறது. பல நாடுகளின் வானிலை ஆய்வு மையங்கள் மழை நன்றாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாத காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிடும் போது மார்ச் காலாண்டு முடிவுகள் மேம்பட்டு இருக்கும் பலர் கணித்திருக்கிறார்கள்.
ஜூன், ஜூலை மாதத்தில் மழை போதுமான அளவில் இல்லை என்றாலோ, அமெரிக்காவின் வளர்ச்சி மந்தமாக இருந்தாலோ, இந்தியாவில் பொருளாதாரம் தகவல்கள் சரியில்லை என்னும் பட்சத்தில் சந்தையில் சரிவு ஏற்படலாம். ஆனால் இந்தியாவில் அடிப்படை பலமாக இருக்கும் பட்சத்தில் சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட தேவையில்லை என்றார்.
வரலாறு மீண்டும் திரும்புகிறதா இல்லையா என்பதை இன்னும் சில மாதங்களுள் தெரிந்துகொள்ளலாம்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago