ஆப்பிள் ஐ-போனுக்கு எந்த அளவுக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கிறதோ அதே அளவுக்கு டெஸ்லா கார்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது.
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் டெஸ்லா கார்களை பலரும் விரும்புவதற்குக் காரணமே அது பேட்டரியால் இயங்குவதுதான். பேட்டரி கார்களில் டெஸ்லா அளவுக்குச் சிறப்பாக செயல்படும் கார்கள் இன்னமும் சந்தைக்கு வரவில்லை. இதனாலேயே பேட்டரி கார்களின் ஏகபோக சக்ரவர்த்தியாக டெஸ்லா கார்கள் திகழ்கின்றன.
மேலும் சுற்றுச் சூழல்காப்பில் ஆர்வமுள்ள பலரும் விரும்புவது டெஸ்லா கார்களைத்தான்.
இந்நிறுவனத்தின் விலை குறைந்த கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக இந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியச் சந்தையில் இந்தக் கார்கள் கிடைக்கும் என்றாலும், கார்களை சார்ஜ் செய்வதற்கான மின்நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை (சூப்பர் சார்ஜர்) வசதிகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது டெஸ்லா.
இந்தியா உள்பட பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், அயர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப் போவதாக தனது 3 பக்க ட்விட்டர் கடிதத்தில் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார்களின் விலை 35 ஆயிரம் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.23.20 லட்சமாகும். இந்தக் கார்கள் 2017-ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என டெஸ்லா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் தொடங்கி அங்கிருந்து படிப்படியாக திட்டமிட்ட அனைத்து நாடுகளுக்கும் டெஸ்லா கார்களை ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனத்துக்கென சில சிறப்பம்சங்கள் உண்டு. டீசல், பெட்ரோலில் இயங்கும் கார்களில் பல புதுமைகளைப் புகுத்தி, அதிக திறன் மிக்க கார்களை பிற நிறுவனங்கள் தயாரித்து வந்த நிலையில் தனக்கென ஒரு நிலையான கொள்கையை வகுத்து அதில் செயல்படுவதுதான் டெஸ்லாவின் சிறப்பம்ச மாகும். அதாவது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத கார்களைத் தயாரித்து விற்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது டெஸ்லா.
சூரிய ஆற்றலில் இயங்கும் கார்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கார் தயாரிப்பு ஆலை என்ற பெருமையும் டெஸ்லாவுக்கு உண்டு.
டெஸ்லா கார்களில் மாடல் 3 கார்கள் இந்தியச் சந்தைக்கு வருவதால் இத்தகைய கார்களுக்கான மவுசு அதிகரிக்கும். இத்தகைய கார்களின் விற்பனை போக்கையே இது மாற்றியமைக்கும் என்று எதிர்பார்ப்பதாக ரெவா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய சேதன் மெய்னி குறிப்பிட்டுள்ளார். (இப்போது இந்நிறுவனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட பேட்டரி கார்களை சந்தைப்படுத்தி வருகிறது).
இந்தக் காரை ஆயிரம் டாலர் செலுத்தி முன் பதிவு செய்தவர்களில் மெய்னியும் ஒருவராவார். மாடல் 3 கார்களுக்கான முன் பதிவு தொடங்கிய 3 தினங்களில் மொத்தம் 1.35 லட்சம் பேர் இந்தக் கார்களுக்காக முன் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் காரை வாங்க முன் பதிவு செய்துள்ளவர்களில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவும் ஒருவராவார்.
இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப வலது பக்கத்தில் ஸ்டீரிங் வீல் கொண்ட கார்களை டெஸ்லா தயாரிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்தக் காரை வாங்க திட்டமிட்டிருந்தேன். அது இப்போது கைகூடியுள்ளது. அது கைக்கு கிடைக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறுகிறார் சர்மா.
கம்ப்யூட்டர் விளையாட்டு சாஃப்ட் வேர் உருவாக்கும் நிறுவனத்தைச்சேர்ந்த விஷால் கோண்டல், மகேஷ் மூர்த்தி, ஆன்லைன் ஃபேஷன் போர்டல் வூனிக் நிறுவனர் சுஜாயத் அலி, பிராக்டோ நிறுவனர் சஷாங்க் ஆகியோரும் டெஸ்லா மாடல் 3 கார்களை வாங்க முன் பதிவு செய்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஏப்ரல் 1 தேதியில் எலன் மாஸ்க் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதால், முட்டாளாக்கும் முயற்சியோ என்று கருதி சோதனை ரீதியில் காரை ஓட்டிப் பார்க்க முன் பதிவு செய்துள்ளார் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்.
2015-ம் ஆண்டிலேயே இந்தக் கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டமிட்டிருந்தது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக சுங்க வரி விதிக்கப்படுவதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது டெஸ்லா.
கடந்த ஆண்டு சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா கார் ஆலையையும் பார்வையிட்டார்.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார்கள்தான் இந்நிறுவனத் தயாரிப்புகளில் விலை குறைந்ததாகும். இருப்பினும் இறக்குமதி வரி குறித்து எந்த அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஒருவேளை சுற்றுச் சூழலை பாதிக்காத இத்தகைய கார்களுக்கு வரி குறைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது. 40 ஆயிரம் டாலருக்குக் குறைவான கார்களுக்கு 60 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. சிகேடி முறையிலான கார்களுக்கு (உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இங்கு ஒருங்கிணைத்து விற்பது) 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. டெஸ்லா இதில் சிகேடி முறையை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா கார்களுக்கு பெருமளவு வரவேற்பிருந்தாலும் அது பெரும் பாலானவர்களைச் சென்றடைய வேண்டுமெனில் விலை குறைய வேண்டும். அதேசமயம் டெஸ்லா கார்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். நிசான் நிறுவனம் ஏற்கெனவே பேட்டரியால் இயங்கும் லீஃப் என்ற பெயரிலான காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் தயாரிப்புகளும் இப்போது சந்தைக்கு வர உள்ளன. டெல்லியைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற நிலையில் எதிர்காலத்தில் பேட்டரி கார்களுக்கு தேவை அதிகரிக்கும். அப்போது டெஸ்லா கார்களுக்கும் வரவேற்பிருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago