ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்கிற கோஷங்களுக்கு மத்தியில் இப்போது தொழில்நுட்பத் துறையில் எழுந்திருப்பது அனைத்துத் தேவைகளுக்குமான ‘ஒரே ஆப்’. அனைத்து தேவைகளையும் ஒரே செயலியின் வழியே நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ‘சூப்பர் ஆப்’ (super app) என அழைக்கப்படுகின்றன. இன்றைக்கு நாட்டில் இருக்கும் பெரிய தொழில் குழுமங்கள், வங்கிகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் ‘சூப்பர் ஆப்’
உருவாக்க பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ‘சூப்பர் ஆப்’ களத்தில் ரிலையன்ஸ், டாடா, அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பெரிய வங்கிகளும் கச்சை கட்டிக்கொண்டு நிற்கின்றன.
வேகம்கொள்ளும் ஆன்லைன் வர்த்தகம்
கரோனா பரவல் தொடங்கியதற்குப் பிறகு, அன்றாட செயல்பாடுகள் டிஜிட்டல் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் தற்போது பல வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு 90 பில்லியன் டாலராக இருந்த டிஜிட்டல் வர்த்தகம் 2030 ஆம் ஆண்டில் 800 பில்லியன் டாலரைத் தொடும் என கூறப்படுகிறது. ஆன்லைன் வழியிலான வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை எந்தவொரு நிறுவனமும் தவறவிட விரும்பவில்லை. இதன் நீட்சியே ‘சூப்பர் ஆப்’பை நோக்கிய நகர்வு.
‘சூப்பர் ஆப்’ என்பது அனைத்துச் சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு மெய்நிகர் தளம் அல்லது செயலியாகும். இப்போது நாம் பொருள்களை வாங்க, டாக்ஸியை அழைக்க, உணவுக்கு ஆர்டர் செய்ய, வங்கியில் பணம் கட்ட, ஆன்லைனில் தகவல்கள் அனுப்ப என ஒவ்வொரு சேவைக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவையனைத்தையும் உள்ளடக்கியதாக, ‘அனைத்துக்கும் ஒரு செயலி’ என்கிற நோக்கத்தில் இந்த ‘சூப்பர் செயலி’கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூப்பர் செயலிகளில் இப்போதைக்கு மிகப் பிரபலமானதாகவும், மிகச் சிறப்பானதாகவும் இருப்பவை சீனாவிலிருக்கும் டென்செண்ட்டின் ‘விசாட்’ (WeChat) அலிபாபாவின் ‘அலிபே’ (Alipay) ஆகும். இவை தவிர, இந்தோனேசியாவின் ‘கோஜெக்’ (Go-Jek) என்கிற செயலியும் சூப்பர் செயலியாகக் கருதப்படுகிறது. இது இரண்டு சக்கர வாகனத்தை அழைக்கும் செயலியாகத்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நாளடைவில் உணவு ஆர்டர் செய்ய, டிஜிட்டல் பேமெண்ட் செய்ய, எந்தவொரு ஆன்லைன் தளத்திலும் பொருள்களை வாங்க, பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
‘சூப்பர் ஆப்’ பந்தயத்தில் இருக்கும் இந்திய நிறுவனங்களில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.
ரிலையன்ஸின் ‘மை ஜியோ’
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெவ்வேறு துறைகளில் இயங்கிவரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வாங்கிவருகிறது. 2021-22 ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதம் ஆன்லைன் வழியே மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான ‘மில்க்பாஸ்கெட்’டையும், இந்தியாவின் தேடல் தளமான ‘ஜஸ்ட் டயலை’யும், வீட்டு அலங்காரம் நிறுவனமான ‘போர்டிகோ’வையும், ஆடை வடிவமைப்பாளர் ரித்து குமாரின் ‘ரித்திகா’ என்ற ஃபேஷன் ஹவுஸின் கட்டுப்பாட்டு உரிமையையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, ‘நெட்மெட்’ என்கிற ஆன்லைன் பார்மசி, ‘அர்பன்லேடர்’ என்கிற பர்னிச்சர் நிறுவனம், ‘7-லெவன்’ என்கிற அமெரிக்க நிறுவனத்தின் பிரான்சைஸ் உரிமை, ‘டன்சோ’வில் 200 மில்லியன் டாலர் முதலீடு என நாளொரு மேனியும் பொழுதொரு நிறுவனமுமாக தனது சாம்ராஜ்யத்தைப் பல துறைகளிலும் ரிலையன்ஸ் விரிவுபடுத்தி வருகிறது. இதற்கிடையே சொந்தமாக, ‘ஜியோ மார்ட்’ என்ற பெயரில் இ-காமர்ஸ் தளத்தையும் ரிலையன்ஸ் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த அனைத்து சேவைகளையும் ‘மை ஜியோ’ செயலியின் வழியே வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. ‘மை ஜியோ’ செயலியானது இ-காமர்ஸ், இ-மெடிசின், ஓடிடி, மியூசிக், கேம்ஸ், டிக்கெட் முன்பதிவு, பணப்பரிவத்தனை என பல சேவைகளையும் உள்ளடக்கிய தளமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் விரிவாக்கம் கொள்ளும்.
டாடாவின் ‘டாடா நியு’
டாடா குழுமமானது ‘டாடா நியு’ (Tata Neu) என்கிற சூப்பர் செயலியை உருவாக்கி தனது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களிடையே அதன் செயல்பாட்டை பரிசோதனை செய்து வருகிறது. இக்குழுமமும் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மளிகை வியாபாரம் செய்யும் ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின் 64 சதவீதப் பங்குகளை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. உடல்நலம், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட்-அப்பான ‘க்யூர்-ஃபிட்’ நிறுவனத்தில் டாடா 75 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. டாடா உருவாக்கிவரும் சூப்பர் செயலி மளிகை சாமான்கள், உடல்நலம் குறித்த பொருள்கள் மற்றும் சேவைகள், இ-மெடிசின், இ-லேர்னிங், நிதி சேவைகள், ஃபாஷன் சம்பந்தப்பட்ட பொருள்கள், சேவைகள் ஆகிய அனைத்துக்கும் உபயோகப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதாக இருக்கும்.
போன்பே
சூப்பர் செயலி என்பது ஒரு நிறுவனம் அதன் பலதரப்பட்ட சேவைகளை ஒருங்கிணைக்க உருவாக்குவது என்றில்லை, அது பல நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் கூட்டு முயற்சியாகவும் இருக்கலாம். டிஜிட்டல் பேமெண்ட் சேவை வழங்கும் நிறுவனமான போன்பே, தன்னுடைய செயலியை ஓலா, ரெட்பஸ், ஸ்விக்கி, குரோஃபெர்ஸ், அஜியோ, புக்கிங்.காம், டெகாதலான், டெல்லி மெட்ரோ ஆகியவற்றின் செயலிகளோடு அல்லது அவற்றின் இணையதளங்களோடு ஒருங்கிணைத்து செயல்படுகிறது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி
வங்கிகளைப் பொருத்தவரையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது செயலியான ‘யோனோ’ (You Only Need One - Yono) மூலம் வாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க, பரஸ்பர திட்டங்களில் முதலீடு செய்ய, காப்பீடு வாங்க, ஷாப்பிங் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்ய, மருந்து மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்ய என பலவற்றிற்கும் பயன்படுத்துமாறு வடிவமைத்திருக்கிறது. இது போல ஐசிஐசிஐ வங்கியின் ‘ஐமொபைல் பே’ (iMobile Pay) செயலியும் பல சேவைகளை வழங்கும் தளமாக உருவாக்கியிருக்கிறது. அதேபோல் ஆக்ஸிஸ் வங்கி அதனுடைய ஆன்லைன் சந்தைத் தளமாக ‘கிராப் டீல்ஸ்’ (Grab Deals) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறது. இந்த மொபைல் செயலி மூலம் பல துறைகள் சார்ந்த ஆக்ஸிஸ் வங்கியின் 45 கூட்டாளி நிறுவனங்களின் சேவைகளையும் பெற முடியும்.
சூப்பர் செயலி இந்தியாவில் எடுபடுமா?
இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொள்ளும் போது, இந்தியாவில் ‘சூப்பர் செயலி’களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்ற சந்தேகத்தை அத்துறை சார்ந்த சில நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். சீனாவைப் பொருத்த வரையில் நுகர்வோர்களின் ஷாப்பிங் நடத்தை ஓரளவுக்குச் சீராக இருக்கும். ஆனால் இந்தியர்கள் தள்ளுபடி மற்றும் வேறு சில சலுகைகளை எதிர்பார்க்கிறவர்கள். இந்தியர்கள், ஒரே செயலிக்குள் தங்களைக் குறுக்கிக்கொள்ளாமல், பலவிதமான தெரிவுகளை பரிசோதித்துப் பார்க்க விரும்புபவர்கள். எனவே ‘சூப்பர் செயலி’ இந்திய மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பது போகப்போகத்தான் தெரியும். எனினும், அனைத்தையும் உள்ளடக்கிய ‘சூப்பர் செயலி’களுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்என்பதையும் மறுக்க முடியாது.
‘சூப்பர் செயலிகள்’ இந்தியச் சந்தையில் ‘சூப்பர் ஸ்டாராக’ சந்தையையும் நுகர்வோர்களையும் ஈர்க்குமா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.
தொடர்புக்கு: sidvigh@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago