தேசியப் பங்குச் சந்தை – சித்ரா ராமகிருஷ்ணா – அடையாளம் தெரியாத இமயமலை யோகி விவகாரம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சாதாரண மக்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், இது தனிப்பட்ட ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒன்றாக கடந்துபோகக்கூடியதாக இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க வேண்டிய, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடிய வல்லமை கொண்ட ஒரு அமைப்பு, இவ்வளவு ஓட்டைகளுடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது நாட்டின் ஏனைய முக்கிய அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகியுள்ளது.
எங்கு தொடங்கியது?
2010-ம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தை கோ - லொக்கேஷன் (Co-location) என்றொரு வசதியை அறிமுகப்படுத்தியது. பங்குச் சந்தை வர்த்தகம் இணையம் மூலம் நடந்து வருகிற நிலையில், அதிவிரைவு இணைய வசதியும், அதற்கான கட்டமைப்பும் இருந்தால் பங்குச்சந்தை நிலவரங்களை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், என்எஸ்இ-ன் சர்வர்களுடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்கள் இணைவு ஏற்படுத்திக்கொள்வதன் வழியே பங்குச் சந்தை நிலவரங்களை துரிதமாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ளமுடியும். இந்த வசதிதான் கோ - லொக்கேஷன் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இப்படியான கட்டமைப்பில் முறைகேடு நிகழ்வதற்கு அதிக வாய்ப்புண்டு. அப்படியான முறைகேடுகள்தான் என்எஸ்இ-ல் நிகழ்ந்தன. இப்படியான சூழலில், என்எஸ்இ குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஏனைய நிறுவனங்களுக்கு முன்னதாகவே பங்குச் சந்தை நிலவரங்களை அறிந்திட வழிவகை செய்து கொடுத்துள்ளது என்று 2015-ம் ஆண்டு ஒரு அனாமதேய புகார் வெளிவந்தது. அந்தப் புகார்தான் தற்போது வெடித்திருக்கும் பூகம்பத்துக்கு அடிப்படை.
அந்த அனாமதேய புகாரை ‘மணிலைஃப்’ (moneylife) பத்திரிகை பிரசுரித்தது. உடனே, என்எஸ்இ ரூ.100 கோடி மான நஷ்டஈடு கேட்டு அந்தப் பத்திரிகை மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் என்எஸ்இ-யின் அந்த வழக்கை தள்ளுபடி செய்து, ‘மணிலைஃப்’ பத்திரிகைக்கு என்எஸ்இ-தான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நிலவரம் தீவிரம் அடைவதை உணர்ந்த பங்குப் சந்தை பரிவர்த்தனை வாரியமான செபி, என்எஸ்இ மீதான விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அந்தப் புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அடையாளம் தெரியாத இமயமலை யோகி
தேசிய பங்குச் சந்தை என்று பெயர் இருப்பதால், பலரும் அதை பொதுத்துறை நிறுவனம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்எஸ்இ ஒரு தனியார் நிறுவனம். தவிர, அந்நிறுவனம் இன்னும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. பங்குச் சந்தையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் அரசின் அறிவுறுத்தலின்பேரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் என்எஸ்இ என்றழைக்கப்படும் தேசிய பங்குச் சந்தை. 1992-ம் ஆண்டு என்எஸ்இ தொடங்கப்பட்டு 1994-ல் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ரவி நாராயண் நியமிக்கப்பட்டார். அவர் 2013 மார்ச் வரையில் அப்பொறுப்புகளில் இருந்தார். அதன் பிறகு அவர் அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு ஏப்ரலில் பொறுப்பேற்ற சித்ரா ராமகிருஷ்ணா 2016 டிசம்பர் வரையில் அப்பொறுப்புகளில் இருந்தார். இந்த இடைப்பட்டக் காலத்தில் அவரது செயல்பாடுகள்தான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
சித்ரா சிஇஓ-வாக பொறுப்பேற்ற உடனே, ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நிறுவனத்துக்கு தலைமை ஆலோசகராக நியமித்தார். இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக ஆனந்த் சுப்ரமணியன் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ‘பால்மர் லாரி’ குழுமத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவரது ஆண்டு ஊதியம் ரூ.15 லட்சம். தேசியப் பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது ஆண்டு ஊதியம் ரூ.1.6 கோடி. அடுத்தடுத்த மாதங்களில் அது ரூ.4 கோடி வரையில் உயர்த்தப்பட்டது. இது தவிர, பணியிலும் அவரைவிட மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத வசதிகள், சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்படும் அளவுக்கு ஆனந்த் சுப்ரமணியனுக்கு அப்பணி சார்ந்த முன் அனுபவம் எதுவும் கிடையாது. பிறகு ஏன் ஆனந்த சுப்ரமணியக்கு இவ்வளவு முன்னுரிமை என்ற கேள்விக்கான விடைதான் தற்போது இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையில் என்எஸ்இ-ன் சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா அந்நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் இமயமலையில் உள்ள அடையாளம் தெரியாத யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே மேற்கொண்டுள்ளார் என்று செபியின் சமீபத்திய விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிக்யஜூர்சாம@அவுட்லுக்.காம் (rigyajursama@outlook.com) என்ற மின்னஞ்சலுக்கு சித்ரா ராமகிருஷ்ணா பல முறை தொடர்பு கொண்டிருப்பதை செபி கண்டறிந்தது. அது யார் என்று சித்ரா ராமகிருஷ்ணாவிடம் செபி விசாரித்தபோது, அவர் இமயமலையில் வாழும் யோகி என்றும் அவர் தன்னுடைய ஆன்மீக குரு என்றும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வுசார்ந்தும் பணிசார்ந்தும் அவரிடம் ஆலோசனை கேட்பதுண்டு என்றும் சித்ரா தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், பங்குச் சந்தை சார்ந்த விவரங்கள் என பல முக்கிய தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணா அந்த அடையாளம் தெரியாத யோகியிடம் பகிர்ந்துள்ளார். அனைத்திலும் உச்சமாக, அந்த யோகியின் பரிந்துரையின்படியே, பங்குச் சந்தை நிர்வாகம் சார்ந்து எந்த முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை என்எஸ்இ-யின் ஆலோசகராக சித்ரா நியமித்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதேசமயம், அந்த அடையாளம் தெரியாத யோகி வேறு யாருமில்லை, ஆனந்த் சுப்ரமணியன்தான் என்ற கோணத்தையும் செபியின் அறிக்கை முன்வைக்கிறது. ஆனந்த் சுப்ரமணியனுக்கு மனித உளவியலில் பரிச்சயம் உண்டு. அவர்தான் தன்னை யோகியாக புனைந்து சித்ரா ராமகிருஷ்ணனை தன் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வைத்துள்ளார் என்று என்எஸ்இ செபியிடம் தெரிவித்துள்ளது. நிதி ஆலோசனை மற்றும் தணிக்கை நிறுவனமான எர்னஸ்ட் அண்ட் யங் மேற்கொண்ட ஆய்வின்படி, யோகியின் பெயரில் ஆனந்த் சுப்ரமணியன்தான் சித்ராவை தொடர்பு கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவை எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சித்ராவின் இந்தச் செயல்பாடு குறித்து என்எஸ்இ இயக்குநர் குழு குறிப்பிடும்படியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தவிர, முன்னாள் சிஇஓ ரவி நாராயணனும் இதுகுறித்து எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நிலவரம் தீவிரமடைந்த நிலையில் ஆனந்த சுப்ரமணியன் 2016 அக்டோபரிலும், சித்ரா ராமகிருஷ்ணா 2016 டிசம்பரிலும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தற்போது சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நாராயண், ஆனந்த் சுப்ரமணியன், என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி ஆகியோருக்கு செபி அபராதம் விதித்துள்ளது. ஏற்கெனவே, கோ - லொகேஷன் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவ்வழக்குத் தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ கைது செய்தது.
செபியின் அலட்சியம்
இவ்வளவு பெரிய விதிமீறலில் செபிக்கும் பங்கு இருக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை செபி இழுத்தடித்துள்ளது என்பது அதன் மீதான முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. செபி உரிய நேரத்தில் விசாரணை மேற்கொண்டு, என்எஸ்இ போக்கை கண்காணித்திருந்தால் இவ்விவகாரம் ஆரம்பத்திலேயே தெரியவந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
நாட்டின் முக்கிய அமைப்புகள் எவ்வளவு தூரம் பொறுப்பற்றும் அலட்சியமாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இந்த விவகாரம் உதாரணமாக அமைகிறது. என்எஸ்இ வழியே தினமும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. பங்கு சந்தை முதலீடு என்பது மக்களின் பிரதான முதலீட்டு தேர்வாக மாறியுள்ளது. இப்படியான ஒரு அமைப்பில் இவ்வளவு ஓட்டைகள் இருந்துள்ளன, அதைக் கண்காணிக்க வேண்டிய அமைப்பும் அலட்சியமாக இருந்துள்ளது என்றால் இந்தியாவில் எந்த அமைப்பைதான் நம்புவது?
- தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago