‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் வளர்ச்சி நிலைக்குமா?

By செய்திப்பிரிவு

இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தும் விதமாக, சமீபத்தில் பிரதமர் மோடி, ஜனவரி 16-ம் தேதியை தேசிய ‘ஸ்டார்ட்அப்’ தினமாக அறிவித்தார். அவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை புதிய இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் சரி, அவற்றின் சந்தை மதிப்பின் அடிப்படையிலும் சரி உலக அளவில் இந்தியா மிக முக்கியமான இடத்தில் உள்ளது. எனினும், நாம் நினைப்பதுபோல் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் லாபம் பெருக்கிடவில்லை. பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்கிவருகின்றன. பிறகு ஏன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்ந்து அதிக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது? புதிது புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன? உண்மையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியை சாத்தியப்படுத்துமா அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது உடைந்து மறையும் குமிழியா (Bubble)?

கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் ஆன்லைன் வணிகம், நிதி, கல்வி, மருத்துவம், விவசாயம் உட்பட பல்வேறு துறைகளிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அந்தவகையில் இந்தியாவில் 55,000- க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் மதிப்பீடு வானத்தைத் தொட்டாலும் இதுவரை லாபம் என ஒரு ரூபாய் கூட அவை ஈட்டவில்லை.

2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 76 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ‘யுனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு பில்லியன் டாலரை (ரூ.7500 கோடி) கடந்தால் அந்நிறுவனம் ‘யுனிகார்ன்’ என்று அழைக்கப்படும். பிளிப்கார்ட், சொமோட்டோ, பைஜூஸ், ஃபார்ம் ஈஸி, பாலிசி பஜார், நைக்கா ஆகிய பிரபலமான நிறுவனங்கள் ‘யுனிகார்ன்’ பட்டியலில் உள்ளன.

இதில் சில நிறுவனங்களின் நிதி நிலையைப் பார்போம். பிளிப்கார்ட் இதுவரை பெற்ற முதலீடு ரூ.93,420 கோடி, இதன் ஆண்டு வருமானம் ரூ.34,610 கோடி, நஷ்டம் ரூ.3,150 கோடி. சொமோட்டோ பெற்ற முதலீடு ரூ.14,800 கோடி, வருமானம் ரூ.1,994 கோடி, நஷ்டம் ரூ.816 கோடி, பேடிஎம் பெற்ற முதலீடு ரூ.34,336 கோடி, வருமானம் ரூ.2,802 கோடி, நஷ்டம் ரூ.1,701 கோடி.

சந்தையே தீர்மானிக்கிறது

லாபம் ஈட்டாதபோதும் ஸ்டார்ட்அப் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன?

ஒரு நிறுவனத்தின் மீதான முதலீட்டை சந்தையே தீர்மானிக்கிறது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் எந்தச் சந்தையை குறிவைக்கிறது, அதன் உத்தி என்ன என்பதைத்தான் முதலீட்டாளர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நாட்டின் மக்கள் தொகை, அம்மக்களின் நுகர்வு நடைமுறை என்பதன் அடிப்படையிலே ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக மூதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவை எடுத்துக்கொள்வோம். கடந்த பத்தாண்டுகளில் ஸ்மார்ட் போன், இணையப் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதன் நீட்சியாக மக்களின் நுகர்வு நடைமுறை மாறி இருக்கிறது. இணையம் வழியாக பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, மருத்துவம், கல்வி என பல செயல்பாடுகளும் இணைய வழியிலானதாக மாறியுள்ளது. இந்தச் சூழல்தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சந்தை. லாபத்தை விடவும் சந்தையைக் கைப்பற்றுவதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆரம்ப கட்ட இலக்காக உள்ளது. சந்தையைக் கைப்பற்றிவிட்டால் பிற்பாடு லாபம் தானாகவே வந்துவிடும் என்பது முதலீட்டாளர்களின் கணக்கு.
மாறும் வரையறை தவிர, நிறுவனத்தின் லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி என்பதற்கான வரையறை தற்போது மாறியுள்ளது.

ஓவியம்: முத்து

தொழில்துறையில் ஸ்டார்ட்அப் என்கிற போக்கு அறிமுகமாவதற்கு முன்பாக தொழில் என்றால் லாபம் சம்பாதிப்பது என்பதுதான் தாரக மந்திரமாக இருந்து வந்தது. தவிர அப்போது தொழில் என்பதைப் புரிந்து கொள்வதும் எளிமையாக இருந்தது. நிறுவனமானது ஏதாவது ஒரு பொருளை தயாரிக்கும், தயாரித்த பொருளை விற்கும், விற்பனையின் மூலம் லாபம் சம்பாதிக்கும் அதை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிலேயே முதலீடு செய்யும், அதை நாம் வெற்றி பெற்ற நிறுவனமாகக் கருதிவந்தோம். ஆனால் ஸ்டார்ட்அப் என்கிற போக்கு அறிமுகமானவுடன் நிறுவனத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பல அளவீடுகளும் அறிமுகமாயின. அதன்படி, வளர்ச்சி என்பது லாப, நட்டக் கணக்கை மட்டும் சார்ந்து இல்லை என திடீரென ஒரு கருத்தியல் உருவானது. ஒரு ஸ்டார்ட்அப்நிறுவனம் எந்த அளவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டுகிறது, எத்தனை சுற்றில் இந்த நிதி திரட்டப்படுகிறது என்பதோடு அதிக நிதி திரட்டினால் அந்த நிறுவனம் `நல்ல’ நிறுவனம் என்கிற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை அளவிட பல புதிய அளவீடுகளும் காரணிகளும் உருவாகிவந்தபடி உள்ளன. வாடிக்கையாளர் வாழ்நாள் மதிப்பு (Customer Lifetime Value), வாடிக்கையாளரை கையகப்படுத்துவதற்கான செலவு (Customer Acquisition Cost) ஆகியவை முக்கிய அளவீடுகளாக பார்க்கப்படுகின்றன.

வாடிக்கையாளரின் வாழ்நாள் மதிப்பு என்பது ஒரு வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்குமான உறவின் மொத்த காலத்தில் அவர் மூலம் நிறுவனத்துக்குக் கிடைக்கக்கூடிய மொத்த மதிப்பாகும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதைக் காட்டிலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இது ஒரு முக்கியமான அளவீடு ஆகும். ஒரு வாடிக்கையாளரைப் பெறுவதற்குச் செலவிடும் பணத்தைப் போல மூன்று மடங்கு அவர் மூலம் வருமானத்தை நிறுவனம் பெற வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியாக இருந்து வருகிறது. அதாவது ஒரு புதிய வாடிக்கையாளரைப் பெறுவதற்கு நிறுவனமானது ரூ.100 செலவழித்தால் அவர் மூலம் நிறுவனத்துக்கு ரூ.300 வருமானம் வர வேண்டும். எனவே, நிறுவனமானது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது முக்கிய
மானதாகும். அதோடு வாடிக்கையாளர்களைப் பெறுவதற்குச் செலவிடப்படும் தொகையை மீண்டும் ஈட்டுவதற்கான (payback) கால அவகாசம் எவ்வளவு என்பதும் ஒரு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் மதிப்பீட்டில் இவை பிரதான பங்கு வகிக்கின்றன. இவ்வாறு நிறுவனத்தின் வெற்றி தோல்வி, லாபம், நஷ்டம் என்பவை புதுப் பரிணாமத்துக்குள் நுழைந்துள்ளது.

ஐபிஓ-வில் ஆதிக்கம்

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கும் அதனுடைய வளர்ச்சிக்கும் முன்பெல்லாம் தனியார் முதலீடுகளையும், வெஞ்சர் கேபிட்டலிஸ்ட் நிறுவனங்களையும் நம்பியிருந்த காலம் போய் தற்போது தங்களுடைய நிதித் தேவைக்கு நேரடியாகவே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் களமாட ஆரம்பித்திருக்கின்றன.

‘நாளைக்கு உலகமே இல்லாது போய்விடுமோ’ என்கிற அளவுக்கு அவசர அவசரமாக இன்றையத் தலைமுறை நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு(ஐபிஓ)வாயிலாக மூலதனத்தைத் திரட்ட ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் 2021-ம் ஆண்டை ‘ஐபிஓ ஆண்டு’ எனக் குறிப்பிட்டால் அது மிகையில்லை. ஏனெனில்,
சென்ற ஆண்டு மட்டும் 53 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.1,14,653 கோடி திரட்டியிருக்கின்றன. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு 36 ஐபிஓ-க்கள் மூலம் திரட்டிய ரூ.67,147 கோடிதான் இதுவரை உச்சபட்சத் தொகையாக இருந்துவந்தது.

இதில் கவனிக்கத்தக்க விசயம் என்ன

வென்றால், இந்த 53 ஐபிஓ-க்களில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 8 ஐபிஓ-க்களை வெளியிட்டு அசத்தியிருக்கின்றன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். அந்த 8 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.43,942 கோடியாகும். மொத்த ஐபிஓ தொகையில் இது 38 சதவீதமாகும். 2019 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் ஐபிஓ மூலம் ரூ.933 கோடி திரட்டியது. அதன் பின் 2020-ம் ஆண்டு ஒரேயொரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் ஐபிஓ வெளியிட்டது. அதன் மூலம் ரூ.600 கோடி திரட்டியது.

2021 ஆம் ஆண்டு பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஒன்97 கம்யூனிகேசன்’ (One97 Communicatons), இதுவரை பங்குச் சந்தைக் கண்டிராத அளவுக்கு ரூ.18,300 கோடிக்கு ஐபிஓ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பாக பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’ (Coal India) வெளியிட்ட ரூ.15,199 கோடி மதிப்புக்கான ஐபிஓ-தான் அதிக தொகை கொண்டதாக இருந்தது.

ஸ்டார்ட்அப் ஒரு குமிழியா?

ஸ்டார்ட்அப் துறை இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு உத்வேகம் அளித்திருப்பதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீதான மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற கருத்தும் ஒலிக்கிறது.

‘ஜெரோதா’ (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத், ‘எங்களுடைய நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களின் மதிப்பீடும் மிகையானதாகும். இது ஒரு குமிழி என்றே நான் நினைக்கிறேன்’ என்று கூறுகிறார்.

ஆன்லைன் வர்த்தகத்தைப் பொருத்தவரையில் என்னதான் நுகர்வோர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் அந்த மாற்றத்தோடு ஒப்பிடுகையில் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் திரட்டியிருக்கும் முதலீடு அபரிமிதமானதாகும் என முதலீடு குறித்து அத்துறை சார்ந்தவர்களே கூறிவருவது யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

லாபம் எதுவும் ஈட்டாமல் ஒரு நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் ஈட்டிவரும்பட்சத்தில் அந்நிறுவனம் மீது புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. நஷ்டச் சூழல் தொடரும்பட்சத்தில் முதலீடு குறைந்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் காணாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் ‘புதுரத்த’த்தைத் தொடர்ந்து பாய்ச்சுமா இல்லை ‘ரத்தக்களரி’யை ஏற்படுத்தி சேதத்தை உண்டாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புக்கு: sidvigh@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்