பிளாக்பெரி வீழ்ந்தது ஏன்?

By முகம்மது ரியாஸ்

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் கோலொச்சிவந்த பிளாக்பெரியின் மொபைல்போன் சேவை இம்மாத தொடக்கத்தில் (ஜனவரி 4) முடிவுக்குவந்தது. இனி, பிளாக்பெரி இயங்குதளத்தைக் (Operating System -OS) கொண்ட பிளாக்பெரி போன்களைப் பயன்படுத்த முடியாது. அந்த போன்களிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ளவோ, குறுஞ்செய்திகள் அனுப்பவோ முடியாது என்பது மட்டுமல்ல, அவசரகால அழைப்பைக்கூட மேற்கொள்ள முடியாது. மொபைல்போன் சந்தையிலிருந்து பிளாக்பெரி நிறுவனம் முற்றிலும் வெளியேறியுள்ள தருணம் இது. பிளாக்பெரியின் இந்த நிலையை ‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ என்கிறார்கள்.

ஆம். பிளாக்பெரியின் முடிவு ஒரு சகாப்தத்தின் முடிவுதான். 2005-2010 வரையிலான காலகட்டத்தில் உலகெங்கும் அதிகம் விற்பனையாகும் மொபைல்போனாகவும், உலகின் மிகப்பெரிய மொபைல் பிராண்டாகவும் பிளாக்பெரி இருந்தது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரையில் பிளாக்பெரி என்பது அந்தஸ்தின் குறியீடாக இருந்தது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிளாக்பெரியின் தீவிர ரசிகர். கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்கள் என எங்கும் பிளாக்பெரி நிறைந்திருந்தது. 2009-ல் உலகின் ஒட்டுமொத்த மொபைல்போன் சந்தையில் பிளாக்பெரி 20 சதவீதம் பங்குவகித்தது. அமெரிக்காவில் மொபைல்போன் சந்தையில் 50 சதவீதத்தை பிளாக்பெரி கொண்டிருந்தது. மொபைல்போன் சந்தையில் உச்சத்தில் இருந்த ஒரு நிறுவனம், தற்போது மொபைல்போன் சந்தை
யிலிருந்தே காணாமல் போயிருக்கிறது. ஏன் பிளாக்பெரி இப்படி ஒரு சரிவுக்கு ஆளானது? ஏன் பிளாக்பெரியால் மொபைல்போன் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை?

ரிசர்ச் இன் மோசன்

1984-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மைக் லாசரிடிஸ் மற்றும் டக்ளஸ் ஃப்ரீஜின் என்ற இரு பொறியியல் மாணவர்கள் ‘ரிசர்ச் இன் மோசன்’ - ரிம் (Research in Motion - RIM) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கினர். தொழில்நுட்ப ரீதியிலான புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் கவனம் செலுத்திவந்தனர். ஜெனரல் மோட்டார்ஸ், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான பிராஜெட்டுகள் செய்து கொடுத்தனர். மொபிடெக்ஸ் என்ற நிறுவனம் மெசேஜிங் சேவைக்காக ரிம் நிறுவனத்தை நாடியது. அது முதல் ரிம் நிறுவனம் மெசேஜிங் தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தத்தொடங்கியது. அதன் நீட்சியாக 1996-ம் ஆண்டில் சொந்தமாக பேஜர் கருவியை ரிம் நிறுவனம் வெளியிட்டது. அது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படியாக, தொழில்நுட்பத் துறையில் படிப்படியாக வளர்ந்து வந்த ரிம், 2000-ம் ஆண்டு மொபைல்போன் சந்தையில் அடியெடுத்து வைத்தது. ‘பிளாக்பெரி 957’ என்ற பெயரில் முதல் ஸ்மார்ட்போனை ரிம் நிறுவனம் வெளியிட்டது. அப்போது சந்தையில் இருந்த போன்களைவிட தொழில்நுட்ப ரீதியிலும் வடிவமைப்பு ரீதியிலும் பிளாக்பெரி தனித்துவமாக இருந்தது. இணைய வசதி, ஈமெயில் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக பிளாக்
பெரி இருந்தது. a முதல் z வரையிலான அனைத்து எழுத்துகளுக்கும் தனித்தனி பொத்தான்கள் இருக்கும் வகையில் க்வெர்டி (QWERTY) கீபோர்டை பிளாக்பெரி கொண்டிருந்தது. க்வெர்டி கீபோர்டு மின்னஞ்சல் டைப் செய்வதற்கு வசதியானது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் பிளாக்பெரி பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்க அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பிளாக்பெரி போன்களின் பயன்பாடு அதிகரித்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய மேம்பாடுகளுடன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாடல் பிளாக்பெரி போன்கள் வெளிவந்தன. பிளாக்பெரி அதன் பாதுகாப்பு அம்சத்துக்காக மிகவும் கவனிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு பிபிஎம் என்றழைக்கப்படும் பிளாக்பெரி மெசஞ்சர் என்ற வசதி அறிமுகமானது. தற்போது நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மாதிரி அப்போது பிபிஎம் பிரபலமாக திகழ்ந்தது. பிபிஎம் இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்தது. பிபிஎம் வசதிக்காகவே பலரும் பிளாக்பெரி நோக்கிச் சென்றார்கள். இவ்வாறாக உலகின் முன்னணி மொபைல் போன் பிராண்டாக பிளாக்பெரி மாறியது.

ஐபோனின் வருகையும் பிளாக்பெரியின் சரிவும்

இப்படியான சூழலில்தான் ஆப்பிள் களத்துக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஆப்பிள் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. பட்டன்கள் ஏதும் இல்லாமல் தொடுதிரை போனாக (Touch Screen) அது வெளிவந்தது. ஸ்மார்ட்போன் துறையில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பெரும் பாய்ச்சலாக ஆப்பிளின் ஐபோன் பார்க்கப்பட்டது. எனினும், ஆரம்பத்தில் ஐபோனின் வருகை பிளாக்பெரியை பாதிக்கவில்லை. ஏனென்றால் ஆப்பிள் ஐபோனின் விலை மிக மிக அதிகம். அதேசமயம் தொடுதிரை போன் மக்களுக்கு புதிது என்பதால் அதைநோக்கி செல்ல அவர்கள் தயக்கம் காட்டினார்கள். தவிர, பிளாக்பெரியின் க்வெர்டி கீபோர்டினால் மக்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிளாக்பெரியின் சந்தை தொடர்ந்து வளர்ந்தது. ஆனால், அந்த வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளிலேயே ஆட்டம் காணத் தொடங்கியது.

ஐபாட், கணினி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்திவந்த அனுபவத்தின் அடிப்படையில், மொபைல் போன்களின் எதிர்காலம் குறித்து ஆப்பிளுக்கு ஒரு திட்டவட்டமான பார்வை இருந்தது. இனி மொபைல்போன்கள் போன் பேசுவதற்கோ மெசேஜ், ஈமெயில் செய்வதற்கு மட்டுமானதாக இருக்கப்போவதில்லை. அது மக்களின் ஒரு அங்கமாக மாற உள்ளது என்பதை ஆப்பிள் உணர்ந்திருந்தது. இப்படியாக 2010-ல் ஆப்பிளின் ஐபோன் 4 வெளியானது. அது பிளாக்பெரிக்கு மிகப் பெரும் அடியாக இறங்கியது. 2007-ல் 14 லட்சம் ஐபோன்களே விற்றன. அந்த எண்ணிக்கை 2011-ல் 7.2 கோடியாக உயர்ந்தது. அந்த அளவுக்கு ஆப்பிள் ஸ்மார்ட்போன் சந்தையைக் கைப்பற்றியது. பிளாக்பெரியின் சந்தை சரியத் தொடங்கியது.

களத்துக்கு வந்தது ஆண்ட்ராய்டு

இந்த காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் அறிமுகமாகத் தொடங்கின. ஆப்பிள் அதன் ஐஓஎஸ் (ios) தளத்தில் இயங்கியதென்றால், சாம்சங், சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹெச்டிசிபோன்ற நிறுவனங்கள் ஆண்டராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தையில் களமிறங்கின. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க பிளாக்பெரி ஆட்டம் காணத் தொடங்கியது. ஆப்பிள் நிறுவனமும் சரி, ஆண்ட்ராய்டு தளத்தை கையில் வைத்திருந்த கூகுள் நிறுவனமும் சரி செயலிகள்தான் (Apps) இனி எதிர்காலம் என்பதை உணர்ந்திருந்தன. இதனால்தான் 2005-ம் ஆண்டே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதை மேம்படுத்தும் பணியைமேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால், பிளாக்பெரி ஸ்மார்ட்போன் சந்தையின் போக்கு குறித்து தவறான புரிதலைக் கொண்டிருந்தது. தொடுதிரை போன்கள் சீக்கிரமே தோல்வியடைந்துவிடும் என்றும் க்வெர்ட்டி கீபோர்டை விட்டு மக்கள் போய்விட மாட்டார்கள் என்றும் பிளாக்பெரி நம்பியது. ஆனால், அதன் நம்பிக்கை பொய்த்துப்போனது. 2010-க்குப் பிறகு படிப்படியாக இல்லை, சரசரவென பிளாக்பெரி சரிந்தது.

பிளாக்பெரி எங்கே சறுக்கியது?

பிளாக்பெரி அறிமுகமான புதிதில் அதன் இயங்குதளம் ஸ்மார்ட்போன் உலகில் முன்னோடியாக இருந்தது. ஆனால், ஐபோன், ஆண்ட்ராய்டு அறிமுகத்துக்குப் பிறகு பிளாக்பெரி இயங்குதளம் பழம்பொருளாக மாறியது. சந்தைப் போக்கை உணர்ந்து தன்னுடைய இயங்குதளத்தை மேம்படுத்துவதில் பிளாக்பெரி கவனம் செலுத்தவில்லை. இதுதான் பிளாக்பெரியின் சரிவுக்கு அடிப்படைக் காரணம். தவிர, பிளாக்பெரி கார்ப்ரேட் நிறுவனங்களையே தங்களின் முதன்மை பயனாளராக கருதி, அவற்றுக்கேற்ற வசதிகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது. பொதுமக்களின் பயன்பாடு, அவர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகம் செய்வதில் பிளாக்பெரி கவனம் செலுத்தவில்லை.

ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்குப் பிறகு செயலிகள் முக்கியத்துவம் பெற்றன. ஆப்பிள் அதன் ஐஓஎஸ் தளம் மூலமாகவும், கூகுள் அதன் ஆண்ட்ராய்டு தளம் மூலமாகவும் செயலிகள் உருவாக்கம் சார்ந்து பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கின. யார் வேண்டுமானாலும் செயலிகளை உருவாக்கி ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோ, கூகுள் ப்ளே ஸ்டோரிலோ பதிவேற்றம் செய்ய முடியும். ஆனால், பிளாக்பெரி இயங்குதளம் அத்தகைய நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதனுடைய ஆப் ஸ்டோரில் மிக குறைவான அளவிலே செயலிகள் இருந்தன. தவிர, அவை பயன்பாட்டுக்கு எளிதாகவும் இல்லை. இதனால், மக்களின் தேர்விலிருந்து பிளாக்பெரி மறைந்துபோனது.

மொபைல் தயாரிப்பு நிறுத்தம்

எனினும், எப்படியாவது மீண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாக்பெரி இருந்தது. 2013-ம் ஆண்டு ‘பிளாக்பெரி 10’ என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்து தொடுதிரை போனை பிளாக்பெரி வெளிட்டது. ஆனால், அப்போது அது எடுபடவில்லை. ஏனென்றால், அதை விட மேம்பட்ட, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சந்தையை கைப்பற்றிவிட்டன. வேறுவழியில்லாமல், 2015-ல் பிளாக்பெரி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை நோக்கி நகர்ந்தது. எனினும், அதனால் குறைந்தபட்ச சந்தையைக்கூட கைப்பற்ற முடியவில்லை மிக மிகக் குறைவான மக்களே பிளாக்பெரியை வாங்கினர். (பிளாக்பெரியின் இயங்குதளத்தைக் கொண்ட போன்கள்தான் இப்போது செயலிழந்து உள்ளன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட பிளாக்பெரி போன்கள் தொடர்ந்து செயல்படும்.) 2009-ல் ஆண்டுக்கு ஐந்து கோடி பிளாக்பெரி போன்கள் விற்பனையாகின. 2016-ல் அது 2 லட்சமாக சரிந்துவிட்டது. உலகளாவிய அளவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 2 லட்சம் என்பது ஒன்றுமே இல்லை.

இந்தச் சூழலில் 2016-ல் பிளாக்பெரி மொபைல் போன் சந்தையிலிருந்து வெளியே முடிவு செய்து அதன் போன் தயாரிப்பையே நிறுத்தியது. டிசிஎல் என்ற சீன நிறுவனம் பிளாக்பெரி பிராண்டை விலைக்கு வாங்கியது. டிசிஎல் நிறுவனம் பிளாக்பெரி போனை வடிமைத்து தயாரிக்கும்; அதற்கு மென்பொருளை பிளாக்பெரி நிறுவனம் வழங்கும் என்று அவ்விரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தமானது. அதன் பிறகும் பிளாக்பெரியால் மேலெழ முடியவில்லை.

பிளாக்பெரியும் நோக்கியாவும்

தற்போது பிளாக்பெரி நிறுவனம் மொபைல் போன் சந்தையிலிருந்து முற்றிலும் வெளியேறி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழில் நுட்பம் தொடர்பான பாதுகாப்பு சேவை வழங்குகிறது. ஒருவகையில் பிளாக்பெரியின் சரிவும், நோக்கியாவின் சரிவும் ஒன்று போல இருக்கிறது. 2000 – 2010 வரையிலான காலகட்டத்தில் மொபைல் போன் சந்தையில் பிளாக்பெரியும், நோக்கியாவும் மிக முக்கியான ஒரு இடத்தில் இருந்தன. 2010-க்குப் பிறகு அவை இருந்த இடம் தெரியாமல் போயின.

பிளாக்பெரி மற்றும் நோக்கியாவின் வீழ்ச்சியை நாம் தோல்வியாக பார்ப்பது அந்நிறுவனங்களின் பங்களிப்புகளை அவமதிப்பதாகவும்.ஒரு நிறுவனத்தின் லாப, நட்டக் கணக்கைக் கொண்டு மட்டும் அந்நிறுவனத்தை நாம் மதிப்பிட்டு விட முடியாது. அந்நிறுவனம் உலகின் தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு எத்தகைய பங்களிப்பை அளித்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் பிளாக் பெரியும் நோக்கியாவும் மொபைல் போன் துறையில் முன்னோடி நிறுவனங்களே. எனவே, அந்நிறுவனங்களின் வீழ்ச்சி என்பது தோல்வி அல்ல. அது அந்நிறுவனங்கள் மேற்கொண்ட பயணத்தின் முடிவு. கால ஓட்டத்தில் சாம்ராஜ்யங்கள் வீழ்வது தவிர்க்க முடியாததைப் போலத்தான் இதுவும்.!

riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்