டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவந்த விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டாலும், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது. விவசாயிகளைப் பாதுகாக்கவும் அவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கக் கூடாது என்ற நோக்கிலும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கிறது.
இதில் என்ன பிரச்சினை என்றால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஏட்டளவில் மட்டும்தான் இருக்கிறது. அதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆண்டுக்கு சுமார் 10,000 லட்சம் டன்கள் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் நம் நாட்டில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க முடியுமா? அப்படிச் செய்தால், அதனால் யாருக்கு லாபம்? அத்தகைய திட்டத்தின் மொத்தச் செலவு என்னவாக இருக்கும்? குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கு வதைத் தாண்டியும் வேறு வழிகள் உள்ளனவா? விரிவாகப் பார்க்கலாம்.
எம்எஸ்பி கணக்கீட்டில் போதாமை
விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் (CACP) பரிந்துரைப்படி, 1965-ஆம் ஆண்டு முதல் கரீப், ராபி என இரண்டு பருவங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய அரசு அறிவிக்கிறது. ஆரம்பத்தில், கோதுமை, நெல்லுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையானது, தற்போது 23 பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. சாகுபடிச் செலவு, இடு பொருட்களின் விலைகள், பயிர்களின் உற்பத்தி மற்றும் தேவை, உலகச் சந்தைகளில் பயிர்களின் விலை நிலைபோன்ற காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்
படுகிறது.
பயிர்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையமானது 9 வெவ்வேறு விலைக் காரணிகளைப் (A1, A2, A2+FL, B1, B2, C1, C2, C2*, C3) பயன்படுத்துகிறது. 2018-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலையானது A2+FL செலவுச் சூத்திரத்தின் (formula) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. A2+FL செலவுச் சூத்திரத்தின்படி, பயிர்ச் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் தேய்மானச் செலவு, பயிர்க் கடனுக்கான வட்டி, போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்திச் செலவை முழுமையாக ஈடுசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட காலமாக அதற்கான கோரிக்கையை வைத்துவருகின்றனர்.
இதற்கிடையில், எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான “விவசாயிகள் ஆணையம்” (2006), பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அவற்றின் உற்பத்திச் செலவை விட 50% அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது 2018-29 பட்ஜெட்டில், குறைந்தபட்ச ஆதரவு விலையானது பயிர்களின் உற்பத்திச் செலவைவிட 50% அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது.
2018-ம் ஆண்டின் கரீப் பருவம் முதல் இம்முறையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விலை உயர்வைச் செய்த பிறகும், பயிர்ச் சாகுபடியின் வருமானம் போது மானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன?
பாரபட்சக் கொள்முதல்
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதற்கு அவர்களின் பயிர்களை அரசு கொள்முதல் செய்யவேண்டும். ஆனால், கொள்முதல் கொள்கை நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பெரும்பாலான விவசாயிகளால் குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற முடியாமல் போய்விடுகிறது. நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களை அரசு கொள்முதல் செய்வது பல ஆண்டுகளாக மோசமாக உள்ளது. நெல், கோதுமை கொள்முதலிலும் பாரபட்சம் நிலவுகிறது. உதாரணமாக, 2020-21 கரீப் காலத்தில் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மொத்த அளவு 601 லட்சம் டன்கள்.
இதில், 174 லட்சம் டன்கள் பஞ்சாப், ஹரியாணாவிலிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து செய்யப்பட்டுள்ள கொள்முதல் குறைவானது. அதாவது, நெல் கொள்முதலுக்காக மொத்தமாகச் செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 30% இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் சென்றுள்ளது. இதேபோல், கோதுமை கொள்முதலுக்காகச் செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 52% இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மட்டும் சென்றுள்ளது. இப்படிப்பட்ட கொள்முதல் முறை மற்ற மாநில விவசாயிகளுக்கு எப்படி உதவும்? இன்னொரு பிரச்சினையும் உண்டு.
பயிர்களின் கொள்முதல் மாநிலங்களின் உற்பத்தியுடன் தொடர்புபடுத்தபடாமல் பல காலமாகச் செய்யப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில், இந்தியாவின் நெல் உற்பத்தியில் பஞ்சாபின் பங்கு 11% மட்டுமே, ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 25.53%. இந்தியாவின் நெல் உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்கு 13.94%. ஆனால் கொள்முதலில் அதன் பங்கு வெறும் 4.46% மட்டுமே. அதேபோல, நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5.26%, ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 2.91% மட்டுமே. இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், பெரும்பாலான மாநிலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலையில் தனியார் வியாபாரிகளிடம் கட்டாயமாக விற்றிருக்கலாம். 2018-19-ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட விவசாயிகளின் நிலை மதிப்பீடு (Situation Assessment Survey) ஆய்வின் தரவுகள் இதை உறுதி செய்கின்றன.
அதாவது, வெறும் 17% விவசாயக் குடும் பங்கள் மட்டுமே, அரசு கொள்முதல் நிறுவனங்களுக்கு நெல்லை விற்றதாக அந்த ஆய்வு கோடிட்டுக்காட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்திப் பங்குடன் இணைத்து, பயிர்களைக் கொள்முதல் செய்தால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தானாகவே போய்விடும்.
அரசு ஏன் தயங்குகிறது?
அனைத்துத் தர விவசாயிகளும் பயனளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிச்சட்டம் இயற்றப்பட்டால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் உள்ள 23 பயிர்களைக் கட்டாயக் கொள்முதல் செய்ய, தற்போதைய உற்பத்தியின் படி ஏறக்குறைய ரூ.17 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ மாக்கப்பட்டால், தோட்டப் பயிர்களை (பழங்கள் மற்றும் காய்கறிகள்) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழும். அவற்றின் தற்போதைய உற்பத்தி சுமார் 3200 லட்சம் டன்கள். கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பால், பிற பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையைக் கோரலாம். எனவே, வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்குத் தேவைப்படும் செலவு கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்.
இச்செலவு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரிக்கக்கூடும். சிறு, குறு விவசாயிகளிடம் சந்தைப்படுத்தக்கூடிய (marketable surplus) பயிர்களின் அளவு குறைவாக உள்ளதால், இச்சட்டத்தால் பணக்கார விவசாயிகளுக்கே லாபம் அதிகம். எனில், இப்படிப்பட்ட சட்டத்தை அமல்படுத்த எந்த அரசு முன்வரும்? முதலில் அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலைசார்ந்து நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். சந்தையில் இடைத்தரகர்கள் மற்றும் தனியார் வர்த்தகர்களின் தொடர்ச்சியான சுரண்டலின் காரணமாகவே, குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டப்பூர்வமாக்கும் பிரச்சினை எழுகிறது என்பதை வேளாண் சந்தைகளின் செயல்பாட்டை அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள்.
பெரும்பாலான நேரங்களில், விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 70% கூட தனியார் வியாபாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பயிர்களின் சந்தை விலை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவானதாக இருப்பதாக விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தால் வெளியிடப்
பட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, தனியார் வியாபாரிகள் மற்றும் தனியார் ஏஜென்சிகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவான விலையில் எந்தப் பயிரையும் கொள்முதல் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இது குறைந்தபட்ச ஆதரவு விலை சுற்றியுள்ள பெரும்பாலான சிக்கல்களை ஒழித்துவிடும். இரண்டாவது வழி, 2018-19-ல் வெளியிடப்பட்டுள்ள இந்திய விவசாயிகளின் நிலை மதிப்பீட்டு ஆய்வின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக விவசாயிகளிடம் குறைவாக உள்ளது.
குறிப்பாக, குறு, சிறு விவசாயிகளிடையே இந்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, தனியார் வியாபாரிகளும், இடைத்தரகர்களும், இந்த விவசாயிகளின் பயிர்களுக்கு, குறைந்த விலை நிர்ணயம் செய்து சுரண்டுகின்றனர். இதைத் தடுக்க, கவனமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறையுடன் “சிறு, குறு விவசாயிகள் மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கும் உரிமை” சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்.
மூன்றாவது வழி பயிர்க் கொள்முதலுடன் தொடர்புடையது. விவசாயிகளின் நிலை மதிப்பீடு 2018-19 தரவுகளின்படி, பெரும்பாலான பயிர்களில், 5 சதவீதம் முதல் 10 சதவீத விவசாயக் குடும்பங்கள் மட்டுமே தங்கள் பயிர்களை அரசுக் கொள்முதல் நிறுவனத்திற்கு விற்றுள்ளன. இப்படிப்பட்ட கொள்முதலால், விவசாயிகள் எவ்வாறு குறைந்த பட்ச ஆதரவு விலையைப் பெற முடியும்? இந்திய உணவுக் கழகத்தின் பங்கை மறுசீரமைப்பதற்காக சாந்தகுமார் தலைமையில் (2015) அமைக்கப்பட்ட குழு நெல், கோதுமை கொள்முதலுக்குக் கொடுக்கப்படுகின்ற தேவையற்ற முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், கொள்முதல் திட்டத்தை மற்ற பயிர்களுக்கு விரிவுபடுத்தவும் பரிந்துரைத்துள்ளது. எனவே, பயிர்களின் உற்பத்தியில் 20%-25% கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டால், சந்தைக்கு அதிகப்படியாக வரும் பயிர்களின் வரத்து குறைக்கப்பட்டு, சந்தை விலை உயரும். இது, அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும், தற்போதைய நடைமுறையின் அடிப்படையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்பட்டால், அது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்குத் தற்போது பின்பற்றப்படும் முறை குறைபாடுடையது; அது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. உண்மையான உற்பத்திச் செலவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதற்கு முயற்சிகளை எடுப்பதோடு, அனைத்து வேளாண் பொருட்களுக்கும் பொருந்தக்கூடிய கொள் முதல் கொள்கைகளை உருவாக்கினால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிச் சட்டம் கேட்கமாட்டார்கள்!
narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago