இந்திய தொழில் சூழல்: 2021-ல் எவ்வாறு இருந்தது, 2022-ல் எப்படி இருக்கும்?

By ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

கரோனாவில் கரைந்த 2021: ஒமைக்ரானோடு வரும் பத்தாண்டு!

ஒமைக்ரான் காரணமாக, கரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்று இந்தியாவும், மற்ற உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளன. மும்மடங்கு வேகத்தில் பரவுவதாக சொல்லப்படும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று தொடங்கி இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. இந்தப் பெருந்தொற்று, உலகின் போக்கையே மாற்றி அமைத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தனிமனித பழக்கங்கள் முதல் தொழில்செயல்பாடுகள் வரையில் கரோனா காலகட்டத்தில் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பொருளாதார ரீதியாக பார்த்தால், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி முதல் காலாண்டில் 20.1 சதவீதம் அளவிலும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதம் அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரம் சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் இருப்பதாக கூறிவிடலாம். எனினும், இன்னும் சில துறைகள் சற்று நெருக்கடி நிலையிலே உள்ளன. 2021-ம் ஆண்டில் இந்திய தொழில் சூழல் எவ்வாறு இருந்தது, வரும் ஆண்டில் அதன் நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

உற்பத்தித் துறை

விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக, சிறு தொழில் நிறுவனங்கள் இந்தச் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வால், அவற்றை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன. ஸ்டீல், துத்தநாகம் போன்ற மூலப்பொருட்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளன. ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வெளி நாட்டிற்கு அனுப்ப கன்டெனர் கிடைக்காமல் சிரமப்படுகின்றன.

ஆட்டோமொபைல்

உலகளாவிய அளவில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஆட்டோமொபைல் துறை நெருக்கடியைச் சந்தித்தது. எனினும், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை உற்சாகம் அளிக்கும் வகையிலே இருந்தது. மின்சார வாகனத் தயாரிப்பை நோக்கிய நகர்வில் ஆட்டோமொபைல் துறை அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

எம்எஸ்எம்இ

எம்எஸ்எம்இ என்று சொல்லப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கரோனா ஊரடங்கினால் முடக்கத்தைச் சந்தித்தன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டது. எனினும், அவை ஊரடங்கினால் ஏற்றப்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு விடவில்லை.

சுற்றுலாத் துறை

சுற்றுலாத் துறை இன்னும் மீளவில்லை. இதனால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஹோட்டல், சுற்றுலா, பொழுது போக்குகள் உள்ளிட்ட சில தொழில்கள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி உலக அளவில் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. 2021-ல் மட்டும் 30 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன. 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்டிருக்கும் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன.

இ-காமர்ஸ், கல்வி, மென்பொருள் சேவை, உணவு விநியோகம், லாஜிஸ்டிக்ஸ் என பல தளங்களிலும் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன. புதிதாகவும் நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்காகவும், சுயதொழில் முனைவோரை உருவாக்குவதற்காகவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

பங்குச் சந்தை

இந்தியாவில், பங்குச் சந்தை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 50-க்கும் மேல்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தைக்கு வந்துள்ளன. இதில் முந்தைய ஆண்டுகளில் சில நட்டக்கணக்கு காண்பித்திருக்கும் நிறுவனங்களும் பங்குச்சந்தைக்கு வந்திருப்பது புதிய மாற்றம். பங்குச் சந்தைகள் மேலும், கீழுமாக இருந்தாலும், வீழும்போது, அதிகம்பேர் உள்ளே வருகிறார்கள். கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 1.7 கோடி புதிய முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தைக்கு வந்துள்ளனர். இதில் ஏராளமானோர் இளம் வயதினர்.

2022?

உலக நாடுகளின் மொத்த உற்பத்தி 5.7சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது ஒமைக்ரான் பரவமால் தடுக்க, பல நாடுகளிலும், நகரங்களிலும் கரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கிவிட்டன. அதன் விளைவாக, 2022-ம் ஆண்டிலும் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு உலக நாடுகளின் மொத்த உற்பத்தி 4.7 சதவீதமாக குறையும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பொருள் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு முக்கிய காரணமாக இருக்கும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 2022-ம் ஆண்டில் விலைவாசி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன மூன்றாவது அலை ஏற்பட்டு உலகப் பொருளாதாரம் மீண்டும் அடிவாங்காமல் இருந்தால், 2023 ஆம் ஆண்டின், இறுதிப்பகுதியில், உலகப் பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. உலக பொருளாதாரம் சமநிலை அடைவதில், அமெரிக்காவைவிட சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம், பெரும்பாலும் சேவை பிரிவைச் சார்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக குறையும் என்று கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது 5.6 சதவீதமாக சரியும் என்கிறார்கள். மற்ற நாடுகளை விட அதிக சாதகங்கள் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. நம் முன் இருக்கும் சவால்களை சற்றே கவனமாகக் கையாண்டால் நிச்சயம் நாளை நமதே.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்,
கோவை
(karthi@gkmtax.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்