கடன்சூழ் உலகு!

By செய்திப்பிரிவு

(sidvigh@gmail.com)

‘இன்றைக்கு சம்பாதித்து நாளைக்கு செலவு செய்வோம்’ என்கிற காலம் போய் ‘இன்றைக்கு செலவு செய்துவிட்டு, அதற்காக நாளைக்கு சம்பாதிக்கலாம்’ என்கிற காலத்துக்கு நாம் வந்து ஓரிரு தசாப்தங்கள் ஆகிவிட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு என அறியப்படும் கடன் அட்டைகள் பயன்படுத்தும் நுகர்வோர்கள், அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கிக் குவித்
திருக்கிறார்கள் என சமீபத்தில் வெளியான மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

எங்கும் எப்போதும்

அக்டோபர் மாதம் இந்தியாவெங்கும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி 21.5 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு சுமார் ரூ.4,600 என்பதோடு ஒரு கார்டின் மூலம் சராசரியாக 3.3 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருக்கிறது.

இது செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட சராசரியை (2.8 பரிவர்த்தனை) விட அதிகமாகும். அக்டோபர் மாதம் கடன் அட்டை மூலம் நுகர்வோர்கள் செய்த செலவானது அதற்கு முந்தைய மாதத்தை விட சுமார் 25 சதவீதம் அதிகமாகும். இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிட்டால் (பெருந்தொற்று முதல் அலை காலம்) கிட்டத்தட்ட 56 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி செலவு செய்த தொகை ரூ.80,477 கோடியாகும்.

என்ன காரணம்?

கடன் அட்டைகளை உபயோகித்து செய்யப்படும் செலவு அதிகரித்து வருவது போல கடன் அட்டைகள் விநியோகமும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 13.3 லட்சம் புதிய கடன் அட்டைகளை பல வங்கிகள் விநியோகித் திருக்கின்றன. அந்த விநியோக எண்ணிக்கை செப்டம்பர் மாதம் 10.9 லட்சமாகவும், ஆகஸ்ட் மாதம் 5.2 லட்சமாகவும் இருந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? பெருந்தொற்று பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்து கொண்டிருந்தாலும் கையில் முன்பு போல போதுமான பணம் இல்லாதபட்சத்தில் பண்டிகைகால செலவுகளை செய்வதற்கு இவை உபயோகப் படுத்தப்பட்டிருக்கலாம்.

அதே நேரத்தில் ஆன்லைன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கக்கூடும். அதோடு கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு காய்கறி வாங்குவது முதல் பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி வருவதால் நுகர்வோர்களும் பின்னால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் இந்த ‘எளிய’ முறைக்கு தங்களை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

டெபிட்டை விஞ்சும் கிரெடிட்

‘டெபிட்’ கார்டுகளை உபயோகித்து செய்யப்பட்ட செலவுகளை விட ‘கிரெடிட்’ கார்டுகள் மூலம் செய்யப்பட்ட செலவு அதிகமென்றும் தெரிய வந்திருக்கிறது. பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவு எனும் பட்சத்தில் டெபிட் கார்டுகளையும், விலை அதிகமான பொருள்களை வாங்க கிரெடிட் கார்டுகளையும் நுகர்வோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

இதன் மூலம் அவர்களுக்கு பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைப்பதோடு தனித்துவமான அல்லது பிரத்யேக சலுகைகள், ரிவார்ட் பாயிண்ட்ஸ் ஆகியவையும் கிடைக்கும் என்பதால் இதன் பயன்பாடு அதிகமிருந்திருக்கும். அதோடு கடந்த ஆண்டை விட சமீபத்தில் பயணமும் ஓரளவுக்கு அதிகரித்திருப்பதால் அது சார்ந்த செலவுகளுக்கும் கடனட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இத்துறையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஒராண்டில் கடன் அட்டையை அதிகமாக விநியோகித்திருக்கும் வங்கி ஐசிஐசிஐ ஆகும். இது புதிதாக 22.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. அமேசானோடு இணைந்து இந்த வங்கி வெளியிட்ட ‘கூட்டு கடன் அட்டை’ (co-branded) நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போல ஹெச்டிஎஃப்சி வங்கியும்
பிளிப்கார்ட்டுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு கடன் அட்டை நுகர்வோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது வாங்குங்கள் பிறகு செலுத்துங்கள்

கிரெடிட் கார்டுகளுக்கு போட்டியாக இப்போது கிளம்பியிருப்பது கவர்ச்சிகரமான BNPL (Buy Now Pay Later) என்கிற ‘இப்போது வாங்குகள் பிறகு செலுத்துங்கள்’ என்கிற திட்டமாகும். இதை வங்கிகள் மட்டுமல்லாமல் அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே (LazyPay), மொபிக்விக் ஸிப் (MobiKwik Zip), போஸ்ட்பே (PostPe) போன்ற பல நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன. ரெட்ஸீர் (RedSeer) என்கிற ஆலோசனை நிறுவனமானது இந்த ‘பிஎன்பிஎல்’ சந்தையானது இப்போதிருக்கும் 3 பில்லியன் டாலர் பரிவர்த்தனை மதிப்பிலிருந்து 2026 ஆம் ஆண்டில் 45 முதல் 50 பில்லியன் டாலரைத் தொடும் எனக் கணித்திருக்கிறது.

இந்தத் திட்டமானது இன்றைய மில்லெனியல் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் திட்டத்தால் கிரெடிட் கார்டு சந்தை பாதிக்கப்படுமா என்றால் அதற்கான வாய்ப்பு இன்னும் சில ஆண்டுகளுக்கு இல்லை. ஏனெனில் கிரெடிட் கார்டு சந்தையே இன்னும் அதிகமாக ஊடுருவப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 6.5 கோடிதான். இதில் பலர் உபயோகிக்கும் கார்டுக்கான உச்ச வரம்பு மிகவும் குறைவாகும். எனவே கிரெடிட் கார்டோடு பிஎன்பிஎல்லும் சேர்ந்தே இருக்கும். குறைந்த விலையுள்ள பொருள்களை வாங்கி அதற்கானத் தொகையை வட்டியில்லாமல் சுமார் 15 நாட்களுக்குள் செலுத்தும் வசதியை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

கிரெடிட் கார்டு vs பிஎன்பிஎல் கார்டு

கிரெடிட் கார்டுக்கும் பிஎன்பிஎல் கார்டுக்குமான சில வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

1 கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் நிலுவைப் பணத்தை வட்டியில்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் சுமார் 45 நாட்கள் ஆகும். பிஎன்பிஎல்லில் இது 15 நாட்கள் முதல் 35 நாட்கள் ஆகும்.

2 கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதற்கான உச்சவரம்பு பயனளாரின் நிதிநிலைமையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால் பிஎன்பிஎல்லில் இது ரூ.10,000 முதல் ரூ.60,000 வரையாகும்.

3 கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தால் அது பல காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதால் ஒருவருக்கு வழங்கப்படுமா, மறுக்கப்படுமா என்று தெரிவதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம். ஆனால் பிஎன்பிஎல் கார்டுக்கென்று கடினமான தகுதிக் காரணிகள் எதுவுமில்லை என்பதோடு மிக சீக்கிரமாகவே வழங்கப்பட்டுவிடும்.

4 சில கிரெடிட் கார்டுகள் சேர்ப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

5 கிரெடிட் கார்டில் இருக்கும் நிலுவைத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டவில்லையெனில் வட்டி வசூலிக்கப்படும்.

6 இது சுமார் ஆண்டுக்கு சுமார் 30-36 சதவிகிதமாகும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு திட்டத்தின் கீழ் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை ஆனால் திருப்பிச் செலுத்த நீண்ட நாட்கள் ஆகும்பட்சத்தில் ‘தாமதக் கட்டணம்’ என்கிற பெயரில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, ஹெச்டிஎஃப்சி வங்கியானது நிலுவைத் தொகை ரூ.3000க்கு 30 நாட்களுக்கு ரூ.70 மட்டுமே வசூலிக்கிறது.

7 கிரெடிட் கார்டை பலதரப்பட்ட வணிக நிறுவனங்களும் அமைப்புகளும் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் பிஎன்பிஎல் கார்டுகளில் அந்த நெகிழ்வுத் தன்மையும் ஏற்புத் தன்மையும் இல்லை.

8 எனவே ஒருவருக்கு கிரெடிட் கார்ட் வேண்டுமா பிஎன்பிஎல் கார்டு வேண்டுமா என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. ஆனால் இந்த இரண்டுக்குமான ஒற்றுமை ‘இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம்’ என்பதுதான்.

மிகுந்த கவனம் அவசியம்

கடன் அட்டை மூலமான பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது என்பது பொருளாதாரத்தைப் பொருத்தவரை நல்ல செய்தியாக இருந்தாலும் கடனில் வாங்கிய பொருள்களுக்கு அல்லது சேவைக்கான பணத்தை உரிய கால அளவுக்குள் கட்டக்கூடிய நிலையில் எத்தனை நுகர்வோர்கள் இருப்பார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் உரிய காலத்துக்குள் கட்டாவிட்டால் கட்ட வேண்டிய நிலுவைத் தொகையோடு வட்டியும் சேர்ந்து அவர்களை மேலும் ஓர் இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லும்.

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன்பஃபெட், ‘தேவையில்லாத பொருள்களையெல்லாம் நீங்கள் வாங்கினால் உங்களுக்குத் தேவைப்படும் பொருள்களையெல்லாம் ஒரு நாள் விற்க வேண்டி வரும்’ என்பார். எதைப் பயன்படுத்தினாலும் செலவு செய்வதின் மீது அக்கறையோ, கட்டுப்பாடோ, பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் ஒழுங்குமுறையோ இல்லையெனில் இதனால் ஏற்படக்கூடிய சுமையிலிருந்து மீள்வது கடினம் என்பதோடு வாரன் பஃபெட் சொன்னது போல ஒரு நாள் நமக்குத் தேவையான பொருள்களை விற்று கடனை அடைக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். எனவே, கிரெடிட் கார்டுகளையும் பிஎன்பிஎல் வசதியையும் கட்டுப்பாடோடும் ஒழுங்குமுறையோடு உபயோகித்தால் கடன்சுமையிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். இல்லையென்றால், புதைகுழிதான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்