ஏழைகள் ஏற்றம் பெறுவது எப்போது?

By முகம்மது ரியாஸ்

riyas.ma@hindutamil.co.in

இந்தியா உட்பட, உலக நாடுகள் ஜிடிபி வளர்ச்சியை முதன்மைப்படுத்தி, தங்கள் நாட்டின் வளர்ச்சியை பெருமையாக பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த வாரத்தில் வெளியான ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’ , உலகம் எத்தகைய மோசமான ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகக்
கொண்டு இந்த ஆய்வு அறிக்கையை, பிரஞ்சு பொருளாதார அறிஞர்களான லூகாஸ் சான்சல் (தலைமையில்) தாமஸ் பிகெட்டி, இம்மானுவேல் சேய்ஸ், காப்ரியல் ஷுக்மேன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த அறிக்கைக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது துணைவியார் எஸ்தர் டஃப்லோ ஆகியோர் முன்னுரை எழுதியுள்ளனர். இந்த ஆய்வறிக்கை நான்கு வகை ஏற்றத் தாழ்வுகளை கவனப்படுத்துகிறது: வருவாய், சொத்து, பாலினம் மற்றும் கார்பன் உமிழ்வு.

வருவாய் மற்றும் சொத்து ஏற்றத்தாழ்வு

உலகின் மொத்த வருவாயில் 52 சதவீதம், உலக மக்கள் தொகையில் பொருளாதார ரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீத மக்களின் கைகளுக்குச் செல்கிறது. பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களுக்கு உலகின் மொத்த வருவாயில் வெறும் 8.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகின் வருவாய் சார்ந்து நிலவும் ஏற்றத் தாழ்வை விடவும், சொத்து அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் உலகின் மொத்த சொத்தில் வெறும் 2சதவீதம் மட்டுமே உள்ளது. மேல் நிலையில் உள்ள 10 சதவீதம் மக்களிடம் உலகின் மொத்த சொத்தில் 76 சதவீதம் உள்ளது.

வருவாய் மற்றும் சொத்து தொடர்பான ஏற்றத்தாழ்வு விகிதம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உதாரணத்துக்கு ஐரோப்பிய நாடுகளில் அவற்றின் மொத்த வருவாயில் 36 சதவீதம், அவற்றின் மக்கள் தொகையில் பொருளாதார நிலையில் மேல் நிலையில் உள்ளவர்களுக்குச் செல்கிறது. அதுவே, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் மொத்த வருவாயில் 58 சதவீதம் மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் குவிகிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய நிலவரம்

இந்தியாவை மிக ஏழ்மை நிலவும் நாடுகளில் ஒன்றாகவும் மிக மோசமான ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில் ஒன்றாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது. அதிலும், மேல்நிலையில் உள்ள 1 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 22 சதவீதம் செல்கிறது. பொருளாதார ரீதியிலாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது.

பாலின ஏற்றத்தாழ்வு

வருவாய் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 1990-ல் உலகின் மொத்த வருவாயில் பெண்களின் பங்கு 30 சதவீதமாக இருந்தது. தற்போது அது 35 சதவீதத்துக்கு சற்று குறைவான அளவிலே உள்ளது. இது மிகவும் குறைவான வளர்ச்சி என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக அளவில் ஆண் – பெண் இடையிலான வருவாய் ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகமாக நிலவினாலும், நாட்டுக்கு நாடு அந்த விகிதாச்சாரம் வேறுபடுகிறது. சில வளர்ந்த நாடுகளில், அவற்றின் வருவாயில் பெண்களின் பங்கு மேம்பட்ட நிலையில் இருக்கிறது. அதேசமயம், சில பின் தங்கிய நாடுகளில் வருவாயில் பெண்களின் பங்கு முன்பிருந்ததைவிடவும் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த வருவாயில் பெண்களில் பங்கு 18 சதவீதமாகவே உள்ளது. அந்த வகையில் உலகின் பாலின ஏற்றத்தாழ்வு மிக மோசமாக நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இந்த அறிக்கை அடையாளப்படுத்துகிறது.

சூழலியல் ஏற்றத்தாழ்வு

உலகின் வருவாய் மற்றும் சொத்து தொடர்பான ஏற்றத்தாழ்வுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நெருக்கிய தொடர்பு இருக்கிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகின் 50 சதவீத கார்பன் உமிழ்விற்கு உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் காரணமாக உள்ளனர். மீதமுள்ள
மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர், உலகின் மொத்த கார்பன் கார்பன் உமிழ்வில் வெறும் 12 சதவீதம்தான் காரணமாக உள்ளனர். இதில் சிக்கலான விசயம் என்னவென்றால், கார்பன் உமிழ்வு ஏற்றத்தாழ்வை வளர்ந்த நாடுகள் * ஏழைநாடுகள் என்ற ரீதியில் அணுகி விட முடியாது.

உதாரணத்துக்கு, ஐரோப்பாவில் பொருளாதார ரீதியிலாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீதத்தினர் ஆண்டுக்கு தலைக்கு 5 டன் அளவில் கார்பன் உமிழ்வுக்கு காரணமாக இருக்கிறார் என்றால், அது கிழக்கு ஆசியாவில் 3 டன்னாகவும், வட அமெரிக்காவில் 10 டன்னாகவும் உள்ளது. அதேபோல், இந்நாடுகளில் மேல் நிலையில் 10 சதவீதத்தினர் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் அளவும் மாறுபட்டதாக இருக்கிறது.

உதாரணத்துக்கு ஐரோப்பாவில் மேல் நிலையில் 10 சதவீதத்தினரால் ஆண்டுக்கு சராசரியாக தலைக்கு 29 டன் அளவில் கார்பன் வெளியேற்றப்படுகிறது. அது கிழக்கு ஆசியாவில் 39 சதவீதமாகவும் வட அமெரிக்காவில் 73 சதவீதமாகவும் உள்ளது. பணக்கார நாடுகளில் கீழ் நிலையில் உள்ள 50 சதவீதம் மக்கள் மூலம் மிக குறைவான அளவிலே கார்பன் உமிழ்வு நிகழ்கிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

என்ன காரணம்?

1980-க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த நவதாராள பொருளாதாரக் கொள்கைகள்தான் உலகில் ஏற்றத்தாழ்வு அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. உலகின் ஏற்றத்தாழ்வுப் போக்கை, 1820 – 1910, 1910 – 1980, 1980 - 2021 என மூன்று காலகட்டங்களாக பிரிக்கிறது இந்த அறிக்கை. தொழிற்புரட்சி, காலனிய ஆதிக்கம், நிலபிரபுத்துவம் ஆகியவற்றின் காரணமாக 1820 முதல் 1910 வரையில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருந்தது.

1910-க்குப் பிறகு நாடுகளுக்கிடையிலான உறவு புதிய பரிணாமம் கண்டது. மக்கள் நலனை முன்னிறுத்தி சமூக நல அரசுகள் உருவாகின. தொழிலாளர்களுக்கான உரிமைகள் முன்னுரிமைப் பெற்றன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் அரசுகள் கவனம் செலுத்தலாயின. இதன் காரணமாக, இதன் காரணமாக, 1910-க்குப் பிறகு நாடுகளிடையேயான ஏற்றத்தாழ்வில் சற்று நேர்மறை மாற்றம் ஏற்பட்டது. அந்தச் சூழல் 1980 வரை நீடித்தது. அதிலும் குறிப்பாக 1950 -1980 வரையிலான காலகட்டத்தை வளர்ச்சியின் பொற்காலம் என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

1980-க்குப் பிறகு சூழல் மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன. மக்கள் நலன் என்பது பின்னுக்குச் சென்று, நிறுவனங்களின் வளர்ச்சி முதன்மைப்படுத்தப்பட்டது. அவற்றின் காரணமாக உலகின் வளர்ச்சிப் போக்கு மாறியது. சொத்துகளும் வருவாயும் வேகமாக பெருக்கம் அடைந்தது. ஆனால், சமமான அளவில் அல்ல. சில நாடுகள் அதீத வளர்ச்சியையும், சில நாடுகள் பெரும் சரிவையும் எதிர்கொண்டன.

கடந்த 40 ஆண்டுகளில் அரசுகள் வசமுள்ள சொத்துகள் குறைந்து, தனியார் சொத்துகள் அதிகரித்து இருப்பதே தற்போதைய ஏற்றத்தாழ்வு நிலைக்கு அடிப்படைக் காரணம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 40 ஆண்டுகளில் நாடுகள் பொருளாதார ரீதியிலாக வளர்ச்சி அடைந்தன.

ஆனால், அவற்றில் அரசுகள் ஏழைகளாக மாறின. வளர்ந்த நாடுகளின் அரசின் வசம் மிக மிக குறைவான அளவிலே சொத்துக்கள் உள்ளன. இந்தச் சூழல் கரோனா காலகட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. கரோனா நெருக்கடியிலிருந்து மீள பல நாடுகளின் அரசுகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் கடன் பெற்றன. அரசுகள் வசம் குறைவான சொத்துகள் இருப்பது – பருவநிலை நெருக்கடி போல - இந்நூற்றாண்டின் மிகப் பெரும் சவால் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

என்ன தீர்வு?

வருவாயையும் சொத்தையும் முறையாக பகிர்ந்தளிக்கும் வகையில் சொத்து வரிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, சொத்து அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் வரி வசூல் (Progressive Wealth Tax) செய்வதன் மூலம் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது.

சென்ற நூற்றாண்டுகளில் தனிநபர் சொத்து என்பது முதன்மையாக நிலங்களையும், வீடுகளையும் மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது தனிநபர் சொத்து என்பது ரியல் எஸ்டேட்டைத் தாண்டி வேறு தளங்களுக்குச் - நிறுவனத்தில் பங்குகள், பத்திரங்கள் - சென்றுள்ளது. ஆனால், இவற்றை உள்ளடக்கி, அவற்றின் அதிகரிப்புக்கு ஏற்ப வரி வசூல் செய்யும் நடைமுறை பெரும்பாலான நாடுகளில் இல்லை.

மாறாக, ஒரு அளவிலான வரியே விகிதமே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ரூ.10 கோடி மதிப்பில் சொத்துகள் கொண்டிருப்பவரிடமும், ரூ.1000 கோடி சொத்துகள் கொண்டிருப்பவரிடமும் ஒரே விகிதத்தில் வரி வசூலிக்கப்படுகிறது.
இதனால், சொத்து வரி மூலமான வரி வருவாய் மிக குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் சொத்து வரி மூலமான வரி
வருவாய் 2-3 சதவீதம் வரையிலும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் அது 1 சதவீதம் அளவிலும், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் அது 0.5 சதவீதம் அளவிலும் உள்ளது. இதனால், பில்லியனர்கள் சொத்துகளை குவித்துக்கொண்டே செல்கிறார்கள். பொருளாதாரரீதியில் கீழ் நிலையில் உள்ளவர்கள் அதே நிலையிலே தொடர்கிறார்கள்.

உலகில் ஏற்றத்தாழ்வு என்பது இயற்கையானது என்றும், அது தவிர்க்க முடியாது என்றும் விவாதங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. இந்த அறிக்கை உட்பட, இதுவரையில் ஏற்றத்தாழ்வு தொடர்பான அறிக்கைகள் சொல்வது ஒன்றுதான்: ஏற்றத்தாழ்வு என்பது இயற்கையானது அல்ல. அது அரசியல் கொள்கைகளின் விளைவுகள். சரியான கொள்கைகள் மூலம் ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும்!

அதானி குடும்பத்தின் ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடி

2021-ம் ஆண்டுக்கான இந்திய செல்வந்தர்கள் பட்டியலை ஐஐஎஃப்எல் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்பைக்கொண்டு தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. முகேஷ் அம்பானியின் குடும்பம் 2020-ல் நாளொன்றுக்கு ரூ.163 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில் அதானி குடும்பம் உள்ளது. 2019-ம் ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்த அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு, 2020-ம் ஆண்டில் ரூ.5.50 லட்சம் கோடியாக உயர்ந்தது.

அந்தவகையில் சென்ற ஆண்டில் அதானி குடும்பம் நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடார் குடும்பம் உள்ளது. சென்ற ஆண்டில் ஷிவ் நாடார் குடும்பத்தின் சொத்து மதிப்பு 67 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சம் கோடியாக ஆனது. நாளொன்றுக்கு அக்குடும்பம் ஈட்டிய வருவாய் ரூ.260 கோடி. நான்காவது இடத்தில் உள்ள எஸ் பி இந்துஜா குடும்பம் சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.209 கோடியும், ஐந்தாம் இடத்தில் உள்ள எல் என் மிட்டல் குடும்பம் நாளொன்றுக்கு ரூ.310 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்